திருப்பூர், அக். 9 –
கிராமப்புற ஏழை மக்கள் பயனடையும் நூறு நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்துமாறு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நான்காவது திருப்பூர் மாவட்ட மாநாடு பல்லடத்தில் ஞாயிறன்று மாவட்டத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பி.வசந்தாமணி தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம் அறிக்கை சமர்ப்பித்து பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம் வாழ்த்திப் பேசினார்.

தீர்மானங்கள்:
இம்மாநாட்டில் ஏழை, எளிய மக்கள் பயனடையும் நியாயவிலைக் கடைகளை மூடக் கூடாது. வீடில்லா மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், வேலையில்லா விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்துவதுடன், வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரித்து ரூ.400 ஊதியம் வழங்க வேண்டும். சம்பளம் பெற வங்கிகள் அலைக்கழிப்பதை தவிர்த்து முறைப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிநபர் கழிப்பிடம் மானியத் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும், தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் கட்ட வழங்கும் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இம்மாநாட்டில் விவசாயத் தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், பொருளாளர் பி.மணியன், துணைத் தலைவர் என்.ஆறுமுகம், துணைச் செயலாளர் ஏ.சண்முகம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 17 பேர் மாவட்டக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.துரைசாமி மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.