உடுமலை, செப். 26-
முற்போக்கு கவிஞரான உடுமலை நாராயணகவியை, சாதி வட்டத்தில் கொண்டு செல்ல முயற்சிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடுமலை நாராணகவியின் 119 ஆவது பிறந்த நாள் விழா திங்களன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உடுமலை குட்டை திடலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சில் பங்கேற்றோர் பேசுகையில், உடுமலையின் அடையாளமாகவும், தமிழ் திரையுலகில் சாதி, மதங்களை மறுத்தும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் தன்னுடைய பாடல்கள் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் உடுமலை நாராயணகவி.

மேலும், அவர் இறக்கும்போது அவருடைய இறுதி நிகழ்ச்சியில் எவ்வித சாதி, மத சடங்குகளும் செய்யக்கூடாது என்று வாழ்ந்த நாராயண கவிஞரின் பிறந்த நாளில், அவர் பெயரில் குரு பூஜை விழா நடத்தப்போவதாக அறிவித்து அந்த அழைப்பிதழில் அமைச்சர் பெயரை இணைத்து உள்ளது கவிஞரின் கொள்கைக்கு எதிரானது. இதுபோன்ற விழாக்கள் நடைபெறுவதை அரசு மணிமண்டபத்தில் அனுமதிக்கக் கூடாது. மேலும், அவரது அனைத்துபடைப்புக்களும் அரசு உடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது பிறந்தநாளுக்கு அரசு சார்பில் இன்று வரை மரியாதை செலுத்துவது இல்லை. ஆகவே, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் மறைந்த நாராயண கவிஞரின் மகன் முத்துசாமி, தமிநாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சிவசக்தி ராமசாமி, மக்கள் பாடகன் துரையரசன் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் உடுமலை சு. தண்டபாணி, கொழுமம் ஆதி, அருட்செல்வன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.