ஒருவர் பேச்சில் வெளிப்படும் உணர்வுகளைப் பிழிந்து வெளியேற்றி விட்டு சக்கையை மட்டும் ரிப்போர்ட் செய்வது இளம் பத்திரிக்கையாளர்கள் அறியாமல் செய்யும் தவறு. அனுபவம் மிகுந்தவர்கள் செய்வது அற்பத்தனம்.
***

படிப்பு

அதிகமாகப் படித்துவிட்டு ஜீரணமாகமல் குறைவாக எழுதுவது அறிவுசார் மலச்சிக்கல்.
குறைவாகப் படித்துவிட்டு அதிகமாக எழுதுவது வார்த்தைகளின் வயிற்றுப்போக்கு.
(இதை எழுதியவர் பத்திரிகை உலக ஜாம்பவான் கே.ஏ. அப்பாஸ். பிளிட்ஸ் பத்திரிக்கையில் இவர் எழுதிய கடைசி பக்கம் மிகப் பிரபலம். அவர் இறந்த பிறகு அந்தப் பக்கத்தைத் தொடர்ந்து எழுத அப்பாஸினாலேயே தேர்ந்தெடுக்கப் பட்டவர் பி. சாய் நாத்.)
சரி விஷயத்திற்கு வருவோம். தமிழ்ப் பத்திரிக்கையுலகில் வார்த்தைகளின் வயிற்றுப் போக்குதான் அதிகம். கட்டுரை எழுதும் முன் அதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச படிப்பு கூட இல்லை என்பது கட்டுரையை படிக்கும்போதே தெரிந்துவிடும்
***

தலைப்பு

செய்திக்கும், கட்டுரைக்கும் தலைப்புக் கொடுப்பது ஒரு கலை. அழகும் வேண்டும், துல்லியமாகவும் இருக்க வேண்டும். இரண்டும் சில நேரங்களில் அமைந்து விடும்.
ஆனால் துல்லியத்திற்குத்தான் முன்னுரிமை. பலர் அழகாக இருக்க வேண்டுமென்பதற்காக சாரத்திற்கு மாறான தலைப்பைக் கொடுத்துவிடுவதுண்டு. எதுகை மோனை உண்மையைத் தின்றுவிடக் கூடாது.
ஒரு கணித ஆராய்ச்சி நிறுவனத்திற்குள் பேராசிரியர்களுக்குள் சண்டை. இதற்கு நான் கொடுத்த தலைப்பு: ‘கணிதப் பேராசிரியர்களிடையே சமன்பாடு சரியில்லை’
***

நோக்கம்

உடனடிப் புகழ் தேடி ஓடுபவர்கள், புகழுக்குப் பின் இருக்கும் நீண்ட கால உழைப்பைப் பார்ப்பதில்லை. நேரா ஹீரோதான். அப்புறம் சி எம். அழுத்தமாக நான்கு வரிகள் எழுதுவதற்கோ பேசுவதற்கோ முன் நடக்கும் ஆராய்ச்சியும் படிப்பும் கண்ணில் தெரிவதில்லை. 33 ஆண்டுகள் இதழியல் துறையில் இருக்கும் என் பெயர் வெளியே தெரிய 25 ஆண்டுகள் ஆனது. இன்றும் மேடையேறும் போது ஒரு நடுக்கம் உள்ளே இருக்கிறது.
தன்முனைப்பு கண்ணைக் கட்டிவிடுகிறது. நம் சிந்தனைகளை எழுத்தில் பேச்சில் வடிப்பது அந்த சிந்தனைகளை படிப்பவர்க்கும் கேட்பவருக்கும் கடத்துவதுதான். கைதட்டலும், பாரட்டுக் கடிதமும் மட்டும் நம் கண் முன்னே வந்து போனால் நோக்கம் சிதறி விடும்.
சமீபத்தில் நான் எழுதிய ஒரு தலையங்கத்தில் இருந்தது 700 சொற்கள்தான். நினைத்ததை எழுத்தாக மாற்றுவதற்கு ஒரு வாரம் ஆனது. தினசரியில் எழுதுவதற்கு அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனால் நாம் ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் அறிவு துரித எழுத்தைக் கூட செரிவானதாக மாற்றும்
***

 சிந்தனை

அப்போது நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெங்களூர் பதிப்பின் பயிற்சிப் பத்திரிக்கையாளராக இருந்தேன். அப்பதிப்பின் ஆசிரியர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் தன் அறைக்கு அழைத்தார். நான் எடிட் செய்து பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியில் இருந்த பிழைகளைச் சிவப்புக் கோடிட்டுக் காட்டினார். கருப்பை விட சிவப்பு அதிகம். “நான் உனக்கு 45 நிமிடங்கள் தருகிறேன். இந்தச் செய்தியை மீண்டும் எடிட் செய்து கொண்டு வா” என்றார். நடுக்கத்துடன் டைப்ரைட்டர் முன்னால் அமர்ந்தேன். என்னை எல்லோரும் அனுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் செய்தியை டைப் செய்த தாளை அவர் மேசையில் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். மீண்டும் அழைப்பு. “ இப்போது நீ எடிட் செய்திருக்கும் காபி மிகச் சிறப்பாக உள்ளது. நீ புத்திசாலிதான். ஆனால் உன் சிந்தனை ஊர் மேய்கிறது” என்றார். மேலும் “ எடிட்டிங் வேலை செய்யும் நாம் சொற்களை ஒழுங்கமைப்பதின் வாயிலாக உலகை ஒழுங்கமைக்கிறோம் (by organising words we organise the world)” என்றும் சொன்னார். நீ போகலாமென்றவுடன் நிம்மதியாக எழுந்து அறைக் கதவை திறக்கும்போது ஒன் மினிட் என்று அவர் குரல் கேட்டது. திரும்பினேன். “அடுத்த முறை இத்தகைய தவறுகளைச் செய்தால் உனக்கு இங்கு வேலை இருக்காது”
ஆறு மாதத்திற்குப் பின் மீண்டும் அறைக்கு அழைத்தார். “ நாம் ஒரு சிறப்பு வெளியீடு கொண்டு வருகிறோம். அதன் எடிட்டிங் பொறுப்பு முழுவதும் உன்னுடையது. என்னுடைய அறையிலிருந்தே வேலை செய்” என்று சிரிக்கும் கண்களுடன் வெளியே சென்றார்.
என்னுடைய வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட அனுபவம் கிடைத்த ஆண்டு 1987. வயது 25
***

ஆழ்ந்த அறிவும் தேடலும்

வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு எழுதுவது கயிற்றின் மேல் நடபதற்கு ஒப்பாகும். லட்சக்கணக்கான வாசகர்களின் அறிவு, உணர்வு நிலைகளின் சராசரியை வைத்து எழுத வேண்டும். அதீத எளிமைக்கும் இருமுறை படித்தால் மட்டும் புரியும் மேதாவி நிலைக்கும் நடுவில் இருக்கும் புள்ளியைத் தொட வேண்டியிருக்கும். எழுத்து இலக்கை எளிதாகச் சென்றடைய
1. தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும்
2. உடனடியிலிருந்து பொதுவுக்கும்
3. ஸ்தலப் பிரச்சினைகளிலிருந்து பிரபஞ்சம் வரைக்கும்
4. எளிதானதிலிருந்து சிக்கலானதிற்கும்
5. தனிமனிதனிலிருந்து சமூகத்திற்கும்
வாசகரை தர்க்கரீதியாக நடத்திச் செல்ல வேண்டும்.
இதற்கு ஆழ்ந்த அறிவும் தேடலும் அவசியம்
அதற்காக எப்போதும் மேடை மீது ஏறி நின்று வாசகருக்கு உபதேசங்களை அள்ளி வீசிக்கொண்டே இருக்கக் கூடாது. வாசகர்கள் எழுதுபவரை விட புத்திசாலியாக இருக்கலாம்.
முழு நேரமும் ஊடகவியலாளரைப் போல் செய்திகளைத் திரட்டி எழுதும் வாய்ப்பும் நேரமும் இல்லாத காரணத்தினால்தான் தினமும் காலையில் பத்திரிக்கையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
***

இதழியல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு எல்லாம் நேர விரயம்.

இதழியல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு எல்லாம் நேர விரயம். பண விரயம். உலக நடப்புகளில் ஆர்வமும், நானறிந்த செய்தியை அதிகபட்ச மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் துடிப்பும், மொழியறிவும்தான் அடிப்படைகள். இவை எதுவும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. சமூக அக்கறை, சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பு உணர்விலிருந்து வருபவை இந்த அடிப்படைகள். நீண்ட காலம் இதழியல் படிப்பில் செலவிட்டு பட்டம் பெற்று வரும் பலரும் வரலாறு, அரசியல், பொருளாதாரத்தில் ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்வதற்கான நேரத்தை இழக்கிறார்கள். இந்தத் துறைகளில் பட்டம் பெற்ற பின் இதழியல் நுட்பங்களைக் கற்றுத் தரும் ஒரு வருட டிப்ளொமா போதுமானது. ஆனால் அத்தியாவசியமானது அல்ல. படிப்பில் இண்டர்மீடியட் கூடத் தாண்டாத பலர் பிற்காலத்தில் பெரும் பத்திரிக்கையாளர்களாக எழுந்திருக்கிறார்கள்.
இதழியல் வகுப்பில் படித்ததை விட களத்தில் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.
நான் டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷனில் இதழியல் டிப்ளமாவுக்காக படித்து முடிக்கும் நேரத்தில்(1984-85), எடிட்டிங் சொல்லித் தந்த தாசு கிருஷ்ணமூர்த்தி கேட்ட கேள்வி இது:
யாரெல்லாம் இதழியல் தேர்வில் தங்கப் பதக்கம் பெறும் அபாயத்திலிருக்கிறீர்கள்?
நான் அந்த அபாயத்திலிருந்து தப்பித்தவர்களுள் ஒருவன்!
***

செய்தியின் ஆழம்

செய்தித்தாளை காலையில் பார்க்கும் போது அதிலிருக்கும் பெரும்பாலான செய்திகள் பழையவை போல் தெரிகின்றன. இந்த சமூக வலைத்தள, கைபேசி யுகத்தில் ஒரு சம்பவம் நடந்த சில நொடிகளுக்குள்ளாகவே செய்திகளாகவும் காட்சிகளாகவும் நம் முன் வந்து விழுந்து விடுகின்றன. உரை நிகழும்போதே லைவ் ஆகப் பார்க்க முடிகிறது. செய்திகளும் படங்களும் இடைவிடாமல் நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு செய்தியைக் குறித்து நாம் ஒரு மதிப்பீட்டிற்கு வரும் முன்பே அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன. அச்சு ஊடகங்கள் சமூக வலைத்தளங்களையும், தொலைக்காட்சிப் பரபரப்பு ப்ரேக்கிங்க் செய்திகளையும் அப்படியே பின் தொடர்ந்து தங்களுடைய செய்தித் தேர்வினை முடிவு செய்வது அதிகமாகி வருகிறது.
நிருபர்களும் நேரடியாகக் களத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்து எழுதுவது இதனால் குறைந்து வருகிறது. கைபேசியை வைத்துக் கொண்டு அலுவலகத்திற்குள்ளேயிருந்து கொண்டே செய்தி சேகரிக்கும் வேலையை முடித்து விடுகிறார்கள். zzzzzz
செய்திக்குப் பின்னால் இருக்கும் கதைகள், பின்னணி விவரங்கள், பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகள் அடிபட்டு விடுகின்றன. நேரடியாகக் களத்தில் நிருபர்
பெறும் அனுபவம் செய்தியின் ஆழத்தை அதிகப்படுத்தும். படிப்பவர்களின் பார்வையையும் தெளிவுபடுத்தும். செழுமைப் படுத்தும்.
அச்சு ஊடகத்தின் பலமே செய்திகளை உறுதிப்படுத்தி வெளியிடுவதுதான். ஒரு சோர்சிடம் (source) இருந்து வரும் தகவலை உறுதிப் படுத்த இன்னும் இரண்டு மூன்று பேருடன் பேச வேண்டியது அவசியம்.
***

ஈடுபாடும் வாசிப்பும்

நான் இந்து பத்திரிக்கையில் உதவி ஆசிரியாராக வேலைக்குச் சேர்ந்தபோது (1988) கே. நாராயாணன் அவர்கள்தான் செய்தி ஆசிரியர். ஆச்சரியப்பட வைக்கும் ஞாபகசக்தி கொண்டவர். பத்து வருடங்களுக்கு முன் எந்த செய்தி எந்தப் பக்கத்தில் எந்த இடத்தில் வந்தது என்றுகூட நினைவில் வைத்திருந்தவர். எப்படி இப்படி என்று நான் கேட்டபோது முழு ஈடுபாட்டுடன் வேலை செய்தால் இது சாத்தியம் என்றார்.ஒரு பத்திரிக்கையாளர் ஒரு நாளைக்கு குறைந்தது 5 செய்தித்தாள்களை வாசிக்க வேண்டுமென்பார்.

1. தான் பணியிலிருக்கும் பத்திரிக்கை
2. போட்டிப் பத்திரிக்கை
3. ஒரு பொருளாதார/வர்த்தகப் பத்திரிக்கை
4. ஒரு தமிழ் (அல்லது பிரதேச மொழிப் பத்திரிக்கை – பணி புரியும் மாநிலத்தைப் பொறுத்து)
5. ஒரு சர்வதேசப் பத்திரிக்கை
மூச்சு முட்டச் செய்யும் காரியம்தான், இருந்தாலும் முயற்சி செய்வோம். அதன் பலன்கள் இப்போது தெரிகிறது.
ஒரு வாரம் வெளிவந்த பத்திரிக்கைகளை எடுத்து சிவப்பு மையினால் தவறுகளைச் சுட்டிக்காட்டி எடிட்டோரியல் ஹாலில் வைத்து விடுவார். அதைப் பார்த்தாலே அடுத்த முறை அந்தத் தவறுகளைச் செய்யமாட்டோம். அப்போது இளம் பத்திரிக்கையாளர்களாக (இப்போதும்தான்:) இருந்த எங்களுக்குள் ஒரு போட்டியே நடக்கும் எதற்கு. நாம் எடிட் செய்த செய்தி அல்லது தயாரித்த பக்கத்தில் யார் மிகக் குறைவாக சிவப்பு மை வாங்குவது என்று.
Vijayasankar Ramachandran

Leave A Reply