வீ.அமிர்தலிங்கம் மாநில பொதுச்செயலாளர்(பொறுப்பு), அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்


 
தமிழ்நாட்டில் 64 சிறப்பு நிலை, 202 தேர்வு நிலை, 200 முதல் நிலை, 62 இரண்டாம் நிலை என 528 பேரூராட்சிகள் உள்ளன. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிச் சட்டத்தின் கீழ் பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. ஊராட்சிகளை விட பரப்பளவில் பெரிதாகவும் மக்கள் தொகையில் அதிகமாகவும் உள்ளதால் பேரூராட்சிகள் என அன்றைய பிரிட்டிஷ் அரசு வகைப்படுத்தி வைத்ததை இன்றும் நாம் தொடர்கிறோம். இவைகள் ஊராட்சித் தன்மை கொண்டவையாகவே இன்றும் உள்ளன. பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது, குறிப்பிடும்படியான தொழில் நிறுவனங்கள் இங்கு இல்லை. விவசாயத்தில் ஏற்பட்டுள்ள அனைத்துவிதமான நெருக்கடிகளும், பாதிப்புகளும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், இங்குள்ள சுமார் 40 லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கும் உள்ளது. மாற்று வேலை ஏதுமின்றி வறுமையும், பட்டினியும் இவர்களுக்கும் சொந்தமாகிறது.
தீயாய் திரண்டெழுந்த விவசாயத் தொழிலாளர்கள்
பேரூராட்சி பகுதியிலுள்ள மக்கள், தங்களுக்கும் 100 நாள் வேலை வேண்டும் என கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 2016 ஆம் ஆண்டு துவங்கி 300க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளிலும், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. இதில் ஏறக் குறைய 3 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்று வேலை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.போராட்டங்களுக்கு திரண்ட மக்களை, ஆளும் கட்சி அமைச்சர்கள் பின்னணியில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு வரவிடாமல் தடுக்க முயற்சித்ததும், அதை தகர்த்து தம்மை ஏமாற்றி வருபவர்களுக்கு எதிராக வெந்தணலாய் வெகுண்டு எழுந்ததையும் பார்க்க முடிந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் அருணாச்சலம் என்ற மூத்த பெண்மணி போராட்டத்திற்கு பெண்களோடு புறப்பட்டு வந்தபோது வாகனத்தை மறித்து போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என மிரட்டி, தாக்க வந்த ஆளும் கட்சி பிரமுகரை கையில் இருந்த கொடிக் கட்டையை, தடிக் கட்டையாக மாற்றி உரியவாறு எதிர்க்கொண்ட நிகழ்வும் நடந்தேறி உள்ளது. சில மாவட்டங்களில் பங்கேற்ற பெண் விவசாயத் தொழிலாளர்கள், மாநிலத்தலைவர் தோழர்.ஏ.லாசர் அவர்களிடம் “இந்த வேலையை பெற்றுத்தர போராடும் இந்த சங்கமே எங்களின் குலசாமி” என உணர்ச்சிமயமாய் உச்சரித்த வார்த்தைகளோ ஏராளம் ஏராளம்.
பதில் கூட தராத ‘ப’னாக்கள்
கடந்த 28.12.2016 அன்று வறட்சி நிவாரணத்திற்கான அமைச்சர்கள் குழுவினருடனான சந்திப்பிலும் 11.01.2017 அன்றைய முதலமைச்சர் திரு.பன்னீர் செல்வம் அவர்களையும், 08.08.2017 இல் முதலமைச்சர் திரு.பழனிசாமி அவர்களையும் நேரில் சந்தித்தும், பல முறை தபால் மூலமும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் லட்சக்கணக்கான மக்களின் போராட்ட உணர்வுகளையும் கோரிக்கைகளையும் அவமதித்து ஒரு பதிலை கூட இன்று வரை வழங்காதவர்களின் ஆட்சியே இன்றும் தொடர்கிறது.
சட்டத்தை திருத்து… திட்டத்தை கொண்டு வா…
2003ஆம் ஆண்டில் (17.02.2013) கடிதம் எண்.6242 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசுச் செயலாளர் திரு.எல்.என்.விஜயராகவன் அவர்கள் கடிதத்தின் படி 30 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகைக் கொண்டுள்ள பேரூராட்சிகளை சிறப்பு ஊராட்சிகளாக மாற்றியமைத்திட ஏதுவாக பேரூராட்சி மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அன்று இருந்த 611 பேரூராட்சிகளில் 568 பேரூராட்சிகள் சிறப்பு ஊராட்சிகளாக மாற்றம் செய்யப்பட்டது. அதனடிப்படையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் 15 அம்சத்திட்டமும் – மத்திய அரசின் கிராமப்புற மக்களுக்கான திட்டங்களும் செயல்படத் துவங்கின.2005-06 ஆம் நிதி ஆண்டில் இடதுசாரிகளின் முன் முயற்சியால் 100 நாள் வேலைத்திட்டம் முதல் கட்டமாக வேலூர், விழுப்புரம், கடலூர், நாகை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அமலுக்கு வந்ததும் அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.பின்னர் 2006இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் மீண்டும் பேரூராட்சிகளாக மாற்றம் செய்யப்பட்டதால், ஊரக வேலைத்திட்டம் பேரூராட்சிப்பகுதிகளில் ஓராண்டு அமலாக்கத்துடன் முடிந்தே போனது.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளில் பெரிய அளவிற்கான சட்டத்திருத்தங்கள் ஏதும் செய்யப்படாத நிலையில், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் பிரிவு 3க்ஷ உட்பிரிவு (ஐ)ன் கீழ் வெளியிடப்பட்ட முந்தைய அறிவிக்கையை ரத்து செய்திட, அதே சட்டத்தில் பிரிவு 3-க்ஷ உட்பிரிவு (ன)ன் வகை செய்கிறது. இந்த நடைமுறைகளின்படி தற்போதும் தமிழக அரசிற்கு மனமிருக்குமானால் சிறப்பு ஊராட்சிகளாக மாற்றிடவும் – கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை அமல்படுத்திடவும் முடியும் என விதொச உறுதியுடன் நம்புகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.