கோவை, அக். 9-
ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு கோரி லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் ரூ. 500 கோடி மற்றும் திருப்பூரில் ரூ. 100 மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. லாரிகளை வாங்கும்போதும், பழைய லாரிகளை விற்கும்போதும் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டியுள்ளது. இதனால் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும், சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்தது.

இதையடுத்து தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவையில் உக்கடம் லாரிப்பேட்டை, வட கோவை, ரயில் நிலையங்கள், குனியமுத்தூர், மணல் மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், துறைமுகங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் ஜவுளிகள், இயந்திர உதிரி பாகங்கள், காய்கறிகள், மலர்கள் உள்ளிட்டவைகளை கொண்டுச் செல்லப்படுவது வழக்கம். இப்போராட்டம் காரணமாக அத்தியாவசியப் பொருள்களைத் தவிர மற்ற பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகள் இயங்கவில்லை என்று கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.கலியபெருமாள் தெரிவித்துள்ளார். கோவை மாநகரில் மட்டும் சுமார் 2,500 லாரிகள் இயக்கப்படவில்லை என்றும் மாவட்டத்தின் பிற பகுதிகள், நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்த்தால் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, குடிநீர், ரேஷன் பொருள்கள், மருந்துப் பொருள்களை மாவட்டத்துக்குள்ளும், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மணல் லாரிகள்:
மணல் லாரிகள் சங்கமும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் 10 சதவீத லாரிகள் மட்டுமே இந்த போராட்டத்தில் பங்கெடுத்திருப்பதாக மணல் லாரிகள் உரிமையாளர் சங்க நிர்வாகி மணி தெரிவித்துள்ளார். மணல் குவாரிகளில் இருந்து லாரிகளுக்கு 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே லோடு ஏற்றப்படும். எனவே, பெரும்பாலான லாரிகள் குவாரிகளில் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கும். சரக்கு ஏற்றப்படும் லாரிகள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கும் என்பதாலும், மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே மணல் லாரிகள் ஓடும் என்பதாலும் இந்த போராட்டத்தில் முழு அளவில் பங்கெடுக்க இயவில்லை என்றார்.

ஈரோட்டில் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு: ஈரோடு மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, தீபாவளியை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து வரவேண்டிய பொருள்கள் வரவில்லை. இதேபோல், ஈரோட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய லாரிகள் செல்லவில்லை. இதனால் வெல்லம், சர்க்கரை, மஞ்சள், ஜவுளி ராகங்கள் போன்றவை அதிக அளவில் தேக்கமடைந்ததுள்ளது. குறிப்பாக, ஈரோடு நரிப்பள்ளம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு
நாட்களாக நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ரூ.500 கோடி வர்த்தகம் பாதித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி பாதிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது. லாரிகள் சரக்குப் போக்குவரத்து முழுமையாகத் தடைபட்டது. இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சி.என்.ராமசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் லாரிகள் உள்ளன. இதில் திருப்பூர் பின்னலாடை சரக்குகள், பல்லடம், அவிநாசி, சோமனூர் வட்டாரத்தில் இருந்து காடா துணி டில்லிக்கு அனுப்புவது, காங்கயம் பகுதிக்கு தேங்காய் கொப்பரை கொண்டு செல்வது மற்றும், தேங்காய் எண்ணெய் அனுப்புவது மற்றும் கறிக்கோழி, கால்நடை உள்படஇம்மாவட்டத்தில் திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து வெளியூர்கள், வெளி மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன. இம்மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.100 கோடி அளவுக்கு லாரிகள் மூலம் சரக்குப் போக்குவரத்து நடைபெறுவது பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்கள் வேலைநிறுத்தத்தில் மொத்தம் ரூ.200 கோடி அளவுக்கு பாதிப்பு இருக்கும். எரிபொருள் விலை நிர்ணயம், ஜிஎஸ்டி, சுங்கச் சாவடி நீக்கம், காப்பீட்டுத் தொகை குறைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மற்றும் தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனத்தார் தில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு வரும். உடன்பாடு எட்டப்படவில்லை எனில் அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.