கடந்த வாரம் வியாழக்கிழமை பாலியல் துன்புறுத்தல் புகாருக்குப் பிறகு, பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது தீவிரமான பிரச்சினையாக இருப்பதாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் சொல்கிறார்கள். மாணவர்கள் ஏன் தாங்கள் பாதுகாப்பற்று இருப்பதாக உணர்கிறார்கள்?
வியாழன் அன்று நடந்த இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டமானது. அது குறித்து நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். சில நேரங்களில் பிரச்சினைகள் உள்ளன என்றாலும் சில பிரச்சனைகள் உருவாக்கப்படுவையாக இருக்கின்றன. இந்தப் பிரச்சனை என்பது உருவாக்கப்பட்டதாகும். இந்த பிரச்சனை வெளியாட்களால் உருவாக்கப்பட்டது என்றே நான் கருதுகிறேன். ஆரம்பத்தில் நடைபெற்ற சம்பவத்தை விட, அந்தப் பிரச்சனை இப்போது எடுத்திருக்கும் வடிவம் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.
பொய்யை உண்மையைப் போல தோற்றுவிக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர், அப்பாவியான, முதிர்ச்சியடையாத மனது கொண்டவர்கள் இதை உண்மையென்றே எடுத்துக் கொள்கின்றனர். பல்கலைக்கழகம் என்பது அரசியல் செய்வதற்கான இடம் இல்லை. இளைஞர்கள் எப்போதும் உண்மை, நியாயம் ஆகியவற்றின் பக்கமே நிற்பார்கள். இங்கே உள்ள மாணவர்கள் உண்மையைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு விஷயத்தின் பின் நின்றனர். ஆனால் அது மிகப்பெரிய பொய்.
தங்களுடைய சுயநலனுக்காக உள்நோக்கங்கள் கொண்ட சிலர் இந்த சம்பவத்தைத் தூண்டிவிட்டனர். தங்களுக்கென்று குறை அல்லது புகார் இருந்தால், மாணவர்கள் அவற்றை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவித்து ஏதாவது செய்யச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் உயர்கல்வி நிறுவனங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு அவர்களிடம் உள்ளது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மட்டும் இதில் தனியாக இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இவ்வாறு தொந்தரவுக்குள்ளாகி வருகின்றன.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் தங்களது பரிவைக் காட்ட வேண்டியவர்கள், அதை விடுத்து அவரை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியது மிகவும் துரதிர்ஷ்டமானது. பாதிக்கப்பட்டவர் எங்களிடம் பேசினார், அவர் அளித்த புகார் குறித்து நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் அவர் திருப்தி அடைந்தார். உண்மையில், நடைபெற்ற சம்பவத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட அரசியல் பற்றி அவர் வருத்தமடைந்தார்.
நான் என்னால் முடிந்த அளவில் சிறப்பாகச் செயல்படுகிறேன், பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. தெரு விளக்குகள் அமைப்பதற்கும், மேலும் அதிக எண்ணிக்கையில் காவலாளர்களை நியமிக்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.  
தங்களுடைய சுயநலத்திற்காக யார் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்கியதாக நீங்கள் சொல்கிறீர்கள்?
முதலில் அன்று நடந்தது ஒன்றும் பாலியல் வன்கொடுமை நிகழ்வு அல்ல. அது பெண்களைக் கேலி செய்த சம்பவமாகும். அவர்கள் தேசத்தின் நலனுக்கு உறுதுணையாக இல்லாதவர்கள், தங்களின் சுயநலத்திற்காக மட்டுமே வேலை செய்பவர்கள். அவர்கள் நாட்டைப் பற்றியோ அல்லது அதன் நிறுவனங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், சுயநலமே பிரதானமானது. பிரதமர் இங்கே வரவிருக்கிறார். அதனால்தான் இவையனைத்தும் நடத்தப்படுவதாக நான் உணர்கிறேன். இந்த கலவரத்தைத் தூண்டுவதற்காகவே அந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது என்பதாகவே நான் உணர்கிறேன்.
அப்பாவி மாணவர்களுக்கு மத்தியில் சில குற்றவாளிகள், அடையாளம் தெரியாத மக்கள் நின்று கொண்டிருந்தனர், எனவே இதை யார் ஆரம்பித்தது என்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் வெளியே வந்து அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள், ஆனால் அந்தப் போராட்டக்காரர்கள் உட்கார்ந்திருந்த வாசலுக்கு அருகில் உள்ள கடைத்தெருவிற்குச் சென்று நான் அவர்களைச் சந்தித்துப் பேச வேண்டுமா? மகிளா மகா வித்யாலயாவிற்குச் சென்று அவர்களைச் சந்திக்க நான் ஒத்துக் கொண்டேன். ஆனால் இந்த குற்றவாளிகள் பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி எறிய ஆரம்பித்தனர். அவ்வாறான நிலையில் நான் எப்படி அங்கே சென்றிருக்க முடியும்?
ஆனால் நீங்கள் சொல்லுவது போல வளாகத்திற்குள் போதுமான பாதுகாப்பு இருப்பதாகக் கொண்டால், அந்த மாணவி எவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்? அந்த மாணவியின் அடையாளம் ஏன் வெளிப்படுத்தப்பட்டது?
இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அத்தகைய சம்பவம் இப்போது நிகழ்ந்திருக்கிறது. வளாகத்திற்குள் 10,000 மாணவிகள் இருக்கின்றனர். விடுதிக்குள்ளாக அவர்களின் பாதுகாப்பை எங்களால் உறுதி செய்ய முடியும். குறிப்பிட நேரங்களுக்குப் பிறகு வெளியே செல்ல தடை போடப்பட்டிருக்கின்றது. ஆனால் வெளியே சாலையில் நடந்து செல்லும் போது அத்தகைய தடைகள் இல்லை என்பதால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. நாங்கள் அவற்றை இங்கே எவ்வாறு எதிர்கொண்டு கையாளுகிறோம் என்பதுதான் முக்கியமானது. இந்த வளாகம் மிகப் பெரியது என்பதால், எங்கேயும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஒவ்வொரு மாணவருக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் காவலாளரை நியமிக்க முடியாது.
மாணவர்களின் குறைகளை பல்கலைக்கழகம் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இவ்வாறான குற்றச்சாட்டு ஒரு சில மாணவர்களால் மட்டுமே பரப்பப்படுகின்றது. 10,000 க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கே வளாகத்தில் உள்ளனர், ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே இதுபோன்ற புகார்களைக் கூறுகிறார்கள் மாணவர்களுக்காக நாங்கள் அனைத்தையும் சிறந்த முறையில் செய்து வருகிறோம். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்றை இந்த சம்பவம் பற்றி விசாரிக்க நாங்கள் அமைத்துள்ளோம்.
இந்த வளாகத்தில் பெண்கள் பயமுறுத்தப்பட்டிருக்கிறார்கள், பாதுகாப்பற்று இருக்கிறார்கள் என்பவை வதந்திகள் மட்டுமே. வியாழக்கிழமை சம்பவம் நடந்த இடமானது, பெண்கள் மிகக் குறைந்த ஆடையணிந்து வந்து விளையாடுவதற்கான அரங்கம் இருக்கும் இடமாகும். அவர்களுக்கு ஏதாவது பயம் இருக்கிறதா என்பதை அவர்களிடமே கேளுங்கள். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வளாகம் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்று சொல்வது சரியல்ல. நான் துணைவேந்தராகப் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து இதுபோன்ற சம்பவம் எதுவும் நடந்தது இல்லை. இந்த வளாகத்தில் எங்கேனும் பாதுகாப்பற்று இருப்பதாக எந்தவொரு மாணவியும், மாணவரும் உணர்ந்ததில்லை. AISA மற்றும் SFI போன்ற மாணவர் அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே அவ்வாறு நினைப்பவர்களாக இருக்கிறார்கள். இருந்த போதிலும் நாங்கள் மானவர்களின் பாதுகாப்புக்காக நிறைய செய்து வருகிறோம். தன்னார்வத் தொண்டர்களாக இருக்க விரும்புகின்ற மூத்த மாணவர்களையும் ஆலோசனைக் குழுவில் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பு முறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா, குறிப்பாக மாணவிகளுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தது உண்மைதானே?
குற்றவாளிகளுக்கு எதிராகவே தடியடி நடத்தப்பட்டது, மாணவிகளுக்கு எதிராக அல்ல. இது போன்ற சூழ்நிலைகளில் இவ்வாறான நடவடிக்கை பயன்படுத்தப்பட வேண்டும். நள்ளிரவில் போராட்டக்காரர்களை வெளியேற்றவே காவல்துறையினர் தடியடி நடத்தினர். பெண்கள் மீது தடியடி நடத்தப்பட்டதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளை விட்டு ஏன் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர், அதுவும் தசரா விடுமுறைக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே?  
விடுதிகளை விட்டு வெளியேறுமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதுவும் பரப்பப்பட்ட  பல வதந்திகளில் ஒன்றுதான். நிலவிய சூழ்நிலை காரணமாக விடுமுறை முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இப்போது நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருக்கிறது. யாராவது மீண்டும் இதனைத் தூண்டி விட்டால், நிச்சயமாக, நாங்கள் விடுதிகளையும், பல்கலைக்கழக வளாகத்தையும் மூடிவிடுவோம்.
பாதுகாப்பற்றிருக்கும் வளாகத்தைப் பற்றி மட்டுமல்லாது, விடுதிகளிலும் பல்கலைக்கழகத்திலும் பாலினப் பாகுபாடு இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் கூறுகிறார்கள். மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஏன் வித்தியாசமான விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன?
இது ஒரு குற்றச்சாட்டு … இது போன்றதொரு பெரிய பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன, இருந்தாலும் எந்தவொரு பாலினப் பாகுபாடும் இங்கே கிடையாது. விடுதிகளிலும் பாலினப் பாகுபாடு கிடையாது. உதாரணமாக, மாணவிகளுக்கு அவர்களது விடுதிகளில் வைஃபை வசதி இருக்கும்போது, ​​இணைய நூலகத்தை அவர்கள் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? எந்தப் பல்கலைக்கழகத்தில் 24 மணிநேரமும் நூலகம் செயல்படுகிறது?
ஆனால் மாணவர்களின் விடுதிகளில் எப்பொழுதும் வைஃபை வசதி இருந்து வருவதாகவும் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் தங்களின் விடுதிகளில் வைஃபை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மகிளா மகா வித்யாலயா மாணவிகள் கூறுகிறார்களே?
அங்கே சமீபத்தில்தான் நிறுவப்பட்டது, ஆனால் நாங்கள் சொல்வது என்னவென்றால், மாணவிகளுக்குத் தேவையானவற்றைச் செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அவர்களின் பாதுகாப்புக்காக வேலை செய்து செய்கிறோம் என்பதுதான்.
விடுதிகளுக்குத் திரும்புவதற்கு மாணவர்கள், மாணவிகளுக்கு ஏன் வெவ்வேறு விதிகள் உள்ளன?
இல்லை, பெண்களும் இரவில் தாமதமாக வருவார்கள். இங்கே யாரும் அவ்வாறு தாமதமாக வருவது பற்றி குறை கூறுவதில்லை. வகுப்புகள், தனிப்பயிற்சி வகுப்புகள் அல்லது அதுபோன்ற வேறு தேவைகளுக்காக மாணவிகள் தாமதமாக வர வேண்டி இருந்தால், அவர்கள் அதை விண்ணப்பமாக எழுதித் தர வேண்டும். நாங்கள் அதனை உடனடியாக அனுமதிக்கிறோம். இந்த நடைமுறை குறித்து ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.
இது மிகவும் பொருத்தமான, பாதுகாப்பான வளாகம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய மகள்களுக்கு ஏதாவது நடந்து விட்டால், யார் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியும்? பெண்கள் விடுதிக்குத் திரும்ப வேண்டிய நேரம் இரவு 8 மணி என்றும் மாணவர்களுக்கு இரவு 10 மணி என்றும் இருப்பது இருவருக்கும் பாதுகாப்பானது. எம்.எம்.வி, திரிவேணி பெண்கள் விடுதிகளுக்கு இரவு 8 மணி என்றிருக்கும் போது, மற்றொரு மாணவியர் விடுதியில் மாலை 6 மணி என்றிருக்கிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொரு பெண்ணின் கோரிக்கைக்கும் செவிசாய்க்க ஆரம்பித்தால், பல்கலைக்கழகத்தை நடத்த முடியாது. இந்த விதிகள் அனைத்தும் அவர்களின் பாதுகாப்பிற்காக, குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பிற்காகத்தான் போடப்பட்டு இருக்கிறது.
ஆனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் அசைவ உணவு, தங்களது விடுதிகளில் தரப்படுவதில்லை என்று மாணவிகள் கூறுகிறார்களே?
ஒரு நாளுக்கு 80 ரூபாய்க்கு என்று உணவு வழங்கப்படுவதால், எங்களால் அசைவ உணவு வழங்க முடியாது. நாங்கள் ஒரு நாளில் பெண்களுக்கு நான்கு முறை நல்ல உணவைக் கொடுக்கிறோம், இதில் காலை வேளையில் கொடுக்கப்படும் அசைவ உணவான ஆம்லெட் அடங்கும். மாணவிகள் அசைவ உணவு சாப்பிட எந்த தடையும் இல்லை. இங்கே தங்கியிருக்கும் மாணவிகளே என்ன உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். தினசரி கட்டணம் வெறுமனே 80 ரூபாயாக இருக்கும்போது, எப்படி அசைவ உணவு வகைகளை நாங்கள் வழங்க முடியும்?
 
http://indianexpress.com/article/india/bhu-lathicharge-if-we-listen-to-every-girl-we-cant-run-university-says-bhu-v-c-girish-chandra-tripathi-uttar-pradesh-yogi-adityanath-4861285/
 
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத் துணைவேந்தராக திரிபாதி பதவியேற்றுக் கொண்ட போது வெளியான பத்திரிக்கைச் செய்திகளில் இருந்து
மத்திய பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் தலைவராகவும், அலகாபாத் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பிலிருந்த அலகாபாத் பல்கலைக்கழக பொருளாதாரதத் துறைப் பேராசிரியரான கிரிஷ்சந்திர திரிபாதி நவம்பர் 24, 2014 அன்று பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியிலமர்த்தப்பட்ட போது, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த மாணவர் போராட்டங்கள் குறித்து ‘அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசுவதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் அனைவருக்கும் உடன்பாடான தீர்வினை எட்ட முடியும்’ என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் செய்தி வெளியானது.
நவம்பர் 25, 2014 அன்று அலகாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ”நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவன் என்று கூறிக் கொள்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் நம்பிக்கையின் மையமாகத் திகழ்கிறது. அரசின் எந்தவித உதவியும் இல்லாமல் மகநாமா மாளவியா இந்தப் பல்கலைக்கழகத்தினை நிறுவியது நமது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பல்கலைக்கழகமானது எந்தவொரு கட்சியையோ அல்லது அரசாங்கத்தையோ சார்ந்தது அல்ல. இளைஞர்களது அறிவு மற்றும் கருத்துக்கள் செறிவூட்டப்படும் இடமாக அது திகழ வேண்டும். 140க்கும் மேற்பட்ட துறைகள், நான்கு நிறுவனங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் ஆகியவை அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பல மையங்களில் தங்கள் துறை சார்ந்து சிறந்த பணியினைச் செய்து வருபவர்கள் பலரையும் இனம் கண்டு முன்னிறுத்த வேண்டும். நமது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, வெளி நாடுகளிலிருந்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கவருகின்ற வகையிலே பல்கலைக்கழகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேலும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து முழுமையாகத் தனக்குத் தெரியாது என்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அங்கே நிலவுகின்ற அமைதியின்மை குறித்து கருத்து எதனையும் தெரிவிக்க துணைவேந்தர் மறுத்து விட்டார். அவரது ஆர்எஸ்எஸ் பின்புலம் பற்றிக் கேட்ட போது, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தனக்கு தயக்கம் இல்லை எனவும், 2011ஆம் ஆண்டில் தில்லிக்கு வெளியிலுள்ள ஒரு இடத்திலிருந்து மத்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒரு ஆர்எஸ்எஸ் மனிதர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அனைவரும் ஆச்சரியமடைந்ததாகவும், ஆனாலும் அவர்களே தன்னை இரு முறை தேர்வு செய்ததாகவும் கூறினார். அலகாபாத் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிற பொருளாதாரத் துறைப் பேராசியரான இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எஞ்சியுள்ள சில நடைமுறைகளை முடித்து விட்டு அதற்குப் பின் துணைவேந்தர் பதவியினை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதப்படிருந்தது.
தனக்கு முன்னால் துணைவேந்தராக இருந்த லால்ஜி சிங் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு தற்காலிகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் ராஜிவ் சங்காலிடமிருந்து 2014, நவம்பர் 27 அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பினை கிரிஷ் சந்திர திரிபாதி ஏற்றுக் கொண்டார். பதவியேற்பதற்கு முன்பாக காளிபைரவர் கோவில், சங்கட் மோச்சன் கோவில், மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று ருத்ராபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு பல்கலைக்கழக நுழைவாயிலில் உள்ள பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகுபல்கலைக்கழக சமஸ்கிருதத்துறையின் மூத்த பேராசிரியர் உபேந்திர திரிபாதி தலைமையில் மந்திரங்கள் ஓதப்பட வளாகத்திற்குள் இருந்த விஸ்வநாத் கோவிலில் பூஜைகள் செய்து வழிபட்டார்.
பதவியேற்ற பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, கடந்த வாரத்தில் மாணவர்கள் மீது பல்கலைக்கழகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலில் மாணவர்களிடம் கலந்தலோசிக்கப் போவதாகவும், மாணவர்களின் நலனை முன்னிறுத்திச் செயல்படப் போவதாகவும் கூறினார். மாணவப் பேரவையினைத் திரும்ப அமைத்திடுவதற்கான கோரிக்கையினை முன்னிறுத்தி வன்முறை நிகழ்வுகள் வளாகத்திற்குள் நடந்திருந்த சூழலில், மாணவர்களுக்கான பேரவை தேவையா என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
-தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

Leave a Reply

You must be logged in to post a comment.