===க. பழனித்துரை===
மக்களாட்சி என்பது உலகத்தில் இன்று 80%  மக்களிடம் சென்றுவிட்டது. கடந்த 17 ஆண்டுகளில் தான் இவ்வளவு வேகமாக சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் நிகழ்வு உலகத்தில் நடந்துள்ளது. இது பிரமிக்கத்தக்க சமூக மாற்றம் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. இன்று மக்களாட்சி எவ்வளவு குழப்பங்களோடு செயல்பட்டாலும் அதை நிராகரிப்போர் உலகத்தில் எவரும் இல்லை. மக்களாட்சியில் மாற்றம் மற்றும் சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்வார்களேயன்றி மக்களாட்சி வேண்டாம் என்று யாரும் எங்கும் கேட்பது இல்லை.

அதே நேரத்தில் மக்களாட்சி நடைபெறுகின்ற நாடுகள் பலவற்றில் நிறைய தவறுகளோடும் குழப்பங்களோடும் ஆட்சி நடைபெறும்போது பல கேள்விகள் மக்களிடம் எழுகின்றன. அதனைச் சரி செய்வதும் சீர்திருத்துவதும் தான் இதற்கு ஒரே வழி. எந்த மாற்றமும், சீர்திருத்தமும் மக்களாட்சியில் மக்களின் பங்கேற்புடன் நடைபெற வேண்டும். மக்களாட்சி அதன் முழு மூலக்கூறுகளுடன் நடைபெறும் நாடு என்று உலகத்தில் இல்லை.

உலகத்தில் அதிகபட்சம் மக்களாட்சிக் கூறுகள் உள்ள நாடுகள் சில, குறைந்தபட்ச மூலக்கூறுகளைக் கொண்ட நாடுகள் பல. தேர்தல் மட்டுமே ஒரு நாடு நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அரசாள அனுமதிப்பது என்ற நிகழ்வுகளையே செய்து கொண்டிருந்தால் அந்த நாடு குறைந்தபட்ச மக்களாட்சி நாடாக கருதப்படுகிறது. இவைகளைத் தாண்டி சமத்துவத்தை ஏற்படுத்துவதில், நீதியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிலை நாட்டுவதில், நேர்மையை ஆளுகையில் மற்றும் நிர்வாகத்தில் கடைப்பிடிப்பதில், அடிப்படை உரிமைகளை மக்களுக்குத் தருவதில் ஒரு நாடு முனைப்புடன் செயல்படுமேயானால் அந்த நாடு அதிகபட்ச மக்களாட்சி மூலக்கூறுகள் கொண்ட நாடு என வகைப்படுத்தப்படுகிறது.

அந்த நாடுகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே உலகத்தில் உள்ளது என்பதனை நாம் உணர வேண்டும். இதற்கு மிக முக்கியமாக ஒரு நாடு எப்படி பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதோ அதே அளவு மக்களாட்சியை வளர்ப்பதற்கும், நிலைப்படுத்துவதற்கும் முனைப்புடன் செயல்பட வேண்டும். இந்தச் செயல்பாடுகளை அரசாங்கம் மட்டுமே செய்வதற்கு இயலாது.இதற்கு அரசியல் கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. இன்று பல நாடுகளில் ஜனநாயகப்படுத்தும் பணி என்பது போராட்டங்களின் மூலமாகவே நடைபெற்று வருகின்றது. இந்த மக்களாட்சியைச் சீர்திருத்துவதிலும், விரிவுபடுத்துவதிலும் மிகப்பெரிய பங்கு மக்களுக்கும் உள்ளது. எனவே மக்களைத் தயார் செய்வதுதான் மக்களாட்சிக்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கையாகும். அந்த நிலையில் நம் மக்களாட்சி என்பது ஒரு அடிப்படை கூறில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. அதைக் கண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

வாக்குகள் என்பது தன் கையில் இருக்கும் துருப்புச் சீட்டு அதை அவ்வளவு எளிதாக கட்சிகள் பெற்றுவிட முடியாது என்பதை தேர்தல்கள் தோறும் நிரூபித்து வருகின்றனர் வாக்காளர்கள். மக்கள் அரசியல் கட்சிகளை மிரட்டி வைத்திருக்கின்றனர். தங்களின் தேர்தல் செயல்பாடுகளாலேயே ஆட்சியில் இருப்பவர் எவரும் நான்தான் அடுத்த முறையும், என்னை யாரும் அசைக்க முடியாது என்று கூற முடியாது. அந்த அளவிற்கு வாக்குச் சீட்டின் வலிமையைத் தெரிந்து கொண்டவர்கள் நம் பொதுமக்கள். இன்று பலர் நினைக்கின்றனர் சின்னத்தை மீட்டெடுத்தால், சின்னம் வாக்குகளைப் பெற்றுத்தந்துவிடும் என்று கருதுகின்றனர். அதே சின்னத்தை பெரும் ஆளுமைகள் கையாண்டபோதும் தோல்விகளைச் சந்தித்த வரலாறு நம்மிடம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. மக்கள் குழப்பம் இல்லாமல் முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள், நம் நாட்டில் அரசியல் கட்சிகள் தான் குழம்பி நிற்கின்றன.

மக்கள் ஒருபோதும் குழம்பி இருந்தது கிடையாது. ஆனால் அரசியலில் நடக்கும் குழப்பங்களை அமைதியாக வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சமயம் வரும்போது யார் யாருக்கு அரசியலிலிருந்து விடுதலை தருவது, யார் யாரை வீட்டுக்கு அனுப்புவது என்பதை தெள்ளத்தெளிவாக முடிவெடுத்துச் செய்து முடிப்பார்கள். அவர்கள் செயல்படும் நேரம் என்பது தேர்தல் சமயத்தில் தான். மேற்கத்திய நாடுகளைப்போல் நம் மக்களுக்கு நேரம் கிடைப்பதில்லை அரசியல் பணியாற்றுவதற்கு. ஏனென்றால் நம் நாட்டு ஏழை மக்கள் அன்றாடம் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு உழைத்திடவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. அரசியல் செயல்பாட்டிற்கு நேரம் இல்லாத காரணத்தால் தேர்தல் வரை பொறுமை காத்து தேர்தலில் திசை காட்டிவிடுவார்கள். நேரம் வரும்போதெல்லாம் குழம்பி நிற்கும் நம் அரசியல் தலைவர்களுக்கு தெளிவு பிறக்கச் செயல்படுபவர்கள் நம் மக்கள். இன்று மக்கள் எதிர்பார்ப்பது அரசியல் தலைவர்களிடம் புதிய பார்வையை, புதிய திசையை, புதிய செயல்பாட்டை. இந்தச் சூழல் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நிலவுகிறது. நீண்ட நாட்கள் வல்லுநர்கள் நினைத்தார்கள் இந்திய மக்களுக்கு மக்களாட்சி பற்றிய புரிதல் இல்லை என்று.

தலைவர்களை நம்பித்தான் இந்திய தேசம் நிற்கிறது என்று எழுதிவந்தனர். ஆனால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, அது முடிந்து தேர்தல் வந்தபோது காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மக்கள் ஓரே குரலில் மக்களாட்சி வேண்டும் எதேச்சதிகாரம் எங்களுக்குத் தேவையில்லை என்று “இரும்பு மனுஷி” இந்திராவை தூக்கி எறிந்து சாதனை படைத்தனர். இந்திரா காந்தியைத் தோற்கடித்து வெற்றி கண்டவர்கள். மிகக் குறுகிய காலத்திலேயே நீயா? நானா? என்ற போட்டியை நடத்தி யார் பெரியவர் என்பதை நிரூபிக்க ஆட்சி நடத்தினார்கள் ஜனதாக் கட்சித்தலைவர்கள். அதனைக் கண்டு எரிச்சலின் வெளிப்பாடாக மீண்டும் இந்திராவையே தேர்ந்தெடுத்தனர் மக்கள்.

ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு இந்தியாவில் ஒற்றைக் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பது என்ற சூழல் மாறி கட்சிகளின் கூட்டணி என்பது உருவாகி, அதற்கும் மாநிலத்திலிருந்து வந்தவர்கள் தலைமை தாங்குவது என்ற சூழல் வந்தது. அதன் பிறகு இனிமேல் இந்தியாவில் மீண்டும் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பது இயலாத காரியம் என்ற சூழலும் உருவானது. இனிமேல் கூட்டுத்தலைமைதான், மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் தேசியக் கட்சிகளால் ஆட்சியைத் தனித்துப் பிடிக்க முடியாது என்று எண்ணத் துவங்கிவிட்டனர். இந்தச் சூழலில் மாநிலக் கட்சித்தலைவர்கள், சாதிக்கட்சித் தலைவர்கள் அவரவர் வைத்திருக்கும் வாக்கு வங்கிகளின் மூலம் பிரதிநிதிகளைக் கொண்டு வந்துவிடலாம் என்று எண்ணி ஆட்சியில் இருக்கும்போது தவறுகளைச் செய்த கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் மரண அடி கொடுத்தனர்.இந்திய மக்கள் சென்ற தேர்தலில் நரேந்திரமோடியைத் தேர்ந்தெடுத்து. நரேந்திர மோடி வளர்ச்சி, மேம்பாடு, புதிய இந்தியா என்பதை மக்கள் மத்தியில் பதிய வைத்தார் தன் பேச்சுத் திறமையாலே. வந்தவுடன் மக்கள் அவரைத் தொடர்ந்து அமைதியாகக் கண்காணித்து வருகிறார்கள். மிகப்பெரிய மாற்றங்களைச் செய்து தங்களுக்கு நன்மைகளைக் கொண்டுவரப் போகிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் எல்லாத்தரப்பு மக்களும், குறிப்பாக ஏழைகளும் நம்பிக்கையில் இருந்தனர். தொடர்ந்து தங்களுக்கு என்னவிதமான வசதிகள் புதிய ஆட்சியில் கிடைத்தன, யார் யார் பலன்களை அனுபவிக்கின்றனர் என்பதைப் பார்த்து வருகின்றனர்.

கவர்ச்சியான பேச்சுக்கள் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுத்தரலாம், மற்ற நேரத்தில் தாங்கள் செய்கின்ற பணிகள் மட்டுமே மக்களிடம் வாக்கு வாங்கி தரும். அந்த வகையில் இப்போது மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை கூர்ந்து கவனித்து வருகின்றனர். இவர் எடுக்கும் நடவடிக்கைகளால் ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்றால் ஏழைகள் அடுத்த தேர்தலில் தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்.

திறமையாக பேசுவதாலேயே மட்டும் ஒருவர் வெற்றிபெற முடியாது, கவர்ச்சியால் மட்டுமே ஒருவர் வெற்றி பெற முடியாது என்பதைக் கடந்தகாலங்களில் நாம் பார்த்துவந்துள்ளோம். இந்திய நாட்டு ஏழைமக்கள் தனக்கு இவர் என்ன கொண்டுவந்தார் எனக் கணக்கிட்டு யாரைக் கொண்டுவர வேண்டும், யாரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பார்கள். பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என எண்ணி செயல்பட்டால் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

எனவே இந்தச் சூழலை மாற்ற இன்று செய்ய வேண்டிய வேலை என்பது புதுத்திசையை நோக்கி நம் அரசியலை நகர்த்தவேண்டும். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகாலமாக சித்தாந்த ரீதியிலான, கொள்கை ரீதியிலான அரசியல் செயல்பாடுகள் களத்தில் இல்லை. புதிதாக வரும் இளைஞர்களும், பெண்களும் புதியவைகளை எதிர்பார்த்து நிற்கின்றனர். அதை நோக்கி நம் தலைவர்கள் அரசியலை நகர்த்த வேண்டும். சூழல்படுத்துதல் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று இன்றைய அரசியல் சூழலில்.

Leave A Reply