புலிகள், சிறுத்தைகள், யானைகள் எல்லாம் சமீப காலமாக ரோஹிங்கியா அகதிகள் போல காட்டை விட்டு நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. கிடைத்த ஆடுமாடுகள், நாய்கள் போன்ற விலங்குகளைத் தாக்கி உண்பது, மனிதர்களையும் தாக்குவது என்பது நடைமுறையாகியிருக்கிறது.

அவற்றின் தாக்குதல்களை `அட்டகாசம்’ என நாம் வர்ணிக்கிறோம். தங்கள் இருப்பிடங்களை இழக்க நேரிடும்போது அவை கடும் சீற்றம் அடைவது இயற்கைதான் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. காடுகளுக்குள்ளே வெகு தூரத்திற்கு தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டே போவது மனிதர்களுக்கு இன்று வழக்கமாகிவிட்டது. இதனால் காட்டு உயிர்களின் வசிப்பிடப் பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. உணவு, தண்ணீரைத் தேடியும் விருப்பம்போல் சுற்றித் திரியவும் காட்டு விலங்குகளுக்கு இடம் தாராளமாகத் தேவை. அந்த இடம் சுருங்கும்போது நகரங்களுக்கு இடம் பெயர்வதைத் தவிர அவற்றுக்கு வேறு வழி கிடையாது. விலங்குகளுடன் மோதலை வரவழைத்துக் கொள்வது நாம். மோதலுக்குப் பிறகு அவற்றைக் குற்றம் சாட்டுவதில் பொருள் இருக்கிறதா?காடுகளை விட்டுத் துரத்தப்படுவது பெரிய விலங்குகள் மட்டுமல்ல. தாங்கள் வசித்துவந்த பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியை பாலூட்டிகள் இழந்துவிட்டன என ஸ்டான்ஃபோர்ட் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Proceedings of the National Academy of Scidnces என்ற இதழில் தங்களது கண்டுபிடிப்புகளை பிரசுரித்துள்ள அவர்கள் நமது எதிர்பார்ப்பிற்கு முன்னதாகவே பூமியின் ஆறாவது உயிர்களின் பேரிழப்பினை நாம் சந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிடும் என எச்சரிக்கின்றனர். மீன்கள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, ஊர்வன, பாலூட்டிகள் போன்ற முதுகெலும்புள்ள விலங்குகள் பரப்பளவிலும் எண்ணிக்கையிலும் 30 சதவிகிதம் வரை இழப்பைச் சந்தித்துள்ளன என்கிறார் மேற்கண்ட ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரொடால்ஃபோ டிர்ஜோ. இந்த உயிரினங்களின் அழிவு உலக அளவில் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.இயற்கையில் உயிரினங்களின் அழிவு எப்போதுமே நடந்துவருவதுதான். ஆனால் நவீன உலகத்தில் நாம் அதை வேகப்படுத்திவிட்டோம். இன்று இயற்கையில் நடைபெறும் அழிவின் அளவு 100-லிருந்து 1000 மடங்கு வரை கூடிவிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் 27000 உயிரினங்கள் அழிந்துவருகின்றன என்றால் அதன் அபாய வேகத்தை நாம் புரிந்து கொள்ளலாம். காடுகளில் 20,000 சிங்கங்கள், 7000-க்கும் குறைவான சிறுத்தைப் புலிகள், 500-லிருந்து 1000 வரை ராட்சதப் பாண்டாக்கள், சுமார் 250 சுமத்திரா காண்டாமிருகங்கள் மட்டுமே தற்போது உயிர் வாழ்ந்து வருகின்றன. பூமியின் வரலாற்றில் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் பெரிய விண்கல் மோதியதில் பூமியில் அப்போது வாழ்ந்த உயிரினங்களில் நான்கில் மூன்று பகுதி-டைனோசர்கள் உட்பட அழிந்தன. அதற்குப் பிறகு உயிரினப் பன்மைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அழிவாக ஸ்டான்ஃபோர்ட் ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். தற்போது நடந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் பேரழிவுத் துயரத்திற்கு மனிதர்களின் பேராசையே காரணம். என்ன விலை கொடுத்தேனும், இயற்கையை அழித்தாவது தங்களை வளப்படுத்திக்கொண்டே தீர வேண்டும் என்ற மனிதர்களின் வெறியே காரணம்.

வேகமாகப் பெருகிவரும் மக்கள் தொகை, தேவைக்கதிகமான நுகர்வினால் ஏற்படும் கேடுகள், காற்றையும் தண்ணீரையும் மாசுபடுத்தி பயன்பாட்டிற்குத் தகுதியற்றதாக ஆக்குவது, குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள், பெரிய பெரிய கடைகள் ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டே போய் மரங்களையும் காடுகளையும் அழிப்பது, எரிபொருள், தாதுப்பொருட்கள், மரம், ஆற்றல் ஆதாரங்கள் ஆகியவற்றின் நுகர்வை அதிகரித்துக் கொண்டே போவது, புலிகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் பிற பெரிய விலங்குகளை மருந்துகள், அலங்காரப் பொருட்கள் தயாரிக்க வேட்டையாடுவது போன்ற பல்வேறு செயல்களால் மனிதர்கள் தங்களையும் இயற்கையையும் அழித்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றால் அது சற்றும் மிகையல்ல.இன்று நாம் பார்க்கும் விலங்குகளை சில ஆண்டுகளுக்குப் பிறகு வருங்காலத் தலைமுறையினர் அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்க முடியும் என நாம் ஜோக் அடிக்கலாம். ஆனால் இதில் நகைச்சுவை ஏதும் இல்லை. உயிரினப் பேரழிவு உலகையே அச்சுறுத்துவது நிதர்சனம். எப்பாடுபட்டாவது நாம் அதைத் தடுத்தே ஆக வேண்டும். விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நாம் விழித்துக் கொள்வது எப்போது?

(நன்றி ; ஆகஸ்ட் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில்ஹசன் ஜவைத் கான் எழுதியுள்ள தலையங்கம்)

Leave A Reply

%d bloggers like this: