திருப்பூர் செப்.28 –
திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெண் நுரைப் படலத்துக்கு சோப்பு நுரைதான் காரணம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் பேசியதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

திருப்பூர் கடந்த இருவாரங்களுக்கு முன் நொய்யலில் வெண் நுரைப் படலமாக சாயநீர் வெளியேற்றப்பட்டதாக கூறி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில்துறையின் ஒருபகுதியினர் குற்றம் சாட்டி வந்த நிலையில், இங்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் கருப்பணன், நொய்யல் ஆற்றில் பொங்கிய நுரைக்கு கோவை மாநகர மக்கள் பயன்படுத்தும் சோப்புகள் தான் காரணம் என விளக்கம் அளித்தார். இது பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் இப்பிரச்சனை எதிரொலித்தது. திருப்பூர் மாநகர் மற்றும் ஒட்டிய பகுதிகளில் நாளுக்கு நாள் டிடிஎஸ் அளவு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மழைபெய்கிறது. அங்குள்ள மக்களும் சோப்புகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் கோவையில் உள்ளவர்கள் சோப்புகளை பயன்படுத்துவதால் நொய்யல் நீர்வழித்தடத்தில் தங்கி அபரிமிதமாக நுரையாக வெளிப்பட்டதாக அமைச்சர் பொத்தாம் பொதுவாக தெரிவித்தார். இது அதிகாரிகளின் அலட்சியத்துக்கே வழிவகுக்கும். சாயநீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் வெளியேற்றப்படுகிறது.

ஆனால் அவற்றை தடுக்கவே, கட்டுப்படுத்தவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.  இந்நிலையில் அமைச்சரின் பேச்சைகண்டிக்கிறோம். மேலும் பொங்கியநுரை சோப்புகள் தான் என எவ்வித ஆய்வும் செய்யாமல் பதில் அளித்திருப்பதும் வேடிக்கையாக உள்ளது. சாயஆலை உரிமையாளர்களுக்கு ஆதர
வாக செயல்படும் போக்குதான் நிலவுகிறது. நிலத்தடி நீரை பாதுகாக்க திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சோப்புகளால் எப்படி நுரை ஏற்பட்டது என்பது பற்றிவிவசாயிகளுக்கு விளக்க வேண்டும் என்றனர். இதில் உரிய விளக்கம் அளிக்கமாவட்ட நிர்வாகத்துக்கு பொறுப்புஉள்ளது என, விவசாயிகள் பலரும்ஆட்சியர் உள்ளிட்டவர்களிடம் முறையிட்டு தங்கள் அதிருப்தியைவெளிப்படுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: