திருப்பூர், செப்.28 –
திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவர் வியாழனன்று பணிக்கு வர காலதாமதம் செய்ததால், ஆவேசமடைந்த பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அரசு தலைமை மருத்துமனையில் தினமும் காலை சுமார் 6 மணி முதல் கைக்குழந்தைகளைச் சுமந்தபடி நீண்ட வரிசையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருக்கின்றனர்.

மருத்துவர்கள் காலதாமாக வருவதனால் அவர்கள் பரிசோதனை, சிகிச்சை பெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவேசமடைந்த பெண்கள் வியாழனன்று தங்கள் கைக்குழந்தைகளுடன் தாராபுரம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்கள் கூறும்போது, அண்மையில் பெய்து வரும் மழை மற்றும் பல்வேறு பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி வரும் நிலையில் டெங்கு, டைப்பாய்டு, மலேரிய போன்ற காய்ச்சல் பரவி குழந்தைகளை எளிதில் பாதிக்கிறது.

கூலி வேலை செய்து பிழைக்கும் மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கு போதுமான வசதியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையைத் தேடி வருகின்றனர். ஆனால், அரசு மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவர் பணிக்கு வர மிகவும் காலதாமதம் செய்கிறார். தினமும் காலை 7 மணிக்கு வர வேண்டிய மருத்துவர் 10 மணிக்கு மேல்தான் வருகிறார். அவ்வாறு வந்தாலும் 12 மணிக்கு கிளம்பி விடுகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை பாதிக்கப்படுவதுடன், கூலி உழைப்பாளிகள் வேலைக்குச் செல்வதும் பாதிக்கப்படுகிறது என்று வேதனையுடன் கூறினர். இப்போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்களை சமாதானப்படுத்தி மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: