பொள்ளாச்சி, அக்.12-
செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கின்ற பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதிகளில் உள்ள சின்னார்பதி, நவமலை, உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கின்ற பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு கழிப்பிடம் வசதி மற்றும் தெருவிளக்கு, மின் இணைப்பு, தார்சாலை, சுத்தமான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

வனவிலங்குகள் கிராமத்தில் உள்ளே வர முடியாத அளவிற்கு பெரிய தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும். செட்டில்மென்ட் பகுதிகளில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வியாழனன்று கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோபாவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேரூராட்சி செயல் அலுவலர் ம.சிவசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மேற்கூறிய கோரிக்கைகளை அனைத்தையும் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். குறிப்பாக, செட்டில்மென்ட் பகுதியான பந்தகாலம் மண் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் வசதிகள் மற்றும் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்திற்கு ஒரு வாரத்திற்குள் மின்இணைப்பு வசதி, சின்னார்பதி செட்டில்மென்ட் பகுதிகளில் 4 தெருவிளக்குகளை அதிகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், ரூ.3.50,000 மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு, கோட்டூர் பேரூராட்சி மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு 10 நாளுக்குள் பணிகள் முடிவடையும். வனத்துறை அனுமதி பெற்று தார் சாலை வசதிகள் போன்றவை அமைத்துத் தரப்படும். இதேபோல், செல்லப்புள்ளகரடுபதியில் ரூ.17.75.000 மதிப்பீட்டில் தார் சாலை வசதிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு ஓரிரு மாதத்தில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என உறுதியளித்தார்.முன்னதாக, இப்போராட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஆனைமலை ஒன்றியத் தலைவர் ஏ.அம்மாசை தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் ஏ.துரைசாமி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம், மாவட்டக் குழு உறுப்பினர் மல்லிகா, சுந்தர்ராஜ், வெள்ளியங்கிரி, மாகாளி, பரமசிவம், குருசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply