திருப்பூர், அக்.11 –
திருப்பூரில் செவ்வாயன்று நள்ளிவில் பனியன் தொழிலாளர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை காவல் துறையினர் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஏபி நகர் பகுதியில் செவ்வாயன்று இரவு சுமார் 1 மணியளவில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அஜய்பேகரா, பொலராம் நாயக் ஆகியோர் பணி முடித்து அவர்கள் தங்கியுள்ள வீட்டிற்கு அருகில் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் அஜய்பேகராவின் ரூ.7300 மதிப்புடைய அலைபேசியையும், பொலராம் நாயக் என்பவரிடம் இருந்த பணம் ரூ.2500-ஐயும் கத்தியை காட்டி மிரட்டி, அடித்து வழிப்பறி செய்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டோர் திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறையில் தகவலை பெற்று அப்பகுதியில் இருசக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சங்கர் பிரபு, காவலர் சுரேஷ் மற்றும் தமிழ்நாடு சிறப்பு படை காவலர் பிரசாத், காவலர் மோகன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் ரோந்து காவலர்கள் துரிதமாக செயல்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டோரிடம் விசாரித்து உடனடியாக குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த ஜீவா (24), வலையங்காடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 22), சாமுண்டிபுரம் செட்டியாரம்மா வீடு மகேஸ்வரன் (வயது 17) ஆகியோரை பிடித்து அவர்களிடம் செல்போன், பணம் மற்றும் கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிடிபட்ட மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்தரோந்து காவலர்களின் பணியைப் பாராட்டி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பொ.நாகராஜன் காவலர்களுக்கு மொத்தம் ரூ.5000/- பண வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

Leave A Reply