மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 2016-17ஆம் ஆண்டுகளில் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 6667. இதில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 1982 பேர். தமிழ்நாட்டில் 200 பேர் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இந்த கால அளவில் கேரளத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 0.விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலையை உரிய நேரத்தில் வழங்கியும், உற்பத்திப் பொருள்களுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தியும், விவசாய விளைபொருள்களுக்கான சந்தையை உறுதிப்படுத்தியும் கேரளம் விவசாயிகளைப் பாதுகாக்கிறது.

அதே வேளையில் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளை சுட்டுக் கொன்றது மத்தியப் பிரதேச பாஜக அரசு.

தேசிய அளவில் ஆண்டுதோறும் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக தேசியக் குற்றப் பதிவு அலுவலகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் உள்ள சராசரிக் கணக்காகும் இது. 2015-16 ஆம் ஆண்டில் கேரளத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 50. 2015ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் மட்டும் 3030 விவசாயிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இது நாட்டின் மொத்த விவசாயிகளின் தற்கொலையில் 37.8 சதவீதமாகும்.மகாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூரை உள்ளடக்கிய விதர்பா பகுதியில் தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2015 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 581 ஆகும். உத்தரப்பிரதேசத்தில் 145 பேர் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். ராஜஸ்தானில் 3 பேர், குஜராத்தில் 50 பேர் என்று தேசியக் குற்றப்பதிவு அலுவலகக் கணக்குச் சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசாங்கப் பதிவுகளில் விவசாயிகளின் தற்கொலை குறித்து தெளிவான கணக்குகள்கூட இல்லையென்று பல்வேறு ஆய்வுக் குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2015ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் விவசாயக் கடன், விவசாய நஷ்டம் ஆகியவற்றின் விளைவாக 12,062 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
நாட்டில் 80 சதவீத விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களாவார்கள்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக உற்பத்திக் குறைவு, விளைச்சலில் ஏற்படும் நஷ்டம் ஆகியவை மூலம் நெருக்கடிக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உதவுவதற்கு மத்திய அரசோ, மாநில அரசுகளோ முன்வருவதில்லை என்பதே விவசாயிகளின் தற்கொலை தொடர்கதை ஆவதற்கான காரணம்.

கேரள இடதுசாரி அரசு வழிகாட்டுகிறது
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு விவசாயக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் தேக்கம் ஏற்பட்டால் ஜப்தி செய்வது, விவசாய நிலத்தை அபகரிப்பது, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறச் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டது.திருவிழாக் காலங்களில் விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து சந்தைப்படுத்தியது, ஹோர்டி கோர்ப், விஎஃப்பிஸிகே முதலான அரசு முகவர்கள் மூலமாக விற்பனை செய்து மாநில உற்பத்தியாளர்களுக்கு சாதாரண விலையைவிட 20 சதவீதம் தொகை அதிகம் வழங்கி கொள்முதல் செய்து விவசாயிகள் பாதுகாக்கப்பட்டார்கள்.

மேலும் 60 வயதைக்கடந்த விவசாயிகளுக்கு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இடுக்கி, வயநாடு, காசர்கோடு போன்ற விவசாய பிரதேசங்களில் மாநில அரசு சிறப்புக் கவனம் செலுத்திவருகிறது.

Leave A Reply