புதுதில்லி;
இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, ‘5.7 சதவிகிதம்’ என்று வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து 6-ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் டாலர் முதலீடுகளை திரும்ப எடுத்துக்கொண்டு ஓடுவதும், இறக்குமதி அதிகரிப்பு காரணமாக இந்திய சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் டாலர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.
நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.72 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் வெறும் 5.7 சதவிகிதம் என்ற அளவிற்கு, 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான இடத்திற்கு சென்றது. இது இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய பதற்றமே, அவர்கள் தங்களின் முதலீடுகளை அவசர அவசரமாக திரும்பப் பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.புதிய முதலீடுகள் வராத நிலையில், ஏற்கெனவே வந்த முதலீட்டையும் காப்பாற்றிக் கொள்வதற்காக சில வித்தைகளை செய்வதென மோடி – ஜெட்லி கூட்டணி இறங்கியுள்ளது. ஆனால், எதுவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதாக இல்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு சுமார் 50,000 கோடி ரூபாயை கூடுதலாகச் செலவிட முடிவு செய்துள்ளது; இந்தக் கூடுதல் செலவீட்டின் மூலம் பொருளாதாரச் சரிவைக் குறைக்க முடியும் என மோடி அரசு கணக்கு போட்டுள்ளது.
ஆனால் இந்தக் கூடுதல் செலவீட்டு திட்டத்தின் மூலம் இந்திய அரசுக்கு மேலும், அதிகளவிலான நிதிப்பற்றாக்குறைதானே ஏற்படும் என்று எண்ணும் முதலீட்டாளர்கள், இந்திய சந்தையில் செய்துள்ள முதலீட்டை திரும்ப எடுப்பதில்தான் அவசரம் காட்டுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், புதிய முதலீட்டு அளவுகளையும் குறைத்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையும், சகுனம் சரியில்லை என்பதையே முதலீட்டாளர்களுக்கு செய்தியாக கூறியுள்ளது.
50,000 கோடி ரூபாய் மட்டுமே நிதிப்பற்றாக்குறை பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜூன் காலாண்டிற்கு உள்ளேயே இந்திய இறக்குமதியின் அளவு 41.2 பில்லியன் டாலராக அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கி போட்டு உடைத்துள்ளது.
இப்படி அடுத்தடுத்து, நம்பிக்கையற்ற அறிவிப்புக்களே வருவதால், சுதாரித்துக் கொண்ட பன்னாட்டு முதலீட்டாளர்கள், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
ஜிஎஸ்டி வசூல் ரூ. 5000 கோடி குறைந்தது
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. விற்பனை வரி, நுழைவு வரி, சுங்க வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக ஒரு முனை வரியான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதாக மோடி அரசு கூறியது.முதல் மாதத்திலேயே 95,000 கோடி வரி வசூல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களில் 74 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 38 லட்சம் தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தங்களின் ஜூலை மாதத்திய ஜிஎஸ்டி வரியை ஜிஎஸ்டிஎன் இணைய தளத்தின் வாயிலாக செலுத்தினர்.
முதல் (ஜூலை) மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலானது, உத்தேசமாக 95000 கோடி ரூபாயாக இருந்தது. இது மோடி அரசை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சுமார் 14,402 கோடி ரூபாய் மத்திய வரியாகவும்  மாநில வரியாக சுமார் 21,067 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த வரி  சுமார் 47,377 கோடி ரூபாயும், சொகுசு பொருட்களின் மீது வசூலிக்கப்படும் வரி வருவாய் சுமார் 7,823 கோடி ரூபாயும் இருந்தது.
ஆனால், ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 90,669 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது. இதுவும் மோடி அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையொட்டி, ஜிஎஸ்டிஎன் ஆணையமானது, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை உள்ளீட்டு வரிப்பயன்பாடாக எடுத்துக்கொண்ட 162 தொழில் நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி சமாளித்தல் வேலையில் இறங்கியுள்ளது.
பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை மட்டும் இரண்டு மடங்கானது
நாட்டின் வளர்ச்சியும், பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருந்தாலும், இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. அது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.இந்தியாவில் 2016-ஆம் ஆண்டில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 339 பேர்களாக இருந்தது. அதுவே இந்தாண்டு 617 பேர்களாக அதிகரித்துள்ளது. சீன நாட்டைச் சேர்ந்த ஹூரன் என்ற நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுளள்து.இந்திய பணக்காரர்கள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஹூரன் நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது 6-ஆவது ஆண்டாக, இந்திய பெரும்பணக்காரர்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.
1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே இந்த வருடத்திற்கான ஆய்வில் ஹூரன் சேர்த்துள்ளது. இதில் எப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 302 பேர் புதிதாக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். அதாவது, கடந்த ஓராண்டில் புதிதாக 302 இந்தியர்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டியுள்ளது.
இந்திய பெரும்பணக்காரர்களில் எப்போதும் போல, முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். நடப்பாண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் 58 சதவிகிதம் வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 900 கோடியாக ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தாண்டு பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் பார்மா துறையில் இருந்து 79 பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர்.பெரும்பணக்காரர்கள் 617 பேர்களில், 182 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 117 பேர் தில்லியையும், 51 பேர் பெங்களூருவையும் சேர்ந்தவர்களாவர். சென்னையைச் சேர்ந்த 15 பேரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
2017-ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டை விட சுமார் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மோடி ஜெட்லி மீது யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு!
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ளார்.“இந்தியாவில் வறுமை அதன் கடைசி நிலைக்கு வந்துவிட்டது என்கிறார், பிரதமர் மோடி; அந்தப் பொய்யைக் காப்பாற்றவே, அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஓவர் டைம் வேலை பார்க்கிறார்; இந்த உண்மையை இப்போதாவது பேசாவிட்டால் தனது தேசியக் கடமையிலிருந்து ஜெட்லி தவறியவராகி விடுவார்” என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
“ஜெட்லி பதவிக்கு வந்தபோது, கச்சா எண்ணெய் விலை மிக மந்தமாக இருந்தது; ஆனால், இந்தியப் பொருளாதாரத்தை வலுவாக கட்டமைக்கக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பை ஜெட்லி தவறவிட்டு விட்டார்; லட்சக்கணக்கான கோடி ரூபாயை வீணடித்து விட்டார்; இந்தியப் பொருளாதாரம் இப்போது தவறான நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போய்விட்டது; அதற்கு பணமதிப்பிழப்பு ஒரு முக்கிய காரணம்; மோடியின் இந்த தவறான திட்டத்துக்கு அருண் ஜெட்லி முழு உடந்தையாக இருந்திருக்கிறார்; ஜிஎஸ்டி வரி மோசமாக உருவாக்கப்பட்டு, மிகத் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது” என்று சின்ஹா விளாசித் தள்ளியுள்ளார்.
“இந்த உண்மைகளைச் சொல்வதில் தனக்கு எந்த அச்சமும் இல்லை; காரணம், பாஜக-வில் உள்ள பெரும்பான்மையோரின் மன நிலையும் இதுவே” என்றும் சின்ஹா ஒரு போடு போட்டுள்ளார்.
வளர்ச்சி 5.7 அல்ல; 3.7-க்கும் குறைவு
யஷ்வந்த் சின்ஹாவின் கருத்தை வரவேற்றுள்ள, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அஞ்சாமல் யஷ்வந்த் சின்ஹா உண்மையைக் கூறியிருக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார்.இனிமேலாவது பொருளாதாரம் மூழ்கிவிட்டது என்ற உண்மையை அவர்கள் (மோடி அன்கோ) ஏற்றுக்கொள்வார்களா? என்று கேட்டுள்ள சிதம்பரம், 5.7 சதவிகித வளர்ச்சி விகிதம் இருப்பதாக தற்போது சொல்லப்பட்டாலும், உண்மையில் வளர்ச்சி விகிதம் 3.7 சதவிகிதம் அல்லது அதையும்விட குறைவுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘தவறான ஆலோசகர்கள்’ பிஎம்எஸ் சாடல்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததற்கு தவறான ஆலோசகர்களும் தவறான வழிகாட்டுதலால் ஆன சீர்த்திருத்தங்களுமே காரணம் என்று ஆர்எஸ்எஸ்-ஸின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங் சாடியுள்ளது.
“தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை, எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்புதல், தொழிலாளர்கள் மீதான செலவைக் குறைத்தல், தொழிலாளர் குறைப்பு தொழில் நுட்பங்கள், அரசு முதலீட்டைத் திரும்பப் பெறுதல், ஆட்கள் தேர்வுக்கு தடை, பதவிகளை நீக்குதல், ஆகிய தொழிலாளர் விரோதப் போக்குகள் சட்டங்களில் காணப்படுகின்றன.
அந்நிய நேரடி முதலீடு ஏற்கெனவே நம் சிறிய மற்றும் மிகச்சிறிய தொழில்களை பாதித்து விட்டது. சில்லரை விற்பனைத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ள பிஎம்எஸ், தொழிலாளர்களை நம்பியுள்ள தொழிற்துறைகள் புத்துயிர் பெற உடனடியாக ஊக்க நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்; மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 நாட்கள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்; தற்போதைய சீர்த்திருத்தங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
உலக அளவில் 40-ஆவது இடம்
இதனிடையே, பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில், உலகளவில் இந்தியா ஓரிடம் கீழிறங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், மொத்தமுள்ள 137 பொருளாதார நாடுகளில், சென்ற ஆண்டு இந்தியா 39-ஆவது நாடாக இருந்தது. இந்த முறை ஓரிடம் பின்தங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.