ஹர்கிஷன்சிங் சுர்ஜித் நகர் (ஹிஸ்ஸார்);
ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸாரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற எழுச்சிப் பேரணியுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 34ஆவது தேசிய மாநாடு செவ்வாயன்று துவங்கியது. அதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக்சர்க்கார் துவக்கவுரையாற்றினார்.ராஜஸ்தானிலும், மத்தியப்பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் விவசாயிகளின் பேரெழுச்சியை தொடர்ந்து ஹரியானாவிலும் விவசாயிகள் எழுச்சி பெற்று வருவதை மாநாட்டுக்கு திரண்டு வந்த விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பறைசாற்றினார்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் செங்கொடியேந்தி பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே ஹிஸ்ஸாருக்கு வந்து குவியத்துவங்கினார்கள்.ஹரியானாவில் மானோகர்லால் கட்டாரியின் தலைமையிலான பாஜக அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னேச்சரிக்கையாக இந்த பேரணி அமைந்தது. திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்கார், விவசாயிகள் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா, சிஐடியு தலைவர் டாக்டர் கே.ஹேமலதா உள்ளிட்டோர் பேரணியின் நிறைவாக நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.இதில் மாணிக்சர்க்கார் கூறுகையில், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் மாற்று சக்தி நாட்டுக்கு தேவையாக உள்ளது. இதற்கு தகுதியாக இடதுசாரிகளையே விவசாயிகள் நம்புகிறார்கள் என குறிப்பிட்டார். ஹன்னன் முல்லா பேசுகையில் நாடு இதுவரை பார்த்துள்ள பிரதமர்களில் விவசாயிகளுக்கு எதிரானவர் நரேந்திர மோடி எனக் குறிப்பிட்டார்.அகில இந்திய விவசாயிகள் சங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட நிலைப்பாடு சரியானது என்பதை நாட்டு நடப்புகள் நிரூபித்துள்ளதாக சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கூறினார்.மாலையில் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் நகரில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் அம்ரா ராம் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தார். அதைத்தொடர்ந்து தியாகிகளுக்கு பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.