ஈரோடு,அக்.9-
பார்கூர் மலைப்பகுதி கிராமங்களில் சரியான போக்குவரத்து இல்லாததால் பள்ளி செல்ல முடியவில்லை. எனவே சைக்கிள் வழங்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாயிடம் மாணவ, மாணவியர்கள் மனு அளித்தனர். தாளவாடி தாலுகா பர்கூர் பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளது. இதில் அதிக இடங்களுக்கு போக்குவரத்து கிடையாது. மேற்குமலைபகுதியில் உள்ள சின்னக் செங்குளம், பெரிய செங்குளம், ஆலசொப்பனட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஓசூர் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வருகிறார்கள். இவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது என்பதால் சுமார் 7 கிலோ மீட்டர் வரை நடந்தே பள்ளிக்கு செல்கிறார்கள்.

இதன் காரணமாக சில மாணவ, மாணவியர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள். எனவே, மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்காவது சைக்கிள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சுடர் நடராஜ் தலைமையில் ஏராளமான மாணவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா மனு அளித்தனர்.

தேர்வு மையம் கோரி மனு:
இதேபோல், பர்கூர் பகுதியில் கொங்க்காடையில் பழங்குடியினர் இயக்குனரகத்தின் மூலமாக பழங்குடியினர் உண்டு, உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. நடுநிலைப்பள்ளியாக செயல்படும் இப்பள்ளியில் சுமார் 230 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இதனை கடந்த ஜூலை மாதம் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இன்று வரை மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை. எனவே உடனடியாக மாணவர் சேர்க்கையினை தொடங்க வேண்டும்.

மேலும், மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் 125 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். அவர்கள் தேர்வு எழுதிட சுமார் 40 கி.மீ பயணித்து அந்தியூர் செல்ல வேண்டியுள்ளது. மலைப்பகுதி என்பதால் வாகனங்கள் ஏதேனும் பழுது பட்டாலோ, மண் சரிவு ஏற்பட்டாலோ போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே, இப்பள்ளியையே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: