அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு அக்.3ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தி – முதலமைச்சரிடம் மனு கொடுப்பது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளது.மத்திய- மாநில ஆட்சியாளர்கள் தேசத்தின் மிகப்பெரிய எண்ணிக்கையை கொண்ட விவசாயத் தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் கவலையும் இல்லாமல், வெத்து அறிவிப்புகளை விளம்பரம் செய்து, பூகம்ப வெடிப்பை முடிமறைக்க முயற்சி செய்கிறார்கள்.அகில இந்திய அளவில் 22 கோடி பேர் கிராமப்புறவிவசாயக் கூலி தொழிலாளர்கள். தமிழ் நாட்டில் ஒரு கோடிப்பேர். தமிழக ஜனத்தொகையில் 17 சதவீதம் பேர்.

ஏ.லாசர்விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர்


மத்திய, மாநில அரசுகளின் விலைவாசி உயர்வுகொள்கை இவர்களின் வாழ்க்கையை அன்றாடம் சிதைத்து இடுப்பை ஒடிக்கிறது. வருடத்தில் 3 மாதம் வேலை செய்து 365 நாட்கள் வயிற்றை கழுவுகிறவர்களும் இவர்கள் தான். குடியிருக்க சொந்த வீடு இல்லாமல், புறம்போக்கிலும், பிளாட்பாரங்களிலும் வாழுபவர்களும் இவர்கள் தான். கல்வியறிவு இல்லாமல் அல்லது குறைந்த கல்வியை பெற்றுவிட்டு தரமான வேலையும், தரமான வாழ்க்கையும் இல்லாமல், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடமுடியாமல் உழன்று கொண்டு இருப்பவர்களும் இந்த ஏழைகள் தான். வறுமையின் உச்சம் நோயைத் தந்தால்… அந்த நோய்க்கு உரிய மருத்துவம் கிடைக்காமல், மருந்தும் கிடைக்காமல், அரசு மருத்துவமனை களில் ஆயிரக்கணக்கானோர் அகதிகள் போல் அடைக்கலம் புகுந்துள்ளனர். ஏழைப் பெண்கள் கர்ப்பஸ்திரியானால், சத்தான உணவு இல்லாமல் ரத்தச்சோகை நோய் தாயையும் குழந்தையையும் தாக்குகிறது.
இதனால் மரணத்தை அதிகம் சந்திப்பவர்களும் இந்த கிராமப்புற விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தான்.”நித்திய கண்டம் பூரண ஆயுசு ” என்ற நிலையில் சாவின் விளிம்பில் நின்று கொண்டு வளரும் இந்தியாவை இந்த மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவி, இலவச உதவி இவையெல்லாம் சாகக்கிடக்கும் மனிதனுக்கு தாகத்திற்கு தரப்படும் தண்ணீராக உள்ளது. வறுமையே வாழ்க்கையாகி போன மக்களுக்கு நிரந்தர பரிகாரங்களை அரசுகள் உண்டாக்கவில்லை. இதற்கு அரசின் பரிகாரம், மக்களை ஏமாற்றக்கூடியதாகவும் திசை திருப்பக் கூடியதாகவும் உள்ளது. இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலுவான நிர்ப்பந்தத்தினால் மன்மோகன்சிங் அரசு, 22 கோடி கிராமப்புற உழைப்பாளி களுக்காக தேசிய “ரேகா” கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச்சட்டம் எனும் சட்டத்தைக் கொண்டுவந்தது. நசிந்து வரும் விவசாயம், இயந்திர மயமாகி வரும் விவசாயத்தினால் இந்த உழைப்பாளிகளுக்கு வேலைதர முடியாது என்ற முடிவுக்கு வந்தது.
பின் அரசே கிராமப்புற விவசாய மேம்பாட்டுக்கான பணிகளையும் நீர் ஆதாரத்தை பலப்படுத்துவதின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திடும் விதத்தில் இந்தச் சட்டத்தை கொண்டு வந்தது. பின்பு மோடி அரசு வந்த உடனேஇந்தச் சட்டத்தை ரத்து செய்ய எவ்வளவு இடையூறுகளை செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து பார்த்தது. மோடி அரசில் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சராக முதலில் பொறுப்பேற்ற நிதின் கட்காரி, சட்டம் இருக்கும்போதே, சட்டத்திற்கு எதிரான உத்தரவுகனை பிறப்பித்தார். எதிர்க்கட்சிகள், வலுவாக நாடாளு மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராட்டங் களை நடத்தியதால் அந்த சட்டத்தை ரத்து செய்யமுடியவில்லை.இப்போதும் அதை கண்துடைப்பு நடவடிக்கை யாக்க முயற்சிக்கிறார்கள்.மத்திய அரசு ரேகா திட்டத்திற்கு அதிகபட்ச மாக ஒரு ஆண்டிற்கு ஒதுக்குவது ரூ.40 ஆயிரம் கோடிதான்.
இந்தப் பணத்தையும் முழுமையாக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட அடிப்படையில் அந்தந்த ஆண்டே அனுப்புவது இல்லை.தமிழ்நாட்டிற்கு கூட கடந்தாண்டு தர வேண்டியதில் 1,100 கோடி ரூபாயை இந்தாண்டு தான் கொடுத் தார்கள். அதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கு 6 மாதத்திற்கு மேல் சம்பளப்பாக்கி இருந்தது.இந்தியாவில் 22 கோடி விவசாயத் தொழிலாளர்கள், இவர் களுக்கு வருடம் 100 நாள் வேலையும்,அதற்கு சராசரியான தினக்கூலி 200 ரூபாய் தந்தாலும், வருடத்திற்கு 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு வழங்குவது ரூ. 40 ஆயிரம் கோடி மட்டுமே. சட்டப்படி அரசு அறிவித்த அடிப்படையில் அவர்களுக்கு தர வேண்டிய பணம் ரூ. 4.4 லட்சம் கோடியாகிறது. ஆனால், இந்த 40 ஆயிரம் கோடி ரூபாயை 22 கோடி விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை கொடுத்து, சம்பளமாக பிரித்துக் கொடுத்தால், தினம் 6 ரூபாய் தான் கூலியாக கிடைக்கும்.அதனால் தான் ரேகா சட்டம் முழுமையாக நாம் எதிர்பார்த்த அடிப்படையில் தேசத்தில் அமலாகவில்லை. அதிலும் தமிழ்நாட்டில் 528 பேரூராட்சிகள் உள்ளன.
இவை அனைத்தும் 99 சதவீதம் விவசாயத்தை நம்பி வாழும் மக்களை கொண்ட பகுதியாகும். ஊர் பெரியதாக இருப்பதினால் பேரூராட்சி என்று கூறிவிட்டு, இதை நகர் பாலிகாவில் சேர்த்து ரேகா வேலையில்லை என அரசு அறிவித்துவிட்டது. இங்கே 40 லட்சம் விவசாயக் கூலி தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருப்பதுபோன்ற நிலை இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பேரூராட்சியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் தங்களுக்கும்ரேகாவின் மூலம் வேலைகள் வழங்க வேண்டு மென்று 10 வருடமாக போராடி வருகின்றனர். மத்தியஅரசு இதுகுறித்து எந்த கவலையும் கொள்ள வில்லை. தமிழகத்தில் உள்ள மாநில அரசும் நாம்சொல்வதை காது கொடுத்து கேட்பதே இல்லை.பெரும் முதலாளிகளுக்கு 2.5 லட்சம் கோடிகடன் தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு. ஆனால்,இதே பெரும் முதலாளிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் வங்கிகளில் வாங்கியுள்ள 8.5 லட்சம் கோடி ரூபாய் கடனை வசூல் செய்வதற்கு ஒரு நோட்டீஸ் கூட விட மறுக்கிறது.
இதுகுறித்துரிசர்வ் பேங்க் கவர்னர் மோடியிடம் விளக்கம்கேட்டால், பெருமுதலாளிகள் கௌரவமானவர்கள். அவர்கள் வாங்கிய கடனுக்குக்காக நோட்டீஸ் விட்டால் அவர்களின் கௌரவம் பாதிக்கப்படும் என்கிறார் மோடி.ஆனால் 22 கோடி விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, சட்டத்தையும் அமல்படுத்த மாட்டேன், சட்டக் கூலியையும் தரமாட்டேன். ஒதுக் கீடு செய்த பணத்தையும் காலத்தில் தரமாட்டேன். வேலை நாட்களையோ சம்பளத்தையோ விலைவாசி உயர்வுக்கு ஏற்ற அடிப்படையில் உயர்த்தித் தரமாட்டேன். பேரூராட்சிப் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கும் ரேகாவை விரிவுபடுத்தமாட்டேன் என்றால், இந்த ஆட்சி ஏழைகளுக்கானதா? பணக்காரர்களுக்கானதா? என பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.
உழைப்பாளிகளின் வாழ்வை பாதுகாத்திட, அவர்கள் ஒன்றுபட்டு நின்று, போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.எனவே தான் அக். 3 ஆம் தேதி விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சென்னையில் பிரம்மாண்டபேரணி நடத்தி, முதலமைச்சரிடம் நேரடியாக மனு கொடுக்க இருக்கிறார்கள். பல லட்சம் கிராமப்புற உழைப்பாளிகளின் உணர்வை, அரசுமதிக்க வில்லை என்றால், அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய நெருக்கடியை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே மத்திய அரசும் மாநில அரசும் இந்த கிராமப்புற உழைப்பாளிகளின் வாழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.