கவுகாத்தி,

அசாமில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக காவலர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் செவ்வாயன்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி  15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. கடைசி 20 ஓவர்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது.

இதற்கிடையில், செவ்வாயன்று இரவு போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள்,  அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு திரும்பிகொண்டிருந்த போது, அவர்கள் பயணம் செய்த பேருந்து மீது கல்வீசி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் ஃபின்ச் தாங்கள் சென்ற பேருந்தின் கண்ணாடி உடைந்திருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு தங்கள் பேருந்து தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதனை அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ரீ ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக இதுவரை ஐ.சி.சி.யோ, பி.சி.சி.ஐ.யோ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கமோ கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள கவுகாத்தி காவலர்கள் , அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply