இந்தியச் சமுதாயத்திற்கே உரிய ஒரு இழிவு சாதியக் கட்டமைப்பு. அது மனிதர்களை சமூகப் பிரிவுகளாக அடையாளப்படுத்துவதோடு நிற்கவில்லை, பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று பாகுபடுத்துகிறது. தீண்டாமை அடிப்படையிலான பாகுபாட்டிற்கான கரு பராமரிக்கப்படும் இடமாக இருந்து வருபவை கோவில்கள். எதிர்ப்பின்றி அதை ஏற்கவைக்கும் மூளைச்சலவைப் பணி தொடங்குகிற, குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற ஆகம ஏற்பாடு தொடர்கிற இடம் அது. அகமண உறவு சார்ந்த திருமணச் சடங்குகள் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகள் வழியாகவும் சாதியம் தக்கவைக்கப்படுகிறது.

உழைப்பாளி மக்களைக் கூறுபோடும் சாதியத்துக்கு இருப்பது போலவே, அதற்கு எதிரான போராட்டத்திற்கும் நீண்ட பின்னணி இருக்கிறது. அதன் ஒரு மையமான இலக்கு, ஆலயக் கருவறைகளில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாகும் உரிமை. சமூக நீதிக்கானது என்பதால்தான் மார்க்சியவாதி களும் பகுத்தறிவாளர்களும் போராட்டத்தில் முன்வரிசையில் நின்றனர். தமிழகத்தில் இப்போராட்டத்தை முன்னெடுத்த தந்தை பெரியார், தனது இதயத்தில் தைத்த முள்ளாக இந்த அநீதியைக் குறிப்பிட்டது, அந்த முள்ளை அகற்ற 1971ல் அன்றைய திமுக அரசால் இதற்கென சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது, அதை எதிர்த்துச் சிலர் வழக்குத் தொடுத்தது, நீதிமன்றத் தலையீடுகளால் சட்டத்திருத்தம் முடக்கப்பட்டது, பின்னர் அர்ச்சகர் பணிக்கு சாதி ஒரு அடிப்படையாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியதன் அடிப்படையில் 2006ல் மறுபடி புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது போன்ற நிகழ்வுகளின் வரலாறும் உண்டு.

ஆயினும், அர்ச்சகர் பயிற்சிக்கென ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளில் முறைப்படி பயின்று சான்றிதழ்கள் பெற்றவர்களால் கோவில் கருவறைக்குள் நுழைய முடிய வில்லை. காரணம் நியமனத்திற்கான கொள்கைத் திட்டம் வகுக்கப்படாததுதான் என்று இதற்காகப் போராடியவர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். இச்சூழலில், மிகச் சிறந்த முன்னு தாரணத்தைப் படைத்திருக்கிறது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு. அரசு நிர்வாகமான திருவிதாங்கூர் தேவசம் வாரியம் 62 அர்ச்சகர்களுக்கான நியமன ஆணையை வழங்கியுள்ளது. அவர்களில் 30 பேர் பிற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர், 6 பேர் தலித்துகள். இவர்கள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான 32 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள் ளனர். மீதியுள்ள 26 பேரும், பரம்பரை அடிப்படையில் அல்லாமல் அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எத்தகையோரால் இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதைக் காட்டுகிற இந்த நடவடிக்கையை சமத்துவத்துக்காகக் களம் காண்போர் கொண்டாடுவதில் வியப்பில்லை. நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டலையும் கேரள அரசு அளித்திருக்கிறது. சமூகநீதிஇயக்கத்தில் தடம்பதித்த தமிழகத்திலும் இது நிறைவேற, சாக்குப்போக்குகளுக்குள் பதுங்காமல் இன்றைய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: