வாஷிங்டன்;
2017-ஆண்டில் இந்திய பொருளாதாரம் மந்தமான நிலைக்கு சென்று விட்டதாகவும்;தற்போது இருக்கும் இந்த பொருளாதார மந்தம் 2018-ஆம் ஆண்டில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக விளங்கிய இந்தியா, தற்போது அந்த தகுதியை சீனாவிடம் இழந்து நிற்பதாகவும்; இத்தகைய சூழ்நிலைக்கு இந்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கமே முக்கிய காரணம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் மற்றும் தெற்காசியப் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இவ்வாறு கூறியுள்ள உலக வங்கி, 2015-ஆம் ஆண்டில் 8.6 சதவிகிதமாக இருந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, 2017-இல் 7 சதவிகிதமாக சரிந்து விட்டது என்று புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றின் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது; நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது; சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 6.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே இந்தியா எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது- ஜிஎஸ்டி வரி விதித்தது- உள்ளிட்ட நடவடிக்கைளுக்குப் பின்னர், இந்தியப் பொருளாதாரம் 2018-இல் அதிகபட்சம் 7.3 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள உலக வங்கி, ஆனால், அது எளிதில் நடக்க வாய்ப்பு இல்லை என்றும், அதற்கேற்ற நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே 7.3 சதவிகித வளர்ச்சியும்கூட சாத்தியமாகும் என்று கூறியுள்ளது.
“ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு, இந்தியாவில் உற்பத்தி குறைந்துள்ளது, எனினும் 2018 காலாண்டிற்குள் இந்த நிலைமை சரியாகும் என்று எதிர்பார்க்கலாம்; இந்தியா நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்; ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சி விகித மந்த நிலை, தெற்காசிய வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும்; தற்போதே இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தெற்காசியா பிராந்தியமானது, கிழக்காசிய மற்றும் பசிபிக் நாடுகளை விட இரண்டு இடங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது;
இந்தியாவை பொறுத்தவரை 2016-இல் 7.1 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவிகிதத்திற்கு சரிந்துள்ளது; ஜிஎஸ்டி, 2018-ஆம் ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது” என்று உலக வங்கி தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி அமலாக்கமும் நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் துவக்கத்திலேயே கூறினர். பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் உண்மையை ஒப்புக் கொள்ள மோடி அரசு தயாராக இல்லை. இந்நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை உலக வங்கி அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.