பீடம் தெரியாமல் சாமியாடச் சென்ற பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கும்பல்

”அறிவாளிகளின் இடத்தில் அறிவற்றவர்கள் வந்து என்ன செய்கிறார்கள்?”

“கேரளத்தின் வீதிகளில் குறுக்கும் மறுக்கும் நடக்கிற இந்த பஃபூன்களைப் பார்த்து கேரளாவே சிரிக்கிறது”

’மக்களை பாதுகாக்கும் ஊர்வலம்’ (ஜன ரட்சக யாத்திரா) என்ற பெயரில் மிகப் பெரும் திட்டத்தோடும், கடும் விளம்பரங்களோடும் கேரளாவில் காலடி வைக்கத் துணிந்த பிஜேபியினருக்கும், ஆர்.எஸ்.எஸ்.கும்பலுக்கும் என்ன நேர்ந்தது என்பதை இந்த இரு நையாண்டிகளே ஓரளவுக்கு புரிய வைத்து விடுகின்றன.

கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்த காவிக்கும்பல் தங்கள் நடவடிக்கைகளைத் தீவீரப்படுத்தி வருகிறது. மே.வங்கத்தில் மம்தாவின் வழியாக நடத்தி, அதைச் சாதித்து விட்டதாக கருதிக்கொண்டு இருக்கிறது. திரிபுராவில் திரிணாமுல் எம்பிக்களை விலைக்கு வாங்கியதோடு, அமைதியாயிருந்த திரிபுராவில் இப்போது பிரிவினைவாதக் குரல்களை கிளப்பி விட்டு கலகம் செய்யத் தூண்டிக் கொண்டு இருக்கிறது. அடுத்து கேரளாவில், பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டி ‘சிவப்புப் பயங்கரம்’ என கம்யூனிஸ்டுகளை அறிவித்து இந்த ‘மக்களைப் பாதுகாக்கும் யாத்ராவை’ துவக்கி இருக்கிறது.

வேறு எந்த கட்சிகளையும், இயக்கங்களையும் விட கம்யூனிஸ்டுகளை குறிவைப்பதற்கு காவிக்கும்பலுக்கு இயல்பான காரணங்களும், பின்னணியும் உண்டு. காவிக்கும்பலின் அஜெண்டாவை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள். காவிக்கும்பலின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். காவிக்கும்பலுக்கு அறவே இல்லாத நேர்மையும், உண்மையும், ஒழுக்கமும், பகுத்தறிவும், இலட்சியங்களும், தியாகங்களும் கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள். காவிக்கும்பலோடு கொஞ்சம் கூட அனுசரித்துப் போகாதவர்கள் கம்யூனிஸ்டுகள்.

இந்தியாவில் காவிக்கும்பலின் நடவடிக்கைகளை தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்தி வருவது கம்யூனிஸ்ட் இயக்கங்களே. காங்கிரஸ் போன்ற கட்சிகள் பிஜேபியை எதிர்த்தாலும், ஊழல் என்று வரும் போதும், முதலாளித்துவ ஆதரவு கொள்கைகள் என்று வரும்போதும் அவை நிமிர்ந்து நிற்க முடியாமல் போய் விடுகின்றன. அவைகளின் கடந்த காலம் அப்படி பலவீனங்கள் நிறைந்ததாக இருக்கிறது. அவர்கள் பிஜேபிக்கு எதிராக பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறார்கள். இதுதான் இன்றைக்கு காவிக்கும்பலுக்கு பலமாக இருக்கிறது. இந்த பலவீனங்கள் இல்லாமல் காவிக்கும்பலை நிமிர்ந்து நின்று எதிர்க்கும் நேர்மையும், துணிவும் கம்யூனிஸ்ட்களுக்கு மட்டுமே இருக்கின்றன.

இதுதான் பிஜேபி வகையறாக்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் சகிக்க முடியாத ஆத்திரம் தருகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்த தேசத்தின் அரணாகவும், மக்களின் மனசாட்சியாகவும் இருந்து காவிக்கும்பலுக்கு நெருக்கடி கொடுப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தங்கள் அஜெண்டாக்களை நிறைவேற்றுவதற்கு பெரும் தடையாக முன்னிற்பது கம்யூனிஸ்டுகள் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கும் இடங்களில் அவர்களை பலவீனப்படுத்தும் நாச வேலைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டு வருகிறது.

அதற்கு அவர்கள் கேரளாவை இப்போது தேர்ந்தெடுத்தது பெரும் தவறாக அவர்களே ஒப்புக்கொள்ளும்படியாகி விட்டது. ஆத்திரமூட்டி, கலவரம் ஏற்படுத்திட தங்கள் நடைபயணத்தை பயன்படுத்துவதே அவர்களது திட்டமாயிருந்தது. வெறிக்கூச்சல்களாலும் மிரட்டும் கோஷங்களாலும் கேரளாவை ஸ்தம்பிக்கச் செய்து விட முடியும் என நம்பினர். கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஒரு பெரும் யுத்தம் போல சித்தரித்தனர்.

சி.பி.எம் தலைமையிலான கேரளா அரசு, அந்த ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல் மக்களிடம் இந்தக் காவிக்கும்பல அம்பலப்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுத்தது. அதற்கு ஏற்றாற்போல் கேரள மக்களால் ஏற்கனவே ‘நன்கு அறியப்பட்டு இருந்த’ அமித்ஷா நடை பயணத்தைத் துவக்கி வைத்து மூன்று நாட்கள் நாட்கள் நடக்கப் போவதாக அறிவித்தார். கேரள முதலமைச்சரின் சொந்த ஊரான கண்ணுரில், ராஜேஷ்வரா கோவிலில் கும்பிட்டு, பையனூரில் காந்தி சிலைக்கு மாலையணிவித்து ”கம்யூனிஸ்டுகளுக்கு வன்முறை ரத்தத்தில் ஊறி இருக்கிறது” என தன் யாத்திரையைத் துவக்கினார்.

“காந்தியைக் கொன்றவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முகத்திலடித்தாற் போல் சமூக வலைத்தளத்தில் தன் கருத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், அமித்ஷாவை போட்டுப் புரட்டி எடுத்தனர் கேரள மக்கள். ”ஆங்கிலம் மற்றும் பக்த ஊடகங்கள் மட்டுமே இந்த ஜோக்கரைப் பற்றி கதைக்கும். மலையாள ஊடகங்கள் கண்டு கொள்ளாது. அமித்ஷா, உங்கள் தலை உருட்டப்படுவதற்கு தயாராகிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிச் சொல்லி அடித்தனர்.

உபியில் குஜராத்தில் இது போல ஊர்வலம் செல்லும்போது திரட்டப்பட்ட தொண்டர்களும், மக்களும் பெருமளவில் திரள்வார்கள் என்றோ, இருமருங்கிலும் இருந்து மக்கள் இந்த புண்ணியாத்மாக்கள் மீது மலர்களை வீசுவார்கள் என்றோ எதிர்பார்த்திருப்பார் போலும். கருத்துக்களும், நையாண்டிகளும் அழுகிய மூட்டைகளாய் அவர் மீது வீசப்பட்டன. #alavalathyshajiஎன்று போட்டுத் தாக்க ஆரம்பித்தனர். (Alavalathy என்றால் அருவருப்பான என்று அர்த்தம்)

”பணத்தாலும் குண்டாயிசத்தாலும் பெருத்த உடலைக் குறைக்க கேரளாவில் அமித்ஷா நடக்கலாம்”

”கடவுளின் பூமிக்கு வருகிற சாத்தான்களை விரட்டுவோம்”

”அரசியலென்று வந்துவிட்டால் கேரள மக்கள் தங்கள் தந்தையின் பேச்சைக் கூட கேட்க மாட்டார்கள். நீ யாரு அமித்ஷா இங்கு வந்து சத்தம் போடுவதற்கு?”

”கேரளாவை உத்திரப்பிரதேசம் என அமித்ஷா நினைத்துக்கொண்டால் அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றே புரிந்து கொள்ள வேண்டும்”

”இருக்க முடியாமல் ஒரு நாய் எந்தக் குறிக்கோளுமில்லாமல் தெருவில் அலைகிறது”

”நாங்கள் பகுத்தறிபவர்கள். நாங்கள் வளமான வாழ்வுக்காக போராடுவோம். மதத்திற்காக அல்ல”

”அமித்ஷா கேரளாவில் ஒன்றுமே இல்லாத ஒரு ஆள்.”

”குஜராத் கண்ணாடிகளின் வழியே கேரளாவைப் பார்க்காதீர்கள் அமித்ஷா”

”அமித்ஷா உங்கள் அசிங்கமான மதவாத அரசியலால் தெற்கை களங்கப்படுத்த வேண்டாம்”

”கலக விஞ்ஞானி அமித்ஷாவின் பருப்பு கேரளாவில் வேகாது”

இந்த அவமானங்களையும் தாங்கிக்கொண்டும் துடைத்துக்கொண்டும் நடந்த அமித்ஷாவுக்கு தன் பின்னேயும், கூடவேயும் நடந்து வரும் சொற்பமானவர்களைப் பார்த்து பார்த்து புழுங்கிப் போனார். அப்படி வந்தவர்களிலும் பலர் இறக்குமதி செய்யப்பட்ட இந்தி பேசுகிறவர்களாய் இருந்தனர். அதையும் மக்கள் விடவில்லை. பிஜேபி மாநிலத் தலைவர், நடந்து கொண்டிருக்கும் அமித்ஷாவுக்கு இளநீர் கொண்டு வரச் சொல்வதாகவும், அந்த இந்திக்காரர்கள் புரியாமல் ‘கியா, கியா, கியா” என்று சொல்வதாய் ஒரே கியாக்களாய் கிண்டல்கள் பறந்தன.

இதற்கு மேலும் நடந்தால், இருக்கும் மானமும் பறிபோகும் என்று அமித் ஷா சட்டென்று விமானம் பிடித்து டெல்லிக்குப் பறந்து விட்டார். அப்போதும் விடவில்லை. #amittadi என்று விரட்டி விரட்டி அடித்தனர். (Amittadi என்றால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியவன்).

இதைப் பார்த்தாவது, அடுத்து வந்த உத்திரப் பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் சுதாரித்திருக்க வேண்டும். அல்லது “உபியைப் பார்த்து கேரள அரசு ஆட்சி நடத்தட்டும்” என உளறாமலாவது இருந்திருக்க வேண்டும். அவரது மாநிலத்தில், அவரது சொந்த தொகுதியில், கோரக்பூர் மருத்துவமனையில் தொடர்ந்து குழந்தைகள் இறந்து கொண்டு இருக்கும் போது ஒரு முட்டாள் கூட அப்படி பேசி இருக்க மாட்டான். வசமாகச் சிக்கினார் என்று ஆதித்தியாவை அடுத்து வெளு வெளு என்று வெளுக்க ஆரம்பித்தனர்.

“நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு வந்தது போல் யோகி ஆதித்தியநாத் கேரளாவுக்கு வந்ததும் உணர்வார். கேரள அரசு அவரை மருத்துவமனைகளுக்கும், கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று உண்மையான வளர்ச்சியை காட்ட வேண்டும்”

”கேரளாவின் மாட்டுக் கொட்டகை அருகில் கூட அவர்களால் செல்ல முடியாது”

”எங்களுக்கு உபியும், குஜராத்தும் தேவையில்லை. கேரளாவை விட்டு வெளியேறுங்கள்”
”மாட்டு இரட்சக ஊர்வலம் கேரளாவில் செல்லாது என்பதால் மனித இரட்சக ஊர்வலம்”

”தென்னிந்தியாவையே மறந்து போகும்படி ஒரு பாடம் கற்பிப்போம்”

”ஒரு கிரிமினல் பேர்வழியைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தால் இப்படித்தான் நடந்து கொள்வான்”

”பக்தாஸ் என்ன பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் இன்னும் 100 வருடத்திற்கு இங்கு ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது. தப்பித்தவறி வந்துவிட்ட அந்த வயதான மனிதரை மறந்துவிடுங்கள்”

“ரூ.5.30 பைசா கடன் தள்ளுபடி செய்து விவசாயிகளை கேவலப்படுத்தி இருக்கிறீர்கள். அவர்கள் உங்களை உதைக்கப் போகிறார்கள்.”

கருப்புக் கூலிங்கிளாஸ் போட்டு, தொப்பி போட்டு வெயிலை மறைத்துக் கொண்டாலும் யோகி, இந்த தாக்குதல்களால் வெந்து போனார். அவரும் வந்த வழியே சென்று விட்டார்.

தமிழிசையையாவது கூப்பிட்டு ஊர்வலத்தை நடத்த வேண்டிய பரிதாப நிலைக்கு கேரளா பிஜேபி நிலைமை ஆகிவிட்டது. மிச்சமிருக்கும் நாட்களும் எப்படியாவது நடந்து தொலைப்போம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் அவர்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அவர்களது கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டுகளையும், வாட்களையும், பயங்கர ஆயுதங்களையும் வேறு கேரள போலீஸ் கைப்பற்றியிருக்கிறது.

ஆக பீடம் தெரியாமல் சாமியாடி அவமானப்பட்டு நிற்கிறது பிஜேபியும், ஆர்.எஸ்.எஸ்.கும்பலும். மக்களிடம் மொத்தமாய் அம்பலப்பட்டு நிற்கிறது.

சோவியத்துக்குள் நுழைந்த நாஜிப்படையை, உள்ளுக்குள் வர தாராளமாக அனுமதித்து, கடும் பனியில் அவர்களை நடுக்கமுறச் செய்தது போல தங்கள் நையாண்டிகளாலும், வசவுகளாலும், விமர்சனங்களாலும் காவிக்கும்பலை நடுக்கமுற வைத்து விட்டது கேரளா!

Red Salute to Kerala!
Rad salute to Kerala People!!
Red salute to ‘Red Danger’ !!!

Mathava Raj

Leave A Reply

%d bloggers like this: