திருப்பூர், அக்.11-
திருப்பூர் அருகே குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 18-வது வார்டுக்குட்பட்ட வாரணாசிபாளையத்தை அடுத்த குருசாமிநகர் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒருமுறை 3-வது திட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 வாரங்களாக அங்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் வாரணாசிபாளையம் பிரிவில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் வாவிபாளையம், சேடர்பாளையம் ரோடு மற்றும் குருவாயூரப்பன்நகர் ஆகிய 2 சாலைகளிலும் காலிகுடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தொடர்ந்து குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதை வலியுறுத்தி பலமுறை சாலைமறியல் போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.

இதையடுத்து வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply