திருப்பூர், அக்.9 –
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இரண்டு சிறுமிகள் உட்பட மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பெருமாநல்லூர் சாலை அண்ணாநகரை அடுத்த கூத்தம்பாளையம் பிரிவு ஜே.பி.நகரைச் சேர்ந்தவர் பாலு (45). இவரது மனைவி பானு. இவர்களின் மகள் திவ்யதாரணி (வயது 9). இச்சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ஆம் தேதி பள்ளிக்கு சென்று வந்த திவ்யதாரணிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் சிறுமியை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் திவ்யதாரணி அந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்.

பிறகு அடுத்த நாள் காலை காய்ச்சல் குணமாகாத நிலையில், அந்த சிறுமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கோவை மருத்துவமனையில் சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் திவ்யதாரணி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடலை திருப்பூர் கொண்டு வந்த உறவினர்கள், அந்த பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். இச்சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தார் விசாரிக்கின்றனர்.

பள்ளி மாணவி பலி:
தாராபுரம் கண்ணகி நகரை சேர்ந்தவர் குணசேகரன் (42). இவருக்கு சாந்தி (37) என்ற மனைவியும் அருந்ததி (14)என்ற மகளும், நந்தன் (12) என்ற மகனும் உள்ளனர். குணசேகரன் டயர் ஷோரும் வைத்து நடத்தி வருகிறார். அருந்ததி மற்றும் நந்தன் வரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 மற்றும் 7 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் நந்தனுக்கு காய்ச்சல் வந்து 5 நாட்களாக தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நந்தன் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் அருந்ததிக்கும் காய்ச்சல் வந்து தாராபுரம் தனியார் மருத்துவமனையில் 2 நாட்கள் அனுமதிக்கப்பட்டு காய்ச்சல் தீவிரமடையவே மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு என்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் காய்ச்சல் கட்டுப்படாததால் அருந்ததியை தீவிர சிகிச்சைக்காக கோவை அவினாசி ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அருந்ததி இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலியானது தாராபுரம் பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் தாராபுரம் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் உரிய பரிசோதனை மேற்கொள்ளாமல் சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் டெங்கு போன்ற மர்ம காய்ச்சலுக்கு ஆளானவர்கள் நோய் முற்றிய நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை, ஈரோடு, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வது தொடர்ந்து வருகிறது.

நகராட்சி பகுதியிலும், ஊராட்சி பகுதியிலும் நோய்தடுப்பு நடவடிக்கை மெத்தனமே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், சுகாதாரதுறை ஊழியர்கள் காய்ச்சல் காரணமாக எந்த பகுதியில் இருந்து அதிகமாக வருகிறார்களே அந்த பகுதிக்கு சென்று உரிய ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. மேலும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதாக கணக்கு காட்டுவதில் மட்டுமே குறியாக உள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் தாராபுரம் பகுதியில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதே மாணவி பலியானதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விசைத்தறி பெண் தொழிலாளி பலி:
திருப்பூர் அருகே சாமளாபுரம் பேரூராட்சி 15-வது வார்டு பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கவிதா(எ) ரேவதி (37). இருவரும் விசைத்தறி தொழிலாளிகள். இவர்களுக்கும்ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால்  ரேவதி பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரை கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி சிகிச்சைக்கு சேர்த்தனர். 3 நாட்கள் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் ஞாயிறன்று காய்ச்சல் கடுமையாக அதிகரித்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பிரதான பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சேர்ந்த சில மணி நேரங்களில் சிகிச்சை பலன் இன்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக தனியார் மருத்துவமனையும் காய்ச்சலுக்கு காரணம் டெங்கு என மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளது. டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல்களால் திருப்பூர் மாவட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டு சிலர் உயிரிழந்த நிலையிலும் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தாமல் மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக பொது நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.