திருப்பூர், செப்.28 –
திருப்பூர் மாநகரில் சொத்து வரியை கடுமையாக உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக முயற்சி மேற்கொண்டிருப்பதைக் கைவிட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

திருப்பூர் அவிநாசி சாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான தியாகி பழனிசாமி நிலையத்தில் வியாழனன்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், மேங்கோ பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தி (திமுக), எம்.ரவி, ஜி.காளியப்பன் (இந்தியகம்யூனிஸ்ட் கட்சி), ஆர்.கிருஷ்ணன் (இ.தே.காங்கிரஸ்), எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சு.சிவபாலன், மு.சம்பத் (மதிமுக), எஸ்.ரவிக்குமார், வீ.தனசேகரன் (தமாகா) உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், வணிக, தொழில் நிறுவன கட்டங்களை அளவீடு செய்து சொத்துவரியை கடுமையாக உயர்த்துவதற்கு மாநகராட்சி அலுவலர்கள் மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில், மாநில அரசின் எந்த அரசாணையும் இல்லாமல் சொத்து வரியைப் பலமடங்கு உயர்த்துவதற்கு இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். எனவே திருப்பூர் மாநகரின் எந்த பகுதியிலும் சொத்து வரியை உயர்த்தக்கூடாது. வரி உயர்வு முயற்சியை முழுமையாக கைவிட வேண்டும்.

மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிக அதிகளவில் உள்ள மாநகரமாகவும் திருப்பூர் இருக்கிறது. எனவே, சாக்கடைக் கழிவுநீர் தேங்காமல் சுத்தப்படுத்தவும், சுகாதார வசதியை மேம்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள நூற்றாண்டு காணும் அரசு மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவை பெரிச்சிபாளையம் தலைமை மருத்துவமனைக்கு மாற்றப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இம்முடிவை கைவிடுவதுடன், திருப்பூரின் வடக்குப் பகுதியில் புதிதாக அரசு மருத்துவமனையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

இதேபோல், ஏற்றுமதி தொழில் நகரமான திருப்பூரில் பிரதானமான சாலைகள் அனைத்தும் சீர்குலைந்து குண்டும், குழியுமாகக்காணப்படுகின்றன. இத்தகைய சாலைகளை முழுமையாகச் செப்பனிட வேண்டும். மேலும், அணைப்பாளையம் பகுதி மேம்பாலம், எஸ்ஆர்சி மில் பகுதி பாலம் மற்றும் பழைய பேருந்துநிலையம் மேம்பாலம், எம்ஜிஆர்சிலை அருகில் சுரங்கப் பாலம்ஆகிய பணிகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டு போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் நிதியமைச்சகம் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு வழங்கி வந்த டூட்டி டிராபேக் எனப்படும் ஊக்கத் தொகையை 7.6 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக கடுமையாக குறைத்துவிட்டது. மத்தியஅரசு இம்முடிவைக் கைவிட்டு, முந்தைய நிலை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர் போராட்டங்கள்:
மேலும், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பொது மக்களிடம் விளக்கிக்கூறும் வகையிலும் அக்டோபர் 5ஆம் தேதி காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு, அக்.6ஆம் தேதி பி.என்.ரோடு நெசவாளர் காலனி, 7ஆம் தேதி அனுப்பர்பாளையம் புதூர், 8ஆம் தேதி வெள்ளியங்காடு நால்ரோடு, 9ஆம் தேதி மாஸ்கோநகர், 10ஆம் தேதி குமார்நகர் வ.உ.சி.நகர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது. இதன் தொடர்ச்சியாக, அக்.25ஆம் தேதி வேலம்பாளையம் முதல் மண்டல அலுவலகம் முன்பும், நல்லூர் மூன்றாவது மண்டல அலுவலகம் முன்பும், 26ஆம் தேதி தொட்டிபாளையம் இரண்டாவது மண்டல அலுவலகம் முன்பாகவும் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும், நவம்பர் 8ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், சொத்துவரியை உயர்த்தும் முடிவை அரசு, மாநகராட்சி நிர்வாகம் கைவிடாவிட்டால் அடுத்தகட்டமாக 48 மணி நேர பந்த் போராட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையரிடம் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் சொத்துவரி உயர்வைக் கைவிட வலியுறுத்தி கடிதம் அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.