வாஷிங்டன் ,

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்தில் காவலரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பி ஓடிய மாணவரை காவலர்கள் கைது செய்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் லப்போக் நகரில் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல் நிலையமும் உள்ளது. இங்குள்ள காவலர்கள் பல்கலைக்கழக மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவதுடன், அவ்வப்போது மாணவர்களின் அறைகளிலும் சோதனை மேற்கொள்வர்.

இந்நிலையில் மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களின் அறைகளில் திங்களன்று மாலை காவலர் ஒருவர் சோதனை நடத்தினார். அப்போது ஒரு அறையில் போதை மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் சாதனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய காவலர் இது தொடர்பாக மாணவர் ஒருவரை  சந்தேகத்தின்பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த மாணவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலரை நோக்கி சுட்டார். இதில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் பல்கலைக்கழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவலர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. நீண்ட தேடுதலுக்கு பின்னர் தப்பி ஓடிய மாணவரை கைது செய்த காவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் ஹோல்லிஸ் டேனியல்ஸ் என்பதும், அவர் முதலாம் ஆண்டு மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: