சென்னை;
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒரு தரப்பும், இல்லை என்று ஒருதரப்புமாக அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் இரண்டாகப் பிரிந்துள்ளனர். அவரவர்க்கு தெரிந்த ரகசியம் என்ற பெயரில் அள்ளிவிடும் தகவல்கள் தமிழகத்தில் பெரும் கேலிக்கூத்தாக மாறிவிட்டது.அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியதெல்லாம் பொய்; அவரை பார்ப்பதற்கே எங்களை அனுமதிக்கவில்லை; மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை; ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது; அவரை ஏதோ செய்து சசிகலா குடும்பத்தினர்தான் கொலை செய்து விட்டார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இது பரபரப்பை கிளப்பி வந்த நிலையில், “ஜெயலலிதாவை அனைத்து அமைச்சர்களுமே பார்த்தோம்” என்று மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். நானும்தான் ஜெயலலிதாவை பார்த்தேன் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் ஆஜரானார். அந்த வரிசையில் ஏ.கே. போஸ் எம்எல்ஏ-வும் இணைந்துள்ளார்.
15 மீட்டர் தூரத்தில் நின்று பார்த்தேன்
“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிச் சான்றிதழுடன் மருத்துவமனைக்கு ஆசி பெறச் சென்றபோது ஜெயலலிதா என்னை பார்த்து கையசைத்து வாழ்த்தினார்” என்று ஏ.கே. போஸ் கூறியுள்ளார்.
அப்பல்லோ சென்று ஜெயலலிதாவை பார்க்க முயன்றபோது, “நீங்கள் வெற்றி பெற்றதை தொலைக்காட்சி மூலம் ஜெயலலிதா பார்த்தார்; மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்; இன்னும் 5 நாட்களில் அவர் கார்டன் வந்து விடுவார் அதன்பின், அவரைச் சந்தித்து வாழ்த்து பெறலாம்; இப்போது பார்க்க வேண்டாம்” என்று ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் கூறியதாகவும், ஆனால், பின்னர், 2.30 மணியளவில் பாதுகாவலர்களின் உதவியுடன் 15 மீட்டர் தூரத்தில் நின்று ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், படுத்த நிலையிலேயே ஜெயலலிதா கைகளை அசைத்து தன்னை வாழ்த்தியதாகவும் ஏ.கே. போஸ் தெரிவித்துள்ளார்.அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து தேவையற்ற கருத்துக்களை சொல்லி வருகிறார்; ஜெயலலிதாவை இதுபோன்று கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் ஈடுபடக்கூடாது என்றும் ஏ.கே. போஸ் கண்டித்திருக்கிறார்.
ஆர்.பி. உதயகுமார் ட்விஸ்ட்
மறுபுறத்தில் ஏ.கே. போஸூக்கு நெருக்கமானவரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், மழுப்பான பதில் ஒன்றை அளித்துள்ளார். அப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதால், விசாரணை நிறைவடையும் வரையிலும் எந்த கருத்தையும் நான் கூற முடியாது; அமைச்சர்கள் சொல்வது, அவர்களுடைய தனிப்பட்ட கருத்து; அதற்கான விளக்கத்தை என்னிடம் கேட்டால், விசாரணை ஆணையத்தில்தான் அதைத் தெரிவிப்பேன் என்று ட்விஸ்ட் வைத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.