திருப்பூர், அக்.11-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு புதுமார்கெட் வீதியில் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வரும் சனிக்கிழமை தொடங்கி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்றும், இதனால், வெள்ளிக்கிழமை முதல் கடைவீதிகளில் தீபாவளி விற்பனை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாநகரக் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக குமரன் சாலை பகுதிகளில் பொது மக்கள் தடையின்றி துணி மற்றும் நகைக் கடைகள், இனிப்புக் கடைகளுக்கு செல்லவும், நெரிசல்கள் ஏற்படாத வகையிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாகனங்களை நிறுத்தவதிலும் மாற்றங்களை மேற்கொள்ள மாநகர காவல் துறை ஆலோசித்து வருகிறது. தவிர, குமரன் சாலை, புதுமார்க்கெட் வீதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தவும், கண்காணிப்புக்கோபுரங்கள் அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதுமார்க்கெட் வீதியில் பொது மக்களின் கூட்ட நெரிசலைக் கணக்கில் கொண்டு, வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்து வரும் நாள்களில் திருப்பூர், புதுமார்க்கெட் வீதியில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் வரக்கூடும் என்பதால், அவ்வழியாக பேருந்து இயக்கம் செய்ய இயலாத நிலை ஏற்படும்.

எனவே பொது மக்களின் நலன் கருதியும், வியாபாரம் மற்றும் வணிகர்களின் நலம் கருதியும் பேருந்து இயக்கத்தில் சிறு மாற்றம் வெள்ளிக்கிழமை முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுமார்க்கெட் வீதி வழியாக வெளியேறும் அனைத்து பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்தின் கிழக்குபுற வெளியேறும் வாயில் வழியாக வெளியேறி, பெருமாள் கோயில், காமராஜர் சாலை வழியாக மாநகராட்சி அலுவலகம் சென்று வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply