===நீடா சுப்பையா===                                                                                                                                                            கைவிடப்பட்ட கட்டிடமல்ல இது. திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்கள் தான் இவை. சுற்றிலும் வயல் வெளி மத்தியில் பள்ளிக்கூடம். ஒருவார பெரு மழையோடு பலத்த காற்று வீசினால் இக்கட்டிடங்கள் தாக்குப்பிடிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது. இந்தப் பள்ளி 2009 இல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோதே இக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். செய்யவில்லை இதன் விளைவு பள்ளியின் மற்றொரு கட்டிடம் 2014 ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது.நல்ல வேளையாக குழந்தைகள் யாரும் அப்போது இல்லை. இடிந்து விழுந்த கட்டிடம் போக மிச்சமிருந்த கட்டிடங்கள் தான் பொக்கையும் போறையுமாய் சுண்ணாம்பு வெள்ளையைக்கூட பார்க்காத நிலையில் போர் நினைவுச் சின்னங்களை போல காட்சியளிக்கின்றன. இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அப்புறப்படுத்தவே ஓராண்டிற்கு மேலாகிவிட்டது. பின்னர் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான வேலைகள் ஒரு வழியாய் இப்போது தான் துவங்கியுள்ளது. எப்போது முடியுமோ? பார்த்தாலே பயங்காட்டும் இப்பள்ளியில் பெரும்பாலும் சாலை ஓரங்களில், வாய்க்கால், குளக்கரைகளில் குடிசை போட்டு வாழும் ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பப் பிள்ளைகள் படிக்கிறார்கள்.

ஆனால் இந்தப் பிள்ளைகளின் சாதனைகளை கேட்டால் மலைப்பாகயிருக்கிறது. இப்பள்ளியில் 94 மாணவர்கள் சென்ற ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். அவர்களில் 92 பிள்ளைகள் ( 98 சதவீதம் ) தேர்ச்சி பெற்றார்கள். இந்த ஆண்டு 100 சதவீத இலக்கை நோக்கி ஆசிரியர்களின் உழைப்பு இருப்பதாக முன்னாள் மாணவர் ஒருவர் கூறினார்.
சவளக்காரன் பள்ளிப்பிள்ளைகளின் விளையாட்டு ஆர்வம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சென்ற ஆண்டு மே மாதம் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்தியப் பள்ளி மாணவர்களுக்கான கால் பந்து போட்டிகளில் தமிழக குழுவில் இடம்பெற்ற இப்பள்ளி மாணவிகள் எஸ். சங்கரி, எஸ். பிரியதர்சினி, பி. சுகுணா, என். மகாதேவி ஆகிய நால்வரும் தங்கப் பதக்க வெற்றியாளர்கள்.

2015-2016 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வேலூரில் நடைபெற்ற பள்ளி அளவிலான மாநில போட்டிகளில் தாழ்த்தப்பட்டோர் எஸ்.பிரியதர்சினி தலைமையிலான கால்பந்துக் குழு பதக்கம் வென்றது. சென்ற ஆண்டு கடலோர 10 மாவட்டங்களுக்கான பீச் கால் பந்து போட்டிகளில் ஏ. கமலி, ஏ. அபியா, எஸ்.பிரியதர்சினி, ஏ. இளையராணி. எஸ். சங்கரி குழு மாநிலத்தில் 2-ஆம் இடத்தை பெற்றது. இந்த கல்வியாண்டில் மும்பையில் நடைபெறவிருக்கும் 17 வயதிற்குள்ளோருக்கான தேசிய போட்டிகளில் தமிழ்நாட்டு டீமிற்கு இப்பள்ளியின் ஆர். ஹேமலதா ( இவர் 2017இல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்.) டி. காவியா ஆகியோரும் லக்னோவில் நடைபெறவிருக்கும் 14 வயதிற்குள்ளானோருக்கான போட்டிகளில் கவிதாவும் தேர்வாகியுள்ளனர்.

இப்படி விளையாட்டிலும் தடகள போட்டிகளிலும் இப்பள்ளி மாணவிகளின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும் பள்ளிக்கென விளையாட்டுத் திடல்தான் இல்லை. பள்ளியிலிருந்து அரை கி.மீ. தொலைவில் வயல்களின் நடுவில் சுமார் 30க்கு 20 மீட்டர் திடல் அதாவது அறுவடை காலங்களில் கதிர் அடிக்கும் களமாக பயன்படுத்தப்படும் திடல்தான் இப்பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டுத் திடல். இந்த திடல் அரை மணி நேர மழையில் கூட உளையாகிவிடும்.

சென்ற மாதம் ஒருநாள் திருவாரூர் மன்னார்குடி மாநில சாலையிலிருந்து 150 மீட்டர் தெற்கே உள்ள இத்திடலில் பள்ளி மாணவிகள் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். தற்செயலாக இதை கவனித்த ஜெர்மனி சுற்றுலாக் குழுவொன்று தங்கள் வேனை நிறுத்தியிருக்கக்கூடும். வேனை விட்டு இறங்கி சுற்றிலும் சேறாக இருந்ததால் திடலுக்குச் செல்ல முடியாமல் நின்றுவிட்டனர். சாலையிலிருந்தவாரே தனது டெலி போட்டோ ஜூம் லென்ஸ் மூலம் கவனித்த அக்குழுவின் பான் நகரத்து பெண்மணி ஒருவர் ஆச்சரியம் பொங்க கூறினார். இந்தப் பெண் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட அற்புதமான கால் லாகவம் ( அமேசிங் புட் வொர்க் ஹவ் டஸ் தே கண்ட்ரோல் தி பால் வித் தேர் டோ அண்ட் ஹீல் யெஸ்….பெண்டாஸ்டிக் ) எப்படி விளையாடுகிறார்கள் பாருங்கள் என தனது கேமரா திரையை மற்றவர்களிடம் காட்டினார்.

அவர்களது ஆர்வத்தைக் கண்ட நாம் அதோ தெரிகிறது பாருங்கள் அந்தப் பள்ளியின் மாணவிகள் தான் இவர்கள் என சவளக்காரன் பள்ளிக்கூடத்தைக் காட்டியபோது அவர்கள் முகம் அப்படியே வெளிறி மாறியது. இது என்ன பரிதாபம்? இது பள்ளிக்கூடமா? கைவிடப்பட்ட கட்டிடமா? என்று வினவினர்.

இவர்கள் விளையாட்டுத் திறன் உயர என்ன செய்ய வேண்டும் என்ற நமது கேள்விக்கு அவரிடமிருந்து கிடைத்தத் தகவல்கள்தான் நம்மை சிந்திக்க வைத்தது. தரமான ஆடுகளம், சத்தான உணவு, விளையாட்டு தடகளப் போட்டிகளுக்கான மன உறுதியை கட்டமைக்கும் உளவியல் புலமை கொண்ட பயிற்றுனர், இவைகளைவிட தடகளவியல் விளையாட்டுத்துறையியலை ஊக்குவிக்கும் அரசுத் திட்டங்கள், இவைகளை உள்ளடக்கிய விரிவான விளையாட்டு கட்டமைப்பின் பலன் இதுபோன்ற இந்திய கிராம மாணவர்கள், இளைஞர்களுக்கு கிடைத்தால் இவர்கள் சர்வதேசப் போட்டிகளின் உயரங்களை தொடுவது நிச்சயம். பாருங்கள் இதுபோன்ற கிராமக் குழந்தைகளுக்குத்தான் தடகள விளையாட்டுகளில் தாக்குப்பிடிக்கும் உறுதியும் வீரியமும் வேகமும் உண்டு.

அவர் மேலும் கூறினார். பட்டினிக் கிடக்கும் வறிய எத்தியோப்பியா, கென்ய போன்ற நாடுகள் ஒலிம்பிக்கில் ஏராளமான பதக்கங்களை பெறுவதற்கு இதுபோன்ற ப்ரொலோடேரியேட் ( பாட்டாளி மக்கள் ) குடும்பங்களின் குழந்தைகள் இனம் காணப்பட்டு வளர்க்கப்பட்டது தான் காரணம். இவர்களுக்கு விளையாட்டுத் திடல் வசதி கூட இல்லாதது தான் மிகவும் பரிதாபம் என்றார். எங்கிருந்தோ வந்த இவர்கள் உணர்ந்தவைகளை கூட இந்த ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உணரவில்லை. தேவையான நிலத்தை கையகப்படுத்தி இந்தப் பள்ளிக்கென விளையாட்டுத்திடல் உருவாக்கிக் கொடுப்பது நாட்டின் விளையாட்டுத்துறையை உயர்த்திட ஊக்குவிக்கும். இது தங்களின் முக்கிய கடமை என்ற உணர்வு நமது கல்வி மற்றும் மாவட்ட

நிர்வாக அதிகாரிகளுக்கு இனியாவது ஏற்படுமா?                                                                                                                          பள்ளியின் பி.டி. ஆசிரியர் குறைந்தது இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை காலையில் சாப்பிட வேண்டும் என்பார். ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பத்து பிள்ளைகளாகிய இவர்களுக்கு பெரும்பாலான நாட்களில் இதுகூட கிடைப்பதில்லை. ஆர்வமும் சாதிக்க வேண்டும் என்ற உறுதியுமிருந்தாலும் சத்துணவு பற்றாக்குறையால் பயிற்சியின்போது வெகு சீக்கிரமே சோர்ந்து விடுகிறார்கள் என்றார் முன்னாள் மாணவர்.

விளையாட்டில் தடகள துறையில் சாதிக்கும் திறமை, ஆர்வம் உள்ளவர்கள் ஆதரவின்மை, குடும்ப வறுமையினால் பிழைப்பிற்காக நடவு, கட்டுமானம், வீட்டு வேலை போன்ற முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டு இவர்களது அருங்கொடை திறமை அமிழ்ந்து காலப்போக்கில் காணாமற் போய் விட்டதாக கேள்விப்பட்டபோது ஏதோ ஒன்று நம் மனதை பிசைந்தது. சவளக்காரன் பள்ளிக்கூடத்திற்கு தேவையான வகுப்பறைகள் இல்லை. பள்ளிக்கூடத்தை பராமரிப்பதற்குகூட போதிய அரசு நிதி ஒதுக்கீடு இல்லை. அடிப்படை பணியாளர்கள், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நீண்ட காலமாகவே காலியாக உள்ளன. ஆனால் அர்ப்பணிப்புடன் கூடிய ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வியில் அரசின் அக்கரையை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் சவளக்காரன் சென்று இந்த பள்ளிக்கூடத்தைப் பார்த்தாலே போதும். தமிழ்நாட்டில் 1448 தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பள்ளிகள் உள்ளன. இவைகளில் 1,34,042 பிள்ளைகள் படிக்கிறார்கள். மாநிலத்தில் 99 விழுக்காடு பள்ளிகள் இந்த அவலத்தில் தான் உள்ளன. இவைகளில் எத்தனையோ அனிதாக்கள், சாந்திகள், மாரியப்பன்கள், பி.வி.சிந்துக்கள் இருக்கக்கூடும். விளையாட்டில் பங்கேற்றுவரும் குழந்தை வீரர்களுக்கு சத்துணவுத்திட்டத்தில் அன்றாடம் இரண்டு முட்டைகள், ஊட்டச்சத்து மாவு போன்ற உணவை உணவியல் நிபுணர்களின் பரிந்துரை பெற்று கொடுக்க வேண்டும். பள்ளிப்படிப்போடு விளையாட்டிலும் இவர்கள் தொடர்ந்து நிலைத்திருக்க அரசு கூடுதல் சிறப்பு ஊக்கப்படிகளை கொடுக்க வேண்டும்.

நிதியின்றி தடுமாறும் இப்பள்ளியின் விளையாட்டுத்துறைக்கு தொண்டு நிறுவனங்கள் மனமுவந்து வழங்க வேண்டும். தரமான விளையாட்டுத்திடல் சவளக்காரன் பள்ளிக்கு இக்கல்வி ஆண்டிற்குள் கிடைக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் கல்வியாளர்கள், தடகள விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Leave A Reply