நொங்கு தின்றவர்களை தப்பிக்க விட்டு அதனை நோண்டி தின்றவர்களை சிக்க வைப்பது போல், தற்போது தமிழக அரசு குட்கா ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருப்பதாக நாடகமாடி வருகிறது.

தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு துறை இரு காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் உதவி ஆணையர்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ள அதிகாரிகள் ஆவர். இதில் ஒருவருக்கு கூட சட்டவிரோதமாக குட்கா விற்க அனுமதி அளிக்கும் அதிகாரம் இல்லாதவர்கள். இவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு கீழ் உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தவர்கள். இவர்களும் குற்றத்தில் தொடர்புடையவர்கள்தான். ஆனால் இங்கே கேள்வி, எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவது ஏன் என்பதுதான்.

வருமானவரித்துறை குட்கா நிறுவன மாதவராஜுவிடம்  கைப்பற்றிய ஆணவத்தில் ஒவ்வொரு மாதமும் சுகாதார அமைச்சர், மத்திய கலால், குற்றப்பிரிவு அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர்கள் என அவரவர் அதிகாரத்திற்கு ஏற்ப லஞ்சம் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ 39.91 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டிருப்பது உறுதி படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் ஏன் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சென்னை காவல் ஆணையர்கள் மீது ஏன் லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நடவடிக்கை என்பது ஊழலை ஒழிப்பதற்கு மாறாக உயர் பதவியில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை பாதுகாக்கவே உதவும்.தமிழகத்தை புறவாசல் வழியாக இயக்கி கொண்டிருக்கும் மத்திய மோடி அரசும் ஊழல் பெருச்சாளிகளை பாதுகாக்க தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. ஏற்கனவே துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நண்பரும், மணல் ஒப்பந்ததாரருமான சேகர் ரெட்டி வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ 131 கோடி ரொக்கமும், 177 கிலோ தங்கமும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் புதியதாக வெளியிடப்பட்ட ரூ 2 ஆயிரம் ரூபாய் நோட்டு சீல் கூட பிரிக்காமல் ரூ 34 கோடி இருந்ததும் தெரிய வந்தது. இதில் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ்விற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளின் தொடர்ச்சி என்ன ஆனது என்பது, மத்திய அரசின் ஆசியோடு இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.. அதே போல் ஆர்.கே.நகர் தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்ற பட்ட ஆவணங்கள், ரொக்கம் அதன் மீதான நடவடிக்கையும் சிதம்பர ரகசியமாக மாறியிருக்கிறது. இந்த நிலையிலேயே தற்போது வாக்கி டாக்கி ஊழலும் வளம் வந்து கொண்டிருக்கிறது. இப்படி தொன்று தொட்டு தொடரும் ஊழல்களில் முதன்மை அமைச்சரில் கீழ்மட்ட அமைச்சர்கள் வரை தொடர்பிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த உத்தமர்கள் ஊழலை ஒழிப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும். ஆகவே குட்கா, வாக்கி டாக்கி உள்ளிட்ட ஊழல்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

Leave A Reply