இன்றைக்கும் தமிழகத்தின் முக்கியத் தொழிலாக பிரதானமாக இருப்பது விவசாயமே. ஒரு கோடி விவசாயத் தொழி லாளர்கள், 50 லட்சம் ஏழை, சிறு விவசாயிகள் வேலைவாய்ப்பை பெற்று வாழ்க்கை நடத்தி வந்த துறைவிவசாயம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சராசரியாக 150 நாட்கள் கிடைத்து வந்த வேலை சமீப ஆண்டு காலமாக 90 நாட்கள் வேலை கிடைப்பதே மிகவும் அரிதாக இருக்கிறது. பருவ மழை பொய்த்துப் போன பின்னணியில் மிச்சசொச்சமிருந்த வேலைகளையும் எந்திரங்களே பிடுங்கிக் கொண்டன.

நவீன எந்திரம் எங்கே பயன்படுத்துவது?

வேலை வாய்ப்பை பறிக்காத, நவீன எந்திரங்களை வரவேற்கவே செய்கிறோம்.சொட்டு நீர்பாசனம், சோலார் மின் மோட்டார் , தேக்கங்களில் நவீன எந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது உணவு உற்பத்திற்கும், வேளாண்மை வளர்ச்சிக்கும் உதவவே செய்யும். பசுமைப் புரட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிற்பகுதியில் எந்திரங்களின் படையெடுப்பால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளர் வாழ்க்கை முடங்கிப் போனது.

விவசாயம் முழுமையும் இயந்திரமயம்!

நெல் உற்பத்தியில் விதைப்பு முதல் அறுவடைவரை விவசாயம் முழுமையும் எந்திரமாகிவிட்டது. நடவு, களையெடுப்பு, அறுவடை என்று அனைத்து வேலைகளையும் மனிதனுக்கு எந்திரங்கள்விட்டுவைக்கவில்லை. கரும்பு உற்பத்தியில் கரும்புகரணைகளை விதைக்கவும் இளங்கரும்புக்கு மண் அணைத்து பார் போடவும், கரும்பு அறுவடை செய்யவும், தனித்தனியாக நவீன எந்திரங்களை எல்லா சர்க்கரை ஆலைகளும் விவசாயி களுக்கு சிபாரிசு செய்துள்ளன.கம்பு, சோளம், சூரியகாந்தி மற்றும் சிறு தானியங்களை விதைக்கவும், களைவெட்டவும், உரமிடவும், அறுவடை செய்யவும் எந்திரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதன் நீட்சியாகவே ஓட்டுநரே இல்லாத டிராக்டர் விவசாயத்தில் ஈடுபடுத்தப் போவதாகவும் ஒரு கம்பெனி அறிவித்துள்ளது.

மனிதர்களை ஏற்றுமதி செய்யும் தேசம்!

வேலைக்காக மனிதர்களை வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்யும் தேசத்தில் இருக்கும் வேலையைகபளீகரம் செய்யும் இயந்திரங்களை இந்திய அரசு இறக்குமதி செய்கிறது. தமிழகத்தில் பயன்படுத்தபடும் எந்திரங்கள் இத்தாலி, ஜெர்மன், கனடா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் நேரடியாகவும் இந்திய பெருமுதலாளிகளின் நிறுவனங்களோடு இணைந்தும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. களை எடுப்பான், விசைதெளிப்பான், பவர் டில்லர் போன்ற சிறிய எந்திரங்கள் ஒன்றிரண்டு தவிர பெரும்பாலும் வெளிநாட்டு கம்பெனிகளே தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்கிறது. அறுவடை மெஷின் ஒன்றின் விலை ரூ.80லட்சம் முதல் ரூ. 2கோடி வரை விலை போகிறது.

ஒரு நடவு மெஷின் விலை ரூ. 40 லட்சம் முதல் ரூ. 1.50 கோடி வரை விற்கப்படுகிறது. இந்த எந்திரங்களை ஏழை சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்படுத்துவது நடக்க முடியாதவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாய் முடிந்து போகிறது. பணக்கார விவசாயிகள், பெரும் நிலப்பிரபுக்கள், காண்ட்ராக்டர்கள் கூட்டுறவு வங்கிகளிலும் மத்திய அரசின் தேசிய வங்கிகளிலும் கடனை பெற்று 5௦ சதவீதம் வரையிலான அரசு மானியங்களையும் பெற்று எந்திரங்களையும் வாங்குகிறார்கள். மழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடு காரணங்களினால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது எந்திரங்களுக்கான கடனும் தள்ளுபடியாகிறது. இத்தோடு சேர்ந்து விவசாயத்திலிருந்து விவசாயத் தொழிலாளர்களை முற்றிலும் தள்ளிவைக்கிற காரியத்தை அரசே முன்னின்று செய்கிறது.

இயந்திரமயமான அரசுப் பணிகள்

2016-2017 நிதியாண்டில் தமிழக அரசு 590 மையங்களில் இயந்திரங்களை வாடகைக்கு கொடுக்க ஏற்பாடு செய்தது. தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மார்ச் மாத தொடக்கத்தில் ரூ.100 கோடியில் வறட்சியால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு குடிமராமத்துகள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பணிகள் செய்யவிருப்பதாகவும் அறிவித்தார்கள். ஒரு சில வேலைத் தளங்களில் கூட மனிதச் சக்தியை பயன்படுத்தி வேலைகள் நடைபெறவில்லை. அரசாங்கம் கொடுத்த நூறு கோடியை காண்ட்ராக்டர்களும் ஆளும் கட்சி பிரமுகர்களும் பொக்லைன் எந்திரங்களின் முதலாளிகளும் கூட்டாக கொள்ளை கொண்டு போனதே மிச்சம்! எந்த தொழிலாளிக்கும் வேலை கொடுக்கலை. ரூ.64.50 கோடியில் கடந்த ஆண்டில் இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ.4000 குறுவை – சம்பா சாகுபடிக்கு தரப்பட்டது. இதனால் வேலை இழந்து தவிக்கும் பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளில் அப்புறப்படுத்தும் அற்பத்தனமான வேலையை அரசே முன்னின்று செய்தது. கை நடவுப் பணியில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ரூ.4000 கொடுத்தால் அரசின் குடியா முழுகிவிடும்? விவசாயத் தொழி லாளர்களிடத்தில் கையூட்டு பெற முடியாது என்பதாலும், இயந்திரம் என்றால் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடலாம் என்பதை தவிர வேற என்ன இருக்க முடியும்.

மேமாத்தூர் போராட்டம்

விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத போது எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என அரசின் கொள்கைதெரிவிக்கிறது. நடைமுறையில் நடப்பதோ வேலையிழந்து தவிக்கும் தொழிலாளர் குடும்பங்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக இருக்கிறது. நாகை பணி மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர் கிராமத்தில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடியில் நடவு இயந்திரம் பயன்படுத்தியதை எதிர்த்து பெண் விவசாயத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இயந்திரத்தை வெளியேற்றி தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் நடவு வேலை கோரி தொடர் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் எண்பது பேர் மீது வழக்குப் பதிந்து அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் துப்பாக்கியை கொண்டு வயல்காட்டு வரப்புகளில் நின்றுகொண்டு பெண் விவசாயத் தொழிலாளர்களை கடுமையாக மிரட்டியது. இருப்பினும் பின்வாங்காத உறுதியான போராட்டத்தால் மாவட்ட நிர்வாகம் பணிந்தது. மிராசுதாரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு வேலை பெறப்பட்டது.

காலியாகும் கிராமங்கள்

விவசாய வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் வேலை தேடி பெரு நகரங்களுக்கும், மொழி புரியாத வெளிமாநிலங்களுக்கும் அகதிகளாக திரிகின்றனர். கிடைக்கும் வேலையோ பாதுகாப்பற்ற வகையில்மீள முடியாமல் கொத்தடிமைகளாக சிக்க வைக்கிறது. பெண் விவசாயத் தொழிலாளர்கள், குழந்தைகள், முதியவர்கள் எந்த பராமரிப்பும் இல்லாமல் அரை வயிற்று கஞ்சிக்கும் வழியில்லாமல் கிராமங்கள் முடங்கியே கிடக்கின்றன. வேலை தேடி வெளியில் சென்ற குடும்பத் தலைவரின் வருகையை ஏங்கி நிற்கிறது. கிராமத்தில் இனி வாழ முடியாது என்பதால் இளவயது பெண்களும் முறைசாரா தொழில்களுக்கும், கட்டுமான தொழில்களு க்கும் நகரத்தை நோக்கியே செல்கின்றனர். இதேநிலை தொடரும்போது கிராமங்கள் முற்றி லும் மனிதர்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் நெருங்கி வருகிறது. எனவே இருக்கும் வேலையை பறிக்கும் இயந்திரத்தை எதிர்த்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளோம்!

Leave A Reply

%d bloggers like this: