குன்னூர், செப். 28-
குன்னூரில் பயிற்சி பெற்று வந்த 259 இளம் ராணுவ வீரர்கள் பதவி பிரமாணம் உறுதியேற்றுக் கொண்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் மெட்ராஸ் ரெஜிமண்டல் மையத்தில் உள்ள பேரக்ஸில் கடந்த ஓராண்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டு வந்த 259 இளம் ராணுவ வீரர்கள் வியாழனன்று பதவி பிரமாணம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு முப்படை அதிகாரிகளின் பயிற்சி கல்லூரியின் தலைவர் லெப். ஜென அம்ரிக் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்பின் அவர் ராணுவ வீரர்களிடையே பேசுகையில், இந்த இளம் வீரர்கள் 46 வாரங்கள் கடுமையான பயிற்சி முடித்து இந்திய ராணுவத்திற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளனர்.

இவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் இன்றைய தினத்தில் எத்தனை உற்சாகத்தோடு எல்லை பகுதிகளுக்கு செல்கிறார்களோ, இதனை காண வந்த பெற்றோர்களும், உறவினர்களும் எத்தனை உற்சாகத்தோடு வழி அனுப்பி வைக்கிறார்களோ, அதே உற்சாகத்தோடு நாட்டுக்கு விசுவாசத்தோடு சேவையாற்றிட வேண்டும். மேலும், தன் உயிரை துட்சமாக கருதி இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும். உங்களது எதிர்காலம் நல்லமுறையில் அமைய எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என கூறினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் மற்றும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்களின் பேண்டு வாத்தியம், களரி, செண்டை மேளம் மற்றும் வீரர்களின் அணிவகுப்பு போன்றவை நடைபெற்றன.

Leave A Reply

%d bloggers like this: