கோவை, செப். 28-
விவசாய கடன் வழங்குவதில் வங்கி மேலாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு முறையாக வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் பங்கேற்று பேசுகையில், கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த காரணத்தால் விவசாயிகள் தற்போது வறட்சியில் இருந்து மீண்டு விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், கடந்த கால வறட்சியின் காரணமாக விவசாயம் செய்வதற்கு பணவசதி இல்லாத காரணத்தால் வங்கிகளில் விவசாயிகள் கடன் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆனால், வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதை மேலாளர்கள் பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை அன்னூர் ஒன்றியத்தில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாயிகள் கடன் கேட்டு விண்ணப்பித்தபோது, மேலாளர் வங்கியில் பணம் இல்லை என விவசாயிகளை திருப்பி அனுப்பி விடுகிறார். இதன்பின், வங்கியின் மேலாளர் விவசாயிகளை தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க, பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெறுகிறார். இதனால் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசுகையில், அரசின் வேளாண்மை கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும். தனியார் மூலமாக கிடைக்க கூடாது. பிரதானமந்திரி கிரிஷிசின்சாய் திட்டத்தின் கிழ் 99திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். இத்திட்டங்கள் 2019ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் விவசாயிகளுக்கு அரசு சார்பில் இதுகுறித்த கையேடுகள் வழங்கவில்லை.பல ஆண்டுகளாக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்து வரும் விவசாயிகளுக்கு இதுவரை இலவச மின்சாரம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் உள்ள ஏரிகளை உடனடியாக புனரமைக்க வேண்டும். தற்போதுவரை தமிழகத்தில் உள்ள 1,400 ஏரிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இருப்பினும் பணிகள் இன்னும் துவங்காமல் கிடப்பில் உள்ளது. இதனை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீராதாரங்களையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.