கோவை, அக்.12-
தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், காலம் கடத்தாமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படியான போனசை உடனே வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒப்பந்த மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கும் பாரபட்சமின்றி சமஅளவு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு காரணங்களை காட்டி சில தொழில் நிறுவனங்கள் இதுவரை போனஸ் பேச்சுவார்த்தையே தொடங்காத நிலை உள்ளது. வருடம் முழுவதும் உழைக்கும் தொழிலாளிக்கு நிறுவனங்கள் அளிக்கும் போனஸ் என்பது சலுகையோ, பரிசுத்தொகையோ அல்ல. மாறாக தொழிலாளியின் கொடுபடாத சம்பளமே போனஸ். ஆகவே, பண்டிகைக்கான நாட்கள் நெருங்கி வருகிற நிலையில் உடனடியாக பஞ்சாலை துவங்கி இன்ஜினியரிங், வணிக நிறுவனங்கள் அனைத்தும் போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு, சட்டப்படியான போனஸ் வழங்காத நிறுவனங்களின் மீது சிஐடியு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

மேலும், ஆட்சியாளர்களின் கொள்கைகளால் தொழில் நெருக்கடி, பாதிப்பு ஏற்படும் நேரத்தில் தொழில்முனைவோர்கள் அரசிடம் முறையிட்டு தங்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஆனால், அரசின் நடவடிக்கையால் தொழிலாளி பாதிக்கப்படும்போது இவர்களுக்கான பாதிப்புகள் குறித்து தொழில்முனைவோர்கள் அரசிடம் கோரிக்கை வைப்பதற்கு நாதியில்லாத நிலை உள்ளது.குறிப்பாக, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளை காரணம்காட்டி தொழிலாளிக்கு சட்டப்படி வழங்க வேண்டிய போனஸ் தொகையை எவ்விதத்திலும் குறைக்கக்கூடாது. பண்டிகை காலத்தில் உழைப்பாளிகளுக்கு கூடுதல் செலவு உள்ள நிலையில் சட்டப்படியான குறைந்தபட்ச போனசாக 15 சதவிதமும், அதிகபட்சமாக 35 சதவித போனசும் லாபத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும். நிறுவனத்தின் லாப நட்ட கணக்கை முறையாக சமர்ப்பித்து தொழில்நிறுவனங்கள், வியாபார, வணிக நிறுவனங்கள் தொழிலாளிக்கான உரிய போனஸை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply