கோவை, அக். 9-
இருகூர் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், இருகூர் பேரூராட்சியில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தும், தார் சாலை செப்பனிடப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இருகூர் அரசு ஆரம்ப பள்ளி கட்டடத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுக்கூடமாக மாற்றி வருகின்றனர்.

இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். இதேபோல், இருகூர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை புதிய குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. எனவே விண்ணப்பித்த அனைத்து குடியிருப்புகளுக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்க இருகூர் கிளைச் செயலாளர் நிருபன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரவீந்திரன், சூலூர் தாலுகா செயலாளர் எஸ்.ஸ்டாலின் குமார், சிபிஎம் 13வது வார்டு செயலாளர் விஜயராகவன், மாதர் சங்க நிர்வாகிகள் லலிதா, கண்மணி, பிரேம் முருகேஷ், கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.