தாராபுரம், செப்.28 –
தாராபுரம் அருகே வாகன சோதனையின்போது குடிபோதையில் இருந்த காவலர், மினிடோர் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் ஜின்னா மைதானம் ஜமால்புதுரை சேர்ந்தவர் உசேன் (32). இவர் மினி ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். வியாழனன்று தாராபுரத்திலிருந்து வெங்காய லோடு ஏற்றிக்கொண்டு தளவாய்பட்டிணம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

திருமலைபாளையம் பிரிவு அருகே சென்றபோது, அலங்கியம் காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர்மற்றும் காவலர் ரஞ்சித்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உசேன் வாகனத்தை சோதனைக்காக நிறுத்தியுள்ளார். இதையடுத்து, வாகனத்தின் ஆவணங்களை எடுப்பதற்காக உசேன் வண்டியில் அமர்ந்து தேடிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த காவலர் ரஞ்சித்குமார், வாகனத்திலேயே உட்கார்ந்திருக்கிறாயா எனக்கூறி கன்னத்தில் அறைந்து உடனே இறங்குமாறு மிரட்டியுள்ளார். பின்னர் ஓட்டுநர் உரிமம் உள்பட ஆவணங்களை சோதனை செய்தபோது அனைத்தும் சரியாக இருந்துள்ளது. இதையடுத்து உசேன் சீருடை அணியவில்லை எனக்கூறி ரூ.100 அபராதம் விதித்துள்ளார். இதற்கு உசேன், அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தி விடுவதாக கூற வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த காவலர் ரஞ்சித், உசேனை மீண்டும் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் பயந்துபோன உசேன் அபராதத்தை செலுத்தியுள்ளார். இதற்கிடையே, மினி ஆட்டோ ஓட்டுநரை காவலர் மிக மேசமாக தாக்குவதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உதவி ஆய்வாளரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பிரச்சினை ஏற்படுவதை உணர்ந்த உதவி ஆய்வாளரும், காவலர் ரஞ்சித்குமாரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் வேலுமணி, அலங்கியம் காவல்நிலையத்தினர் மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் காவலர் ரஞ்சித்தை தொடர்புகொண்டபோது அவர் தொலைப்பேசியை எடுக்கவில்லை.

இந்நிலையில் இரவு 3 மணிக்கு அலங்கியம் காவல் நிலையத்திற்கு சென்ற ரஞ்சித், இரவு நேர ரோந்து பணியை முடித்துவிட்டதாக கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் கேட்கையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே தெரிவித்தனர். அதேநேரம், தாராபுரம் பகுதியில் வாகன சோதனை என்ற பெயரில் காவல்துறையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.