சமூக அக்கறையோடு செயல்படும் ஒரு முன்னணித் தொழிற்சங்கம் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் (ஏஐஐஇஏ). அது ஒரு பலமான தொழிற்சங்க இயக்கமாக விளங்குவதற்கு அர்ப்பணிப்போடு செயல்பட்ட மூத்த தலைவர்களில் ஒருவர் தோழர் என்.எம். சுந்தரம். சக தோழர்களால் என்எம்எஸ் என்று உரிமையோடு அழைக்கப்படுகிறவர்.இவர் 1938ல் சென்னையில் பிறந்தவர். இவரது தந்தையின் பூர்வீகம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். தந்தை டி.ஆர். நாராயணன் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் டெவலப்மெண்ட் ஆஃபிசர் பொறுப்பில் பணியாற்றியவர். அந்தக் காலத்திலேயே ஊழியர் சங்க நிர்வாகியாக இருந்து போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர். ஆகவே நிர்வாகம் இவருக்கு ஓய்வு பெற வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே கட்டாய ஓய்வளித்து அனுப்பிவிட்டது. சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ராம்மனோகர் லொகியாவின் ஆதரவாளராக இருந்த அவர், 1942ம் ஆண்டின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திலும் கலந்துகொண்டார்.

“அப்பா சமூகப்பார்வை கொண்டவராக இருந்தார், அவரோடு நடத்திய விவாதங்களால் எனக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது,” என்று நினைவுகூர்கிறார் என்எம்எஸ்.புனே, மும்பை நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்த என்எம்எஸ், சென்னை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. படித்தார். தேசவுடமையாக்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனத்தில் என்.எம்.எஸ். 1957ல் வேலையில் சேர்ந்திருக்கிறார். வேலையில் சேர்ந்த அடுத்த ஆண்டே சங்கத்தின் கிளைச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 1961ம் ஆண்டு மண்டல (தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா) இணைச் செயலாளரானார். 1963ம் ஆண்டு தென்மண்டல பொதுச் செயலாளரானார். வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளில் கிளைச் செயலாளராக இருந்து தென்மண்டல பொதுச் செயலாளராக உயர்ந்தார் என்றால் இவருடைய செயல்முனைப்பு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்..1967ம் ஆண்டு எந்திரமயமாக்கல் (ஆட்டோமேஷன்) நடவடிக்கையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மற்ற தோழர்களுடனும் சேர்ந்து என்எம்எஸ் முக்கியப் பங்காற்றினார். இப்பின்னணியில் 1970ம் ஆண்டு என்.எம்.எஸ். சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1974ல் நிர்வாகத்த்தின் கதவடைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு, 1983ல் 14 நாள் வேலைநிறுத்தம் போன்ற வீரம் செறிந்த போராட்டங்களில் இவரது பங்கு முக்கியமானது. 1960களில் பம்பாயிலும், கல்கத்தாவிலும் கணினிகளைப் புகுத்த நிர்வாகம் முயன்றது. பம்பாயில் நிறுவிவிட்டார்கள். ஆனால் கல்கத்தாவில் அதை நிறுவ முடியவில்லை. இரவு பகலாக ஊழியர்கள் பல மாத காலம் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடினார்கள். ஒருநாள் இரவு முழுவதும் தோழர் ஜோதிபாசு ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்களோடு இருந்தார். ஆனால் 1980களில் நிர்வாகப் பணிகள் பரவலாக்கப்பட்டதாலும் விரைந்து பணி முடிக்க வேண்டியிருந்ததாலும் மைக்ரோ பிராசசர் என்ற கணினியை நிறுவ ஊழியர்கள் அனுமதித்தார்கள். நவீனமயமாக்க நிர்வாகம் முயல்கிறபோது தேவையையொட்டி சங்கத்தின் அனுமதியுடன்தான் கணினியை நிறுவிட வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் நிறுவனம் வளர்ச்சியடைந்தது.

இவ்வாறு, ஊழியர் நலன்களைப் பாதுகாத்து, நவீன தொழில்நுட்பம் குறித்த அறிவியல்பூர்வமான அணுகுமுறையை வகுத்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.1988ம் ஆண்டு என்.எம்.எஸ். சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ஐந்து முறையும், தலைவராக இரண்டு முறையும் தேர்வு செய்யப்பட்ட என்எம்எஸ், 16 ஆண்டு காலம் பிரதான பொறுப்புகளில் செயல்பட்டிருக்கிறார். சங்கமும், ஊழியர்களும் பல சவால்களை சந்தித்த காலகட்டத்தில் தோழர் என்எம்எஸ் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.1970ல் பம்பாயில், மத்திய அரசுடன் சமரசப் போக்கைக் கடைப்பிடித்த சிலர் சங்கத்தை உடைக்க முயன்றனர். சங்க ஒற்றுமையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்த என்எம்எஸ், அங்கே சென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போது முப்பது நாற்பது பேர் சேர்ந்து இவரைத் தாக்கினர்.

அதில் இவரது முகம், கை, கால்களில் பலத்த காயத்துடன் இரண்டு இடங்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. வன்முறைத் தாக்குதலுக்குப் பின்வாங்காமல், 25 நாட்கள் பம்பாயிலேயே தங்கியிருந்து சங்கத்தின் ஒற்றுமை சிதறாமல் பாதுகாத்தார் என்எம்எஸ். ஆம், கொள்கை சார்ந்த வியூகம் அமைப்பதில் வல்லவராக இருந்ததோடு நேரடித் தாக்குதலை எதிர்கொள்வதிலும் உழைக்கும் வர்க்கத்தின் வீரத்தை வெளிப்படுத்தினார்.காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதிக்க வேண்டுமென அமெரிக்க அரசு வற்புறுத்தியது. இந்தியாவில் காப்பீட்டுத்துறையில் அமெரிக்க கம்பெனிகள் மூலதனமிட

அரசு மறுத்தால் தடையை தகர்த்து அமெரிக்க கம்பெனிகள் நுழையும் என 1989ம் ஆண்டு அமெரிக்க அரசின் வர்த்தகச் செயலாளர் கார்லா “ஹில்ஸ் ஆணவத்தோடு அறிவித்தார். 1991ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராகவும், மன்மோகன்சிங் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்று நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கையை அமலாக்கத் துவங்கினார்கள். பொதுத்துறை தனியார்மயம் உள்ளிட்ட பல சவால்களை தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கங்களும் எதிர்கொண்டன. சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் என்எம்எஸ், சிஐடியு தலைவர் தோழர் பி.டி. ரணதிவேயின் ஆலோசனையைப் பெற்று நிலைமையை சந்திக்க புதிய உத்தியை உருவாக்கினார். அவ்வப்போது தோழர் பி. ராமமூர்த்தியுடனும் கலந்தாலோசித்தார். காப்பீட்டு ஊழியர்கள் நலன், நிறுவனத்தின் நலன், தேச நலன் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினைகள்.

இவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு சங்கத் தலைமை தனது தொலைநோக்குப் பார்வையை உருவாக்கியது. அதில் பிரதானமாகப் பங்காற்றினார் என்எம்எஸ்.இப்பார்வையுடன் ஊழியர்களை சங்கத் தலைமை தயார்ப்படுத்தியது. பொதுத்துறையை பாதுகாப்பது என்பது தனியார்மயமாக்கப்படுவதை தடுப்பது மட்டுமல்ல நிறுவனத்தினுடைய வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தக் கூடிய அடிப்படையில் ஊழியர்களின் பணிக்கலாச்சாரம் மேம்பட வேண்டுமென சங்கத் தலைமை ஊழியர்களை பயிற்றுவித்தது.

ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு, பொருளாதாரக் கோரிக்கை என்பதோடு சுருங்கிவிடாமல் பொதுத்துறை பாதுகாப்பு, மக்களுக்காகவும் போராடுகிற பொருளியல்பாதை என்பதான விரிந்த வியூகத்தை சங்கத் தலைமை வகுத்தது. அதனை வகுத்ததில் என்எம்எஸ் பாத்திரம் தலையாயது என்று அவரது சங்கத்தின் அன்றைய-இன்றைய தலைமுறைத் தலைவர்கள் ஒரே குரலில் கூறுகிறார்கள். காப்பீட்டுத் துறையை தனியார்மயமாக்கிட மத்திய அரசு தொடர்ந்து முயன்றது. அதை எதிர்த்து காப்பீட்டு ஊழியர் சங்கம் உறுதியாக போராடியது. இத்துறையில் அந்நிய நேரடி மூலதனம் 49 சதவிகிதம் வரை அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இருப்பினும் எல்ஐசி ஒரு சாதனைப் பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வளர்ந்துள்ளது. காப்பீட்டுத் துறையில் பல தனியார் நிறுவனங்கள் வணிகம் செய்கின்றன என்றாலும், ஆயுள் காப்பீடு என்றால் இப்போதும் எல்ஐசி-தான் மிகப் பிரதானமான நிறுவனமாக இயங்கிவருகிறது.

எல்ஐசி மற்றும் பொதுக் காப்பீட்டுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மக்களிடையே மேற்கொண்ட தொடர் பரப்புரை இயக்கம், கருத்தாக்கம் ஆகியவை, ஆயுள் காப்பீட்டில் தனியார்துறையைச் சேர்ந்த 23 நிறுவனங்களின் சந்தைப் போட்டியை எதிர்கொண்டு நிற்கப் பெரிதும் உதவியுள்ளன. எல்ஐசி-யின் சந்தைப்பங்கு 72 விழுக்காடு! இந்தச் சாதனைக்கு ஊழியர் சங்கத்த்தின் இந்த ஈடுபாடு மிக முக்கியக் காரணம் என்றால் மிகையல்ல. “ஒரு பொதுப் பிரச்சனைக்காக வேலைநிறுத்தம் என்றால் அந்தக் காலத்தில் ஒவ்வொரு பெண் ஊழியரின் வீட்டுக்கும் சங்கப் பொறுப்பாளர்கள் போவோம். அவர்களது கணவர்களைத் தனித்தனியாக சந்தித்து வேலைநிறுத்தத்தின் அவசியம் பற்றிப் பேசுவோம்,” என அன்றைய வெற்றிகரமான போராட்டங்களுக்கான வழிமுறை பற்றிக் கூறுகிறார் என்எம்எஸ். “இன்று ஏஐஐஇஏ-யின் மகளிர் துணைக்குழுக்கள் தொழில் சார்ந்த பிரச்சனைகளின் எல்லைகளைக் கடந்து, பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சிகளிலும் முனைப்போடு ஈடுபட்டிருப்பதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது,” என்கிறார்.

சங்கம் நடத்தி வரும் ‘இன்சூரன்ஸ் ஒர்க்கர்’ ஆங்கில மாத ஏட்டின் ஆசிரியராக பல ஆண்டு காலம் என்எம்எஸ் பணியாற்றினார். அதில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் நூல்களாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ‘தகர் நிலையில் நிதி மூலதனம்’ உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அகில இந்திய அளவிலான சங்கப்பணி மட்டுமல்ல, தமிழகத்தில் காப்பீட்டுக்கழக ஊழியர்களிடையே அரசியல் உணர்வை வளர்ப்பதிலும் கட்சியைக் கட்டும் பணியிலும் என்எம்எஸ் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.1970களின் துவக்கத்தில் சென்னையில் சிம்சன் நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது. அப்போராட்டத்தை ஒடுக்க முயன்ற அன்றைய திமுக அரசு அடக்குமுறையை ஏவிவிட்டது. போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் தொழிற்சங்கங்களை இணைத்து சென்னை தொழிற்சங்க கவுன்சில் உருவாக்கப்பட்டது.

அதில் தோழர் என்எம்எஸ் மையமான பங்காற்றினார். மாநில அளவில் சிம்சன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வர்க்க உணர்வோடு மற்ற தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தில் எல்ஐசி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.1992 பாபர் மசூதி இடிப்பிற்கு பின்னர் மதவெறி அரசியலின் தாக்கங்கள் தொழிற்சங்கத்திற்குள்ளும் ஊடுருவ முயன்றதைக் குறிப்பிடுகிறார் என்எம்எஸ். குஜராத்தில் ஓர் கோட்டமே சங்கத்திலிருந்து வெளியேறிவிட்டது. சங்க ஒற்றுமையைக் காக்கவும், மதவெறி அரசியலுக்கு எதிரான உழைப்பாளர் உணர்வை வலுப்படுத்தவும் அந்நேரம் இந்தியா முழுவதும் நிறைய பயணங்கள், கூட்டங்கள், உரையாடல்கள் என என்எம்எஸ் அயராமல் சுழன்றதைத் தோழர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக எல்ஐசி ஊழியர்கள் நின்றார்கள். அது பற்றி என்எம்எஸ் சொல்லிக்கொண்டிருந்தபோது இவருடைய துணைவியார் புனிதா சுந்தரம் தலையிட்டு சுவாரசியமான தகவல் ஒன்றைக் கூறினார்: “ஒரு நாள் திடீரென்று இரண்டு பேரை வீட்டில் கொண்டு வந்து இவர்கள் தலைவர்கள். இவர்களுக்கு சாப்பாடு போட வேண்டும், நம் வீட்டில்தான் தங்கவைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு என்எம்எஸ் போய்விட்டார். வந்தவர்கள் யார் என்று கூடச் சொல்லவில்லை. மூன்று நாட்கள் கடந்த பிறகுதான் ஒருவர் டிஆர்இயு தலைவர் அனந்த நம்பியார், இன்னொருவர் எஸ்ஆர்எம்யு தலைவர் நமச்சிவாயம் என்பதைச் சொன்னார். அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்யப் போலீஸ் தேடிக் கொண்டிருந்ததால் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

”தனது துணைவியாரும் இரண்டு மகன்களும் தன்னுடைய இயக்கப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்துவந்திருப்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் என்எம்எஸ். 1998ம் ஆண்டு தோழர் என்எம்எஸ் எல்ஐசி நிறுவனப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அதன் பிறகும் ‘இன்சூரன்ஸ் ஒர்க்கர்’ ஏட்டில் பல்வேறு அரசியல், பொருளதார, சமூகப் பிரச்சனைகள் பற்றித் தொடர்ச்சியாக எழுதி வந்தார். “அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் சங்கத் தலைமை சிறப்பாகச் செயல்பட்டு வருவதை நான் பெருமையாகவும் நம்பிக்கையோடும் காண்கிறேன்,” என்று உணர்வுப்பூர்வமாகக் கூறுகிறார். இளைய தலைமை குறித்த இவரது பெருமிதம், தன் காலத்தில் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதில் இவருக்கு இருந்த அக்கறையை வெளிப்படுத்துகிறது. “என்னை அரசியலின் பால் ஈர்த்து வழிநடத்தியவர் தோழர் வி.பி. சிந்தன். எனக்கு உறுதுணையாக இருந்த இராஜப்பா, கே.என். கோபாலகிருஷ்ணன் போன்ற தலைவர்களின் பங்களிப்பையும் மறக்கவியலாது,” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் இன்று உலகமய எதிர்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு, பாலின சமத்துவம், சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு என பன்முகத் தளங்களில் பயணிப்பதற்கான திசைவழி எப்படி உருவானது என்பதை என்எம்எஸ் சந்திப்பின்போது உணர முடிந்தது. தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டவராக துணைவியாருடன் வசித்து வருகிறார். கட்சி உறுப்பினராகத் தன்னால் இயன்ற பணியை செய்கிறார். 1957ம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தில வேலையில் சேர்ந்த என்எம்எஸ், 1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். இன்று 80 வயதைத் தொட்டுள்ள தோழர் என்எம்எஸ் கடந்த 60 ஆண்டுகாலமாக ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்து நிறைவேற்றிவரும் தொழிற்சங்க-கட்சிப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: