எஸ்.பி.ஜனநாதன், இயக்குநர்
‘தாய்’ மக்ஸிம் கார்க்கியால் எழுதப்பட்டது. எழுதப் படிக்கத் தெரியாத ஒரு தாய் தொழிற்சாலையில் வேலை செய்யும் தன் மகனை போராட்டத்துக்கு தயார்ப்படுத்துவதும், அந்த போதனைகளின் வழியாக அவன் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதும் தான் அந்த நாவலின் சாராம்சம்.அந்தத் தொழிற்சாலையின் புகை போக்கி ஒரு குண்டாந்தடியைப் போல இருந்தது என்றுதான் அந்த நாவல் ஆரம்பிக்கும். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தொழிலாளர்களை, கசடுகள் போல அவர்கள் வெளியே வந்தார்கள் எனவும், ஊர்ந்து போகும் கரப்பான் பூச்சிகளைப் போல அவர்கள் குடிசைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள் என எழுதியிருப்பார் கார்க்கி. அந்த நாவலில் பாவலின் தாய் பெலகேயா குடிகாரக் கணவனால் தாக்கப்படுகிறாள்.
அதனால் அவள் முகத்தில் மாறாத தழும்பு ஒன்று உருவாகிவிடுகிறது. அந்தத் தழும்பு பெலகேயாவின் முகத்தில் ஒரு நிரந்தர பய உணர்ச்சியை உருவாக்கிவிடுகிறது என்று விவரிக்கிறார் கார்க்கி. இந்த நாவலைப்பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. உலகமே போற்றும் இந்த நாவலை எழுதி முடித்ததும் லெனினிடம் கொடுக்கிறார் கார்க்கி. அதை படித்துவிட்டு நாவலில் கதாபாத்திரங்கள், அவர்களின் வாழ்க்கைப்பார்வை என பல திருத்தங்களைச் சொல்கிறார் லெனின். மீண்டும் நாவலைத் திருத்தி எழுதுகிறார்.
மறுபடியும் லெனினிடம் படிக்கக் கொடுக்கிறார். இப்படிப் பல திருத்தங்களுக்குப் பின்பு எழுதப்பட்ட நாவல்தான் நமக்கு வாசிக்கக் கிடைப்பது. தத்துவப் பின்புலம் கொண்ட ஒரு படைப்பாளனால்தான் தாய் போன்ற ஒரு நாவலை எழுத முடியும். தத்துவத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட ஒருவரால் தான் அதில் திருத்தங்கள் சொல்ல முடியும்.
நான் இயக்கிய இயற்கை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கும் போது, சாண்டா கிளாஸ் முகமூடி செய்ய, தாய் நாவலின் அந்த அம்மா முகத்தில் இருக்கும் தழும்பையும் அதன் உளவியல் பாதிப்பையும்தான் கலை இயக்குநருக்கு மாதிரிக் குறிப்பாகத் தந்தேன். ஷாமின் காதலை கதாநாயகி ஏற்றுக்கொண்ட பிறகு வரும் பாடலில் சந்தோஷமான சாண்டா கிளாஸ் முகமூடி. அவள் பழைய காதலனுடன் திரும்ப சேர்ந்த பின் ஷாம் சோகத்துடன் வெளியேறும் போது துயரம் மிகுந்த சாண்டா கிளாஸ் முகமூடி என இரண்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகமூடிகளைப் பயன்படுத்தினேன். அதற்குத் தாய் நாவலில் வரும் கார்க்கியின் சித்தரிப்புதான் எனக்குப் பயன்பட்டது.இந்திய அளவில் சொல்ல வேண்டுமானால் மஹபூப் கானிடமிருந்து தொடங்கவேண்டும். அவருடைய மதர் இந்தியா (1957) முக்கியமான கம்யூனிசச் சிந்தனைகளைத் தாங்கி உருவாக்கப்பட்ட படம். சுதந்திரத்துக்குப் பின்பாக இந்திய நிலவுடைமைச் சமூகத்தில் நிலவிய வர்க்க முரண்பாடுகளை மதர் இந்தியா படத்தில் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. பேராண்மை படத்தில் நான் கம்யூனிசச் சின்னமான அரிவாள் சுத்தியை காண்பித்திருப்பேன். அதற்கு நிறையபேர் ஆச்சரியமாகக் கேட்டார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறார் மஹபூப் கான். மஹபூப் கானின் தயாரிப்பு நிறுவனமான மஹபூப் புரடக் ஷன்ஸின் சின்னமே அரிவாள் சுத்திதான். தயாரிப்பு நிறுவனத்தை 1946இல் தொடங்கிய மஹபூப் கான் தனது நிறுவனத்தின் சின்னமாக அரிவாள் சுத்தியைத் தேர்ந்தெடுத்தது ஒரு அபூர்வமான, மிக முக்கியமான முயற்சி தான்.ஏனெனில் சுதந்திரத்துக்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில் அதிகமும் வேட்டையாடப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்கள் தான்.அந்தச் சிக்கலான காலகட்டத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு முக்கியமான முன்னெடுப்புதான் என்பது என் எண்ணம்.
பேராண்மை படத்தில் நான் கம்யூனிஸ்ட் சின்னமான அரிவாள் சுத்தியைப் படமாக்கியிருக்கிறேன். படத்தில் உபரி மதிப்பு பற்றி ஜெயம் ரவி பாடம் எடுக்கும் காட்சி இருக்கிறது. உழைப்பு எப்படி உபரி மதிப்பாக மாறுகிறது என்பதும் அந்த உபரி மதிப்பு உழைத்தவனிடம் சேராமல் வேறு யாருக்குப் போகிறது என்பதும் மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை. மேலும் பொதுவுடைமை அரசியலை விடச் சிறந்தது வேறெதுவுமில்லை என்ற வசனத்தையும் அந்தப் படத்தில் வைத்திருக்கிறேன். எனவே அந்தக் காட்சியும் அதன் வசனங்களும் காலம் கடந்து நிற்கும் என்பது என் அபிப்ராயம். ஒரு இயக்குநராக நான் மிகவும் பெருமைப்பட்ட தருணம் அது.
கம்யூனிசப் படங்கள் பற்றிய எனது பார்வை முற்றிலும் வேறானது. ஒரு திரைப்படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னங்கள் அரிவாள் சுத்தி அல்லது சிவப்புக் கொடி காட்டப்பட்டால் அது கம்யூனிஸ்ட் படமாகிவிடாது. ஆனால் மார்க்சியத்தின் சாரத்தை உள்வாங்கி ஒரு திரைப்படத்தில் வெளிப்படுத்த முடியுமானால், அந்தப் படம் எதைப் பற்றியதாக வேண்டுமானால் இருக்கலாம். அதுதான் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் படமாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன்.

Leave a Reply

You must be logged in to post a comment.