திருப்பூர், அக். 9 –
முதலிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி முன்பு கழிவுநீர் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்தை போக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் வாரம் குறைந்தபட்சம் இரு முறை கூடுதல் நேரம் தேவையான அளவு குடிநீர் வழங்க வேண்டும். ஊராட்சி பகுதிகள் முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், கழிவுநீர் கால்வாய்களை முழுமையாக சுத்தப்படுத்தி டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல், தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும், சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகளை பழுது நீக்குவதுடன், தேவையான இடங்களில் தெரு விளக்கு அமைக்க வேண்டும், முதலிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி முன்பாக தேங்கும் கழிவுநீரை அகற்றி மாணவர்கள் தொற்று நோயில் பாதிக்காமல் தடுக்கவும், பொதுக் கழிப்பிடங்களை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதலிபாளையம் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பாக திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னாபுரம் கிளைச் செயலாளர் செல்வன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்கத் ஹவுசிங் யூனிட் கிளை தலைவர் கே.சிவசாமி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் கே.மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.மகேஷ், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி ஆகியோர் பேசினர். பெண்கள் உள்பட40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போராட்டத்தின் முடிவில் ஊராட்சி தனி அலுவலர் சார்பில் கிறிஸ்டோபர் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, கோரிக்கைகள் குறித்து ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுத்து சரி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.