இந்தியாவில் நிலமற்ற தொழிலாளர்கள் 15 கோடி பேர், சிறு, குறு மற்றும் ஏழை விவசாயிகள், விவசாய வருமானம்போதாது, கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ள பேர் 18 கோடி பேர். அதுபோல தமிழகத்தில் நிலமற்ற தொழிலாளர்கள் 2011 சென்செஸ்படி 96 லட்சம்பேர், ஏழை சிறு விவசாய குடும்பங்கள், 35 லட்சம் பேர். இந்த மக்களின் வாழ்க்கையில் தான் பதவிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் மோடி அரசு மனிதாபிமானமற்ற முறையில் அடுத்தடுத்து தாக்குதல்களை கொடுத்தது என்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.மழையை நம்பித்தான் விவசாயம் என்பதால் ஆண்டுக்கு 8 மாதம், 9 மாதம் விவசாயத் தொழிலாளிக்கு வேலையில்லை என்ற நிலைமை. மேலும் கடந்த 40 ஆண்டுகளில் இயந்திர பயன்பாடு,
புதிய தொழில் நுட்பம், விவசாயம் சாரா தொழில்களுக்கு நிலங்களை எடுப்பது உள்ளிட்ட காரணங்களால் விவசாயத்தில் வேலை ஆண்டுக்கு 40, 50 நாட்கள் என இந்தியாவில் பெரும் பகுதியில் குறைந்து போனது.இதனால் தான் மாற்று வேலைத் திட்டம் மத்திய அரசு நிதியிலிருந்து கொண்டு வர வேண்டும் என 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடி, 2006ஆம் ஆண்டு“மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்” கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை, வறட்சி பாதித்த இடங்களில் 150 நாட்கள் வேலை தினக்கூலி ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வு அடிப்படையில் மத்திய அரசு நிர்ணயித்து வழங்க வேண்டும் என்பது உள்பட சட்டம் கொண்டு வரப்பட்டு அமலாக்கப்பட்டது. இத்திட்டத்தில் 2006இல் ரூ.9000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த நிதியாண்டில் 2016-17க்கு ரூ.48,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு பேருதவியாக இருந்தது.
முடக்க முயல்கிறார் மோடி
இந்த திட்டத்தை மோடி அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதத்திலேயே ரத்து செய்ய முடிவு செய்தார். இதைஎதிர்த்து போராடினோம். கடும் எதிர்ப்பு கொடுக்கப்பட்டதால் இந்தியாவில் உள்ள 637 மாவட்டங்களிலும் அமல்படுத்தமாட்டோம்; 200 மாவட்டங்களில் மட்டும்தான் அமல்படுத்துவோம் என்றார். மீண்டும் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பலமான எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டதால், சட்டத்தில் உள்ளபடி எல்லா மாவட்டங்களி லும் அமல்படுத்துவோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அமல்படுத்தும்போது நிதி ஒதுக்கீடு முழுவதையும் மாநிலங்களுக்கு அனுப்பவில்லை. 2014-15 ஆம் ஆண்டு ரூ.9,000 கோடி 2015-16 ஆம்ஆண்டு ரூ.11,000 கோடி, 2016-17 ஆம் ஆண்டு ரூ.13,000 கோடி பாக்கி வைத்தார். ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை தருவதற்கு பதிலாக 3 ஆண்டுகளிலும் முறையே 40, 42, 44 நாட்கள் தான் வேலை கொடுக்கப்பட்டது. கூலிபாக்கி 6 மாதம், சில இடங்களில் ஒரு வருடம் கூட தராத நிலைமையும் இருந்தது, வறட்சி பாதித்த இடங்களில் 150 நாட்கள் வேலை வழங்கப்படவில்லை.தமிழகத்துக்கான குறைந்தபட்ச கூலி 2014-15 க்கு ரூ.185, 2015-16 ரூ.203, 2016-17 ரூ.205 ஆகும். ஒரு வருடம் கூட முழு அளவு கூலி வழங்கப்படவில்லை. 50 சதவீதம், 70 சதவீதம் என்கிற அளவுக்கு தான் பெரும்பாலும் கொடுத்துள்ளனர்.இந்தவேலை திட்டத்தை சீரழித்து, சின்னாபின்னப்படுத்தி ஊழல், முறைகேடு ஆகியவைகளாலும், தொடர்ந்து மூன்றாண்டு கால வறட்சி சமயத்திலும் வேலை கொடுத்து, குறைந்தபட்ச கூலி கொடுக்காது வஞ்சித்த அரசுகள் மோடி அரசாங்கமும், மாநில அதிமுக அரசுமாகும்.
தகுதி உள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் வெட்டு
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், ஏழை மற்றும் சிறு, குறு விவசாயிகள் இதோடு கிராமப்புற இதர ஏழை உழைப்பாளர்கள் அனைவரும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான தகுதி உள்ள பயனாளிகளே ஆவார்கள். 60 வயதுக்கு மேலானவர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவி, விபத்து நிவாரணம், இவர்களுக்கும், இவர்கள் குழந்தைகளுக்கும் திருமண உதவி, கல்வி உதவி மற்றும் விதவைகள் உதவி, மாற்றுத் திறனாளிகள் உதவி போன்று பெறுவதற்கு மேற்சொன்ன ஏழை மக்கள் அனைவரும் தகுதியுள்ள பயனாளிகளே ஆவார்கள்.ஆனால் மோடி அரசு தகுதி உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் தர முடியாது. இவர்களில் ஆதரவற்றோர், வாரிசு, உறவுபோன்றது இல்லாதவர்களுக்குத் தான் தர முடியும் என மாநிலங்களுக்கு ஆணை யிட்டுள்ளது. இதனால் தகுதியான பயனாளிகள் குறைக்கப்பட்டனர். பணப்பயன்கள் குறைக்கப் பட்டது. இதனைத்தான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதிமுக அரசு பாஜகவை விட எவ்வளவு மோசமாக நடத்த முடியுமோ அவ்வளவு மோசமாக நடத்தி வருகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் ஊழல் மலிந்து கிடக்கிறது.
176 திட்டங்கள் ரத்து
மோடி ஆட்சிக்கு வந்த உடன் ஐந்தாண்டு திட்டங்களை ரத்து செய்தார். கார்ப்பரேட்களுக்கு, பெரும் முதலாளிகள், பெரும் நில உடைமையாளர்களுக்கு சேவை செய்ய “நிதி ஆயோக்” என கொண்டு வந்தார்.அதேசமயம் ஏழை,எளிய மக்களுக்கு, தொழிலாளர் களுக்கு, விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் 67 ஆண்டு காலங்களில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 37 சட்டங்களையும் 176 திட்டங்களையும் ரத்து செய்து விட்டார். இவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.50 லட்சம் முதல் ரூ.2000 கோடி வரையிலானவை ரத்து செய்யப்பட்டது. அந்த மக்கள் தங்கள் முன்பு பெற்ற பொருளாதார பயன்களை இழந்து நிற்கின்றனர்.அதோடு ஒரு திட்டத்தில் மேலும் 2, 3 திட்டங்களை சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தூய்மை பணி, வீட்டு வசதி, சுகாதாரம் போன்ற கிராமப்புற திட்டங்களை சேர்த்து செயல்படுத்துகின்றனர். இதனால் வேலை இழப்பு, பயன்களும் வெகுவாக குறைந்து போய் உள்ளது.
வறட்சி, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் மறுப்பு
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வறட்சியாலும், கடலூர் மற்றும் சென்னை அருகாமை மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் விவசாயத் தொழிலாளர்களுக்கும், கிராமப்புற உழைக்கும் மக்களுக்கும் எந்தவித நிவாரண உதவிகளும் மத்திய/மாநில அரசுகள் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு கூட சிறிதளவு உதவி கிடைத்தது. ஆனால் விவசாயத் தொழிலாளர்கள் அப்பட்டமாக மறுக்கப்பட்டார்கள்.
வீட்டுமனை, வீட்டு வசதி மறுப்பு
இந்தியாவில் 87 சதவீதம் குடும்பங்களுக்கு நிலம் கிடையாது. அதுபோல 54 சதவீதம் குடும்பங்களுக்கு வீடு கிடையாது. தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பங்கள் 40லட்சத்திற்கு மேலாகும். மோடி 2022-ஆம் ஆண்டு 175ஆவது சுதந்திர தினம் சமயம் அனைவருக்கும் வீடு கிடைக்கும் என்கிறார். இது அப்பட்டமான ஏமாற்று வேலை ஆகும். 2022இல் பாஜக ஆட்சி இருக்குமா? மோடி பிரதமராக இருப்பாரா? எதுவும் உறுதி இல்லை.அதுபோல தமிழ்நாடு அரசு வீட்டுமனை வழங்குவதை யும், வீடு கட்டி வழங்குவதையும் கிடப்பில் போட்டு விட்டது. விளம்பரத்திற்காக சில அறிவிப்புகள் வருகிறது. அதன் உண்மை தன்மை பெரும் ஏமாற்றத்தை தருவதாக உள்ளது.

நகர்ப்புற உழைக்கும் மக்களுக்கும் தேசிய வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்து
வறட்சி மற்றும் தொழில், வியாபாரம் முடக்கம் காரணமாக கிராமப்புற பகுதிகளிலும், நகர்ப்புற பகுதிகளிலும் வேலையின்மை பூதாகரமாக அதிகரித்து வந்துள்ளது. ஊழலாலும், ஊதாரித்தனத்தாலும், கார்ப்பரேட்டுகள், முதலாளிகள், பெரும் நில உடைமையாளர்கள் கொள்ளையடிப்பதாலும் மத்திய அரசின் பொருளாதாரமும், மாநில அரசின் பொருளாதாரமும் பெருமளவு சரிவடைந்துள்ளது.
பல சட்டங்களையும், திட்டங்களையும் வெட்டிவிட்டார்கள். பல சட்டங்களிலும், திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்டார்கள். தற்போது நிதிக்காக வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளையே நம்பி உள்ளார்கள்.முதலாளிகள் பெற்ற கடன் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கோடியை மோடி அரசு ரத்து செய்துள்ளது. முதலாளிகள் கொள்ளையடித்து சேர்த்த சொத்து ரூ.7 லட்சம் கோடியை செயல்படாத சொத்தாக வைத்துள்ளனர். வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் என இந்திய அரசு கடைசியாக சொன்னது ரூ.27 லட்சம் கோடி. இது உண்மையில்லை சுமார் ரூ.60 லட்சம் கோடிக்கு மேல் வரும் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.எனவே அரசு சொத்துக்கள் கொள்ளையடிக்கப் பட்டது.
முழுவதும் மீட்க வேண்டும். அதன்மூலம் நகர்ப்புற உழைப்பாளி மக்களுக்கும் தேசிய வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்கள் அனைவரின் உரிமைகள், சலுகைகள் பெற போதுமான நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். மக்களை பாதுகாக்க, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த இன்றைய தேவை தெருத் தெருவாக, கிராமம் கிராமமாக, வார்டு வார்டாகவும், பேரூராட்சி அளவிலும் உழை க்கும் மக்களை அமைப்பு ரீதியாக அணி திரட்ட வேண்டியது அவசியமானதாகும். அப்படி திரட்டப்பட்ட மக்களை மக்களின் பிரதான பிரச்சனைகளை வென்றெடுக்க தொடர்ந்து உறுதியான போராட்டங்களை நடத்தி மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மத்திய, மாநில அரசு களை பணிய வைப்போம்! வெற்றி கொள்வோம்!
எஸ்.திருநாவுக்கரசு, தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.