சேலம், செப்.26-
வெள்ளி கொலுசு பட்டறைகளில், கொத்தடிமைகளாக உள்ள பெண்களை மீட்க அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் உரிமைக்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் வெள்ளி ஆபரணங்களின் அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பொருட்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதற்காக சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப் பட்டறைகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியில் சுமார் எண்பது சதவீதம் பெண் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொலுசு பட்டறைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்துவதோடு, வேலை உத்தரவாதம் அளிக்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டாண்டு காலமாக கொத்தடிமைகளாக உள்ள தொழிலாளர்களை மீட்டு, அவர்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று சேலத்தில் தோழி கூட்டமைப்பு சார்பில் பெண்கள் உரிமைக்கான பேரணி நடைபெற்றது.

சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை சிஐடியு சேலம் மாவட்டச் செயலாளர் டி,உதயக்குமார் துவக்கி வைத்தார், இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கங்களை எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்த பேரணியை தொடர்ந்து, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளி கொலுசு பட்டறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, பாது
காப்பு உறுதி செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வெள்ளித் தொழிலாளர்களுக்கு தாட்கோ மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.