திருப்பூர், அக். 9 –
தனலட்சுமி நகர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி 59வது வார்டுக்குட்பட்ட ஆண்டிபாளையம் முல்லை நகர், தனலட்சுமி நகர், எஸ்.கே.எம். நகர் பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், பாதாள சாக்கடை வசதி இல்லாததால், மாநகராட்சி லாரிகள் மூலம் சாக்கடை கழிவு அகற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், தனலட்சுமி நகரில், கடந்த ஒரு மாதமாக சாக்கடை கழிவை அகற்ற ஊழியர்கள் வரவில்லை. இதனால் கழிவு நீர் சாலைகளிலும், வீட்டு வாசல்கள் முன்பும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. அத்துடன் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர். அவர்களுடன், மூன்றாம் மண்டல உதவி ஆணையர் கண்ணன் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் தென்னரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாநகராட்சி ஆணையர் அலுவலக வேலை நிமித்தமாக சென்னை சென்றிருப்பதால், அவர் வந்தவுடன் சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் கலைந்து செல்லமறுத்தனர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.