குடும்ப அட்டைகளுக்கு தேவையான பொருட்களை அரசு முழுமையாக ஒதுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (அக்.6) ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்து 773 ரேசன் கடைகளில் ஒரு கோடியே 98 லட்சத்து 2ஆயிரத்து 728 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன்மூலம் 6 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 362 பேர் பயனடைகின்றனர். இந்த பொதுவிநியோக முறையை மத்திய, மாநில அரசுகள் சிதைத்து வருகின்றன. குறிப்பாக, சென்னையில் 1760 ரேசன் கடைகள் மூலம் 19 லட்சத்து 68 ஆயிரத்து 891 குடும்பங்கள் பயன்பெறுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1476 கடைகள் மூலம் 6 லட்சத்து 52 ஆயிரத்து 495 குடும்பங்கள் பொருட்களைப் பெறுகின்றன.

தமிழகத்தில் உள்ள ரேசன்கடைகளுக்கு தேவையான பொருட்களில் 50 விழுக்காடு மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்கிறது. உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் போன்றவை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக பருப்பு, எண்ணை போன்றவற்றை ஒதுக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், உணவுப்பாதுகாப்பு சட்டத்திலிருந்து பொதுவிநியோக திட்டத்தை பாதுகாக்க வேண்டும். குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி சென்னை பெருநகர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாயவிலைக் கடை ஊழியர் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் இணைந்து சோழிங்கநல்லூர் உணவுப்பொருள் வழங்கல் மற்றம் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

அதிகரிக்கும் நிலுவைத்தொகை
இதில் பேசிய தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனப் பொதுச்செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தி, “தமிழக அரசு கூட்டுறவுத்துறைக்கு வழங்க வேண்டிய 1055 கோடி ரூபாய் நிலுவையில் 440 கோடி ரூபாய் மட்டுமே தந்துள்ளது. மீதம் உள்ள தொகையுடன், 2016-17ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்து விரைவாக வழங்க வேண்டும்” என்றார்.
“தற்போதுள்ள குடும்ப அட்டைகள் டிசம்பர் மாதத்தோடு காலாவதியாகிறது. இந்த அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டத்தில் 35 குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிலும் ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன. இதற்காக உருவாக்கப்பட்ட செயலியும் முறையாக செயல்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, டிசம்பர் மாதத்திற்குள் ஸ்மார்ட்கார்டு வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சமவேலைக்கு சமஊதியம்
“ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்குவதோடு, சமவேலைக்கு சமஊதியமும், அனைவருக்கும் ஓய்வூதியமும் தர வேண்டும். தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும். தகுதியுள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், நலிந்துவரும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், பண்டகசாலை, விற்பனை சங்கங்கள், அச்சங்கங்கள், சங்கங்கள் போன்றவை லாபத்தில் இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.
இப்போராட்டத்திற்கு காஞ்சி மாவட்டச் செயலாளர் எம்.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.அப்பனு, சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.சிவக்குமார், பொருளாளர் டி.சரவணன், சமூக செயற்பாட்டாளர் டி.ராமன் உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: