அனைத்தும் தனியார்மயம் என்ற மத்திய, மாநில அரசுகளின் போக்கால் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அப்பாவி பயணிகளின் பாக்கெட்டை ஒட்டச் சுரண்டி காலிசெய்து வருகிறது.
அரசுப் போக்குவரத்து…
கடந்த 1970 ஆண்டுகளில் தனியார் வசமிருந்த பேருந்து போக்குவரத்து அரசுடமை ஆக்கப்பட்டது. பேருந்துகளும், வழித்தடங்களும் அரசுடமை ஆக்கப்பட்டதை இடதுசாரிகள் உள்ளிட்டு பெரும்பாலோர் வரவேற்றனர்.
இப்படி துவக்கப்பட்ட 7 அரசுப் போக்குவத்து கழகங்களின் 300க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பணிமனைகள், சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள், ஏராளமான சொந்தக் கட்டிடங்கள் போன்ற அசுர வளர்ச்சியின் பின்னால் அதன் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ரத்தமும், வியர்வையும் அடங்கியுள்ளது.
பின்னர் வந்த ‘கழக’ ஆட்சியினர் இன்றுவரை பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை பயன்படுத்துகின்றனர். அதனை தங்கள் ஆட்சிகளின் சாதனைக ளாகச் சொல்லி தேர்தல் ஆதாயமும் அடைந்தனர். எது எப்படியாயினும் இந்த பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டு ஏழை, எளியவர்களான பல்வேறு சமூகத்தினர் பயனடைந்தனர்.
செயற்கை நிதிப் பற்றாக்குறை…
இந்நிலை தற்போது பெரும்பாலும் கைவிடப்பட்டு மாநிலஅரசு இக்கழகங்களை சீரழித்து வருகிறது என்றே கூறலாம். போக்குவரத் துக் கழகங்களுக்கு சமூக பயன்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்காததால் குறிப்பிட்ட காலம் தனது வருவாயிலிருந்தே செலவுகளை சமாளித்தன. ஆளுங்கட்சியினர், சில சுயநல அதிகாரிகளால் பல்வேறு வகையான ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர் மூத்த தொழிலாளர்கள்.
இந்த செயற்கை நிதிப்பிரச்சனையை சமாளிக்க இயலாமல் செப்டம்பர் மாத ஊதியம்கூட பல கழகங்களில் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்றவர்களோ தங்களின் உழைப்புப் பலன்களைக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அரசு உணவகம்!
விழுப்புரம் கழகத்திற்கு சொந்தமான பயணவழி உணவகமொன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் அமைந்துள்ளது. துவக்கப்பட்டதிலிருந்து சென்னை நோக்கியும், சென்னையிலிருந் தும் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தரமான உணவு வகைகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது. தமிழக அரசின் புறக்கணிப்பால் இந்த உணவகம் தனியார் நிர்வகிக்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டது. இதன்பின் படிப்படியாக உணவுப் பண்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டது. அவற்றின் அளவும், தரமும் பயணிகளின் கண்ணுக்குத் தெரியாமல் குறைந்துகொண்டே வருகிறது. இங்கு விசாலமாக சுகாதாரத்துடன் கூடிய கழிப்பிடங்கள் பயணிகளுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்தது. இங்கிருந்த கழிப்பிடங்கள் இலவச பொதுக்கழிப்பிடமாகவே பராமரிக்கப்பட்டது.
சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ‘பேருந்து பயணத்திற்குத்தான் தாறுமாறான கட்டணக்கொள்ளை என்றால் இலவசமாக இருந்த இயற்கை உபாதைகளுக்குக்கூட கட்டணம் கேட்பது அதிர்ச்சியளிக்கிறது’ என்கின்றனர் பயணிகள். கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 500 பேருந்துகளுக்குமேல் இங்கு உணவுக்காக நிறுத்தப்படுகின்றன.
ஜிஎஸ்டி…
தோராயமாக ஒரு பேருந்திற்கு 20 பயணிகள் என்றால்கூட தினசரி 10,000 பேருக்குமேல் இக்கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டி யுள்ளது. அப்படி கணக்கிட்டால் தினசரி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. இப்படி மாதத்திற்கு 15 லட்சம் ரூபாய், ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் ஏழை, நடுத்தர பேருந்து பயணிகளின் பணம் சூறையாடப்படுகிறது.
திருவிழாக்காலங்களில் கூடுதல் வசூல் நடக்கிறது. ஆனால் இந்த 5 ரூபாய்க்கு டோக்கன்கூட கிடையாது. கணக்கும் கிடையாது. யாருக்கு எவ்வளவு பங்கு பிரிக்கப்படுகிறதோ…? இதற்கு மோடி ஜிஎஸ்டி வரியை எந்தக் கணக்கில் வசூலிப்பார்…? இந்த லட்சணத்தில் ‘கட்டண கழிப்பிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஓட்டல் நிர்வாகம் பொறுப்பல்ல’ என்ற எச்சரிக்கை பலகையும் உணவத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கழக அதிகாரிகள் பொதுப்போக்குவரத்தை லாபவெறியோடு தனித்தனியாக ‘பிரித்து மேய்ந்துள்ளனர்’ என்பது அம்பலமாகிறது.
செரிக்காத உணவும், விலையும்!
அதேபோல இரண்டு பூரி 50 ரூபாய், சிறிய கப் டீ (அ) காபி 15 ரூபாய், தோசை 40 ரூபாய் என உணவுப்பண்டங்களின் விலை தாறுமாறாக உள்ளது. ஒருவர் வயிறு நிறைய சாப்பிட ரூபாய் 200 தேவைப்படும் என்கிறார் ஒரு பயணி. மாநிலம் முழுவதும் சாலையோர தனியார் உணவகங்களின் விலைக் கொள்ளை மற்றும் கழிப்பிட கட்டண கொள்ளை போலவே அரசுத்துறையின் உணவகத்திலும் நடைபெறுவது ‘வேலியே பயிரை மேய்வதுபோல’ அரசே மக்களை சுரண்டும் நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
கடமை தவறாதே…                                                                                                                                     எனவே மீண்டும் போக்குவரத்துக்கழக நிர்வாகமே மாமண்டூர் பயணவழி உணவகத்தை தனது பொறுப்பில் நிரந்தர ஊழியர்களை வைத்து சுகாதாரத்துடன் நடத்த வேண்டும். கழிப்பிட வசதியை பயணிகளுக்கு இலவசமாக அனுதிக்க வேண்டும். இங்கு உணவு வகைகளை தரமாக குறைந்த விலையில் வழங்கி பொதுப் போக்குவரத்து சேவைத்துறை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு தேவையான நிதியை முழுமையாக தமிழக அரசு கழக நிர்வாகங்களுக்கு அளித்திட வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும் இப்படி சுகாதாரமற்று பயணிகளிடம் தாறுமாறாக காசை பிடுங்கும் தனியார் உணவகங்களையும் ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்பதே நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் பணியாகும்.
வி.சாமிநாதன்

Leave A Reply

%d bloggers like this: