இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் சூபி பிரிவினர் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 20பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் பகுதியில் சூபி பிரிவினர் அதிகம் உள்ளனர்.  அங்குள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் கூடியிருந்தனர்.  அப்போது சந்தேகத்திற்குரிய  நபர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றார். அப்போது பாதுகாப்பு   பணியில் இருந்த  போலீஸ்காரர் தடத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த நபர் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்ததில் பலத்த சத்தத்துடன் கட்டிடங்கள் இடிந்தன.

இத்தாக்குதலில் 3 குழந்தைகள் மற்றும் 2 போலீசார் உட்பட 20 பேர் பலியானார்கள்.  மேலும்  30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை  உயரும் என  அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் சூபி பிரிவினரின் பள்ளி வாசலில் இந்த ஆண்டில்  தீவிரவாதிகள் நடத்திய 2-வது தாக்குதல் இதுவாகும். சிந்து மாகாணம் ஷெவான் ஷெரீப்பில் கடந்த  பிப்ரவரி மாதம் தற்கொலை  தாக்குதல் நடத்தப்பட்டது.  அதில் 80 பேர் பலியானார்கள். 250 பேர் காயம் அடைந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: