கடந்த 25 ஆண்டுகளாக நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகள் குறிப்பிட்ட காலங்களில் பெய்வதில்லை. இதனால், மழையை நம்பி வாழக்கூடிய விவசாயிகள் மற்றும் விவசாயப் பணிகளை நம்பி வாழும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை பெரும் இன்னலுக்குள்ளாகி மிகக் கடுமையாக சீர்குலைந்துள்ளது. மறுபுறம் வேலை வாய்ப்புக்களும் குறைந்துள்ளது. இக்காலத்தில், புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது விவசாயிகளின் உற்பத்திச்செலவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2010-11-ஆம் ஆண்டு நெல்விவசாயி ஒரு குவிண்டாலுக்கு 39 சதவிகிதம் லாபம் ஈட்டினார் என்றால் 2015-16-ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதே. முக்கியமாக கடந்த 10 ஆண்டுகளில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், விவசாயம் மிகவும் நஷ்டமான தொழிலாக மாறி விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக விவசாய வேலைகளை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வும் மிகப்பெரிய கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதேபோல, நகரத்திற்கும் கிராமத்திற்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த இடைவெளியை குறைக்கவில்லையென்றால் நகரங்களை நோக்கியே மக்களின் இடப்பெயர்வு அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் கூடுதலாகும்.2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அதற்கான திட்டங்களை வகுக்காமல் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கு அளித்து வருகிறது. வாக்குறுதிகள் மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையில்தான் இதற்கு மாற்று வேலையாக நூறுநாள் வேலைத்திட்டம் வருகிறது.கிராமப்புற நூறுநாள் வேலைத்திட்டம் தமிழ்நாட்டில் 12,524 கிராம ஊராட்சிகளிலும் அமலாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்த சட்டப்பூர்வக்கூலியை ரூ.205 எந்த கிராம ஊராட்சியிலும் அமலாகவில்லை.
ஆண்டுக்கு 100 வேலை கொடுப்பதற்குப் பதிலாக 60, 70 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு மழையின் அளவு குறைந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியது. இதைக் கணக்கில் கொண்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் நூறுநாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கடந்த காலங்களில் போராட்டங்களை நடத்தியது. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு இடையில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் 4.8.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை எடுத்துக்கூறி நூறுநாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். இதன் விளைவாக 150 நாட்கள் வேலை என்று மத்திய, மாநில அரசுகளால் அறிவிப்பு வந்தது. அது இன்றுவரை அறிவிப்புகளாகவே உள்ளது.
100 நாள் வேலையையே முழுமையாக வழங்காத மாநில அரசு 150 நாட்கள் வேலையை எப்படி உயர்த்தி வழங்கும்? வேலைகள் நடைபெறும் இடங்களில் வேலை விபரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஓய்வெடுக்க நிழல்வசதி, மருந்துகளுடன் கூடிய முதல் உதவிப்பெட்டிகள் வைக்க வேண்டும். இதில் ஏதுவும் நடைமுறையில் இல்லை. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 5க்கும் மேல் அழைத்துவந்தால் குழந்தைகளைக் கவனிக்க ஒரு பெண்ணை நியமிக்க வேண்டும் என்ற விதியும் அமலாகவில்லை. வருகைப்பதிவேடு, வேலை அட்டை பதிவேடு, வேலை மதிப்பீடு, வேலை அளவீட்டுப் புத்தகம் மற்றும் வேலை தொடர்பான அனைத்து விபரங்களும் கேட்டால் காண்பிக்க வேண்டும்.
எந்த ஊராட்சியிலும் செய்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் என்பதை ஊராட்சி அலுவலகத்திலோ அல்லது வேலை நடைபெறும் இடங்களிலோ எழுதி ஒட்ட வேண்டும் என அரசு உத்தரவு இருந்தும் அமலாகவில்லை. கடந்த மூன்று மாதங்களாக செய்த வேலைக்கு சம்பளம் வழங்கவில்லை. இதன் விளைவாக சட்டத்தின்படி நேர்மையான முறையில் நடைபெற வேண்டிய நூறுநாள் வேலைகள் ஊழல் மலிந்து வெறும் சடங்குபோல அமலாகுவது வேதனைக்குரியது. எனவே மத்திய, மாநில அரசுகள் நூறுநாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.செய்த வேலைக்கு மூன்று மாதங்களாக வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.விலைவாசியைக் கணக்கிலெடுத்து ரூ.205 சட்டப்பூர்வக் கூலியை ரூ.400-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்.3இல் விவசாயத் தொழிலாளர்களின் பேரணி-ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
எஸ்.சங்கர்

Leave a Reply

You must be logged in to post a comment.