மும்பை;
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-வின் மகன் ஜெய் ஷா நடத்திய நிறுவனம், பல கோடி ரூபாயை ஊழல் செய்து சுருட்டியுள்ளது பற்றி அமித் ஷா, ஜெட்லி, பியூஷ் கோயல் ஆகிய பதிலளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார்.“ஜெய்ஷா நடத்தி வந்த நிறுவனம், மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், அமைப்பிடமிருந்து ரூ. 10.36 கோடியை கடனாக பெற்றுள்ளது. ஆனால், இதற்கு பிணையாக கொடுக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்போ ரூ. 6 கோடிதான்; ஜெய்ஷா நிறுவனமானது, அதற்கு முன்பாக, காற்றாலை அல்லது, மரபு சாரா எரிசக்தித் துறையில் அனுபவம் இல்லாத நிறுவனம்; ஆனாலும், குறைந்த பிணை மதிப்புக்கு, அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளிக்க வேண்டும்” என்று பிரித்விராஜ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அமித் ஷா மகன் ஜெய்ஷாவுக்கு குசும் பின்செர்வ் என்ற நிறுவனத்தில் 60 சதவீத பங்குகள் உள்ளதாகவும், இந்த நிறுவனம், பங்குச் சந்தை வணிகம் செய்து வந்த நிலையில், தொடர்பே இல்லாமல் திடீரென, மத்தியப் பிரதேசத்தில் காற்றாலையை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள சவான், பண மதிப்பிழப்பு நடவடிக்கை முன்கூட்டியே ஜெய் ஷா-வுக்கு தெரிந்திருந்ததா? அவர் 16 ஆயிரம் மடங்கு லாபமீட்டிய நிறுவனத்தை பண மதிப்பிழப்புக்கு 4 வாரம் முன்னதாக திடீரென மூடுவதற்கான தேவை என்ன வந்தது? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

2014-ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஜெய் ஷா நிறுவனம் அபார வளர்ச்சியை அடைந்துள்ளது என்ற நிலையில், இதுகுறித்து அமித் ஷா, அருண் ஜெட்லி, பியூஷ் கோயல் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சவான் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply