திமுகவின் குடும்ப அரசியலைத் தாக்கிப் பேசிய பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் ”அண்ணா மீண்டும் உயிரோடு மீண்டு வந்தால், அவர் பாரதிய ஜனதா கட்சியில்தான் சேருவார், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்ல” என்று முழங்கினார். பாஜகவால் மட்டுமே ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் அளித்த  ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சரரான நைனார் நாகேந்திரனின் தலைமையில் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களும் பாஜகவில் சேருகின்ற நிகழ்வினையொட்டி பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பாஜக தலைவர் பேசினார். ஜவஹர் மைதானத்தில் கூடியிருந்த கூட்டத்தில் நாகேந்திரனைப் பார்த்து, “பாஜக மூலமாக உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் தமிழ்நாட்டில் கிடைக்கும்” என்று கூறினார்.

கருணாநிதி அவரோடு இல்லாத நிலைமையில், திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியோடு உறவாடி வருவதாக ராவ் குற்றம் சாட்டினார். ”உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் என்று ராகுல் காந்தி தொடர்ந்து தோல்வி அடைந்திருப்பதை ஸ்டாலின் மறந்து விடக் கூடாது” என்றார். 1967 முதல் 2017 வரையிலும் ஆட்சியிலிருந்து வரும் திமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகள் ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர், ”யார் அல்லது எந்தக் கட்சி திருவள்ளுவரின் கருத்துக்களைப் பின்பற்றி வருகிறது என்பதை ஸ்டாலின் பார்க்க வேண்டும்” என்று கூறினார். மேலும் பாஜகவும், அந்தக் கட்சியில் இருக்கும் ஊழலற்ற தலைவர்களும்தான் திருக்குறளைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

2001 முதல் 2006 வரையிலும் அதிமுக  அமைச்சரவையில் அமைச்சராக இருந்த நாகேந்திரன் நிகழ்ச்சியில் பேசிய போது, “நான் மோடியிடம் எம்ஜிஆரைப் பார்க்கிறேன்” என்றார். பாஜகவில் தான் ஏன் சேர்ந்தேன் என்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது, எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குப் பிறகு யாரைப் பின்பற்றுவது என்பது அதிமுகவிற்குத் தெரியாமல் போய் விட்டது. ஆனாலும் அந்தக் கட்சியைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்றார். எம்ஜிஆரைத் தீர்க்கதரிசி என்று கூறிய முன்னாள் அமைச்சர், “1972இல் அ இஅதிமுகவை புரட்சித் தலைவர் ஆரம்பித்த போது, அவர் இரட்டை இலை கட்சியின் சின்னமாகக் கிடைப்பதற்கு முன்னதாக, தாமரைக் கொடியைத்தான் முதலில் ஏற்றினார். இரட்டை இலைக்குப் பிறட்கு தாமரைதான் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என்பதை அவர் அறிந்திருந்தார் என்றும் கூறினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட மற்ற தலைவர்களும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்த போதும், அஇஅதிமுகவைப் பற்றி மேலோட்டமாகப் பேசினார்கள்.

கூட்டத்தில் கண்டவை

கூட்டத்தில் பேசிய அனைவரும் தமிழ்நாட்டில் காவி மலரும் என்று பேசினாலும், மேடையின் மேல் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய நியான் தாமரையும், மேடையின் இரு புறமும் வைக்கப்பட்டிருந்த சிறிய தாமரைகளும் ஊதா நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன.

முரளிதர் ராவ் மேடைக்கு வந்த போது அங்கிருந்த இசைக்குழுவினர் அஇஅதிமுக கட்சிக் கூட்டங்களில் பாடப்படும் நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் பாடலான  “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை” பாடலை இசைத்தனர். ஆனால் ”நான் செல்லுகின்ற பாதை நரேந்திர மோடி காட்டும் பாதை” என்று அடுத்து பாடப்பட்ட வரிகள் கூட்டத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தப் பாடல் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்களால் பாராட்டப்பட்ட போதிலும், கூட்டம் முழுவதும் அமைதியில் ஆழ்ந்தது. ”பாஜகவில் அனைவருமே மோடியின் குழந்தைகள்தான்” என்று தமிழிசை பேசும் போது கூறினார். அந்த சிறிய மைதானத்தின் பெரும் பகுதியில் கூடியிருந்த சுமார் 5000 பேர் கொண்ட கூட்டம், பின்னர் சிறிது சிறிதாகக் குறையத் துவங்கியது. கைதட்டலையும், சிரிப்பையும் எதிர்பார்த்த தலைவர்களின் பேச்சுக்களுக்கு ஏற்றவாறு எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாத அந்தக் கூட்டம் பெரும்பாலான நேரம் ஒருவித அமைதியிலேயே இருந்தது.

மாலை ஆறரை மணிக்கே கூட்டம் துவங்கிய போதும், வந்திருந்தவர்களை ஒருங்கிணைப்பதற்கே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. 7.40 மணி அளவில் கூட்டம் கலையத் துவங்கியது. 8.30 மணிக்கு பொன்,ராதாகிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த கூட்டத்தில் ஒரு பெண் கூட காணப்படவில்லை என்பதோடு பாதிக்கும் மேல் மைதானம் காலியாகி இருந்தது.

விக்கிரமசிங்கபுரம், களக்காடு போன்ற பகுதிகளில் இருந்து வேன்கள் மூலம் ஆண்களையும், பெண்களையும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைக் கட்சி செய்திருந்தது. ”விக்கிரமசிங்கபுரத்திலிருந்து எட்டு வேன்களில் ஆட்களை அழைத்து வந்திருக்கிறேன். அவர்களுக்கான உணவும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறோம்” என்று கூறிய அமைப்பாளர், அழைத்து வந்தவர்களுக்கு பணமோ, மதுவோ மற்ற கட்சிகளைப் போல நாங்கள் வழங்குவதில்லை என்று கூறினார்.

https://timesofindia.indiatimes.com/city/madurai/anna-wouldve-joined-bjp-had-he-been-alive/articleshow/61028792.cms

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு,
விருதுநகர்.

Leave A Reply

%d bloggers like this: