மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடைபிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று வாஷிங்டனில் வெயிலடித்தால் வந்தவாசியில் நிழல் தேடும் அளவுக்கு ஆயிரக்கணக்கான் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சர்வதேச நிதி நிறுவனமும், உலகவங்கியும், பன்னாட்டு நிறுவனங்களும் எடுக்கும் முடிவுகள் நம் தெருவரை வந்து (சில நேரங்களில் வீட்டுக்குள்ளும் வந்து) தாக்குகின்றன.

உலகமயமும், நவ தாராளமயமும், தனியார்மயமும் நம்மை பல வலைகளுக்குள் சிக்கவைத்துள்ளன. அரசாங்கம் தன் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்கும் பொதுப் பணிகளிக்கு செலவிடுவதைக் குறைக்க வேண்டும். மானியங்களை வெட்ட வேண்டும் என்கிற நிபந்தனைகள் இந்த நிறுவனங்களிலிருந்து வருகின்றன.

அதைத்தான் அரசுகள் கொள்கை முடிவுகளாக்குகின்றன. ஏன் இது இப்படி என்பது அரசியல்-பொருளாதாரம் தொடர்பான விஷயம். அதற்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம்.

ஆனால் ஒரு பத்திரிக்கையாளர் இந்தச் சிலந்தி வலைத் தொடர்பைப் பற்றிய தெளிவு பெறும்போது அவர் எழுதும் செய்தியும் கட்டுரையும் ஆழம் பெறுகிறது. சாமானிய மக்களிடையே ஒரு சரியான பார்வையை உருவாக்குகிறது.

ரேஷன் பொருட்களைக் குறைத்து விட்டனர், நியாயவிலைக் கடைகளின் முன் எப்போதும் நீண்ட மக்கள் வரிசை என்பது ஒரு செய்திதான். ஆனால் அது விரிவும் ஆழமும் பெறுவது அதை எழுதும் பத்திரிக்கையாளார் அந்தப் பிரச்சினையின் பின்னணியை நூல் பிடித்துச் செல்லும் போது சர்வதேச நிதி நிறுவனங்களின் நிபந்தனைகள் வரை செல்லும் அந்த நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும் அரசின் கொள்கைக்குக் கொண்டு செல்லும். அப்படிப்பட்ட கொள்கையை அமுல்படுத்தத் துணியும் அரசு எந்தக் கட்சியால் நடத்தப் படுகிறது என்று கேள்வி எழும். அந்தக் கட்சி யார் பக்கம் நிற்கிறது என்பது தெளிவாகும்.

இது மக்களுக்குப் புரிந்துவிட்டால் பல மாயைகள் விலகும். இந்த மாயவிலக்கத்தைச் செய்ய முனையும் பத்திரிக்கை நடுநிலை என்று வேஷம் போடாமல் உண்மையைச் சொல்லும். இப்படிப்பட்ட உண்மைகளைச் செல்லும் பத்திரிக்கைகள் இன்று குறைந்து வருவதுதான் சோகமான உண்மை. அரசு கொடுக்கும் விளம்பரங்களும், தனியார் நிறுவன விளம்பரங்களுமே வருவாயைப் பெருக்கும், லாபத்தைக் கூட்டும் என்கிற நிலை இருக்கும் போது செய்தி
பலநேரங்களில் ரேஷன் கடை ஊழியர்களின் ஊழல் என்பதோடு நின்று விடும்.

  • Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: