கோவை, செப்.28-
கோவை ராஜ வீதி ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனியன்று மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் கத்திபோடும் ஊர்வலம் காலை 5.30 மணிக்கு ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கி காலை 9 மணிக்கு கோயிலை அடைய உள்ளது. அதேபோல், ஆர்.ஜி.வீதி ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி புது செளண்டம்மன் கோயில் கத்திபோடும் ஊர்வலம் காலை 7.30 மணிக்கு சாய்பாபா காலனி, நெசவாளர் காலனி பகுதியில் தொடங்கி காலை 11 மணிக்கு ஆர்.ஜி. வீதி கோயிலை அடைய உள்ளது. இதையடுத்து மாநகரில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஆர்.எஸ்.புரம் ஊர்வலம் காலை 5.30 மணிக்கு ராமச்சந்திரா சாலையில் புறப்படும்போது சுக்ரவாரப்பேட்டையில் இருந்து பூ மார்க்கெட் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் காந்தி பார்க், டி.பி.ரோடு, கௌலி பிரென் ரோடுவழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம். இந்த ஊர்வலம் சுக்ரவாரப்பேட்டையை அடையும்போது பழைய மேம்பாலத்தில் இருந்து சுக்ரவாரப்பேட்டை வரக் கூடிய வாகனங்கள் மரக்கடை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பிடவுன்ஹால், வைசியாள் வீதி, சலிவன் வீதி வழியாக காந்தி பார்க் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். பேரூர், செல்வபுரத்தில் இருந்து செட்டி வீதி, ராஜ வீதி வரக் கூடிய அனைத்து வாகனங்களும் சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி சாலையில் வலது புறம் திரும்பி, உக்கடம் புறவழிச் சாலை வழியாக உக்கடம் வந்து, சுங்கம் புறவழிச் சாலையை அடைந்து மேற்கு கிளப் சாலை வழியாகச் செல்லலாம்.

உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கிவரக் கூடிய அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச் சாலை கிளாசிக் டவர் வந்து ரயில் நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். இரண்டாவது ஊர்வலம் மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலையை அடையும்போது என்.எஸ்.ஆர். சாலை, ஏஆர்சி சந்திப்பில் இருந்து வடகோவை நோக்கி வரக் கூடிய அனைத்து வாகனங்களும் ஏஆர்சி சந்திப்பிலிருந்து சிவானந்தா காலனி சென்று செல்லலாம். பூ மார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக சாலையில் இடதுபுறம் திரும்பி பாரதி பார்க் ரோடு, என்எஸ்ஆர்வழியாக மேட்டுப்பாளையம் ரோடு செல்லலாம்.

ஊர்வலம் ஆர்.ஜி. வீதியை அடையும்போது சுக்ரவாரப்பேட்டையிலிருந்து பூ மார்க்கெட் நோக்கிச் செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் சுக்ரவாரப்பேட்டை சந்திப்பில் இருந்து காந்தி பார்க், டி.பி.ரோடு, கௌலி பிரென் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். ஊர்வலம் விசிவி ரோட்டில் வரும்போது புரூக்பாண்டு சாலையில் இருந்து தேவாங்கர்பேட்டை ரோடு வழியாக வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறம் திரும்பாமல் நேராக புரூக்பாண்டு சாலையில் சென்று பழைய மேம்பாலம் வழியாகச் செல்ல வேண்டும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.