கோவை, செப்.26-
முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உள்பட்ட சிங்காநல்லூர், ஆவாரம்பாளையம், பீளமேடு, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, வரதராஜபுரம், தண்ணீர் மேடு உள்ளிட்ட 19 வார்டுகளுக்கு 24 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தற்போது மழை பெய்து அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ள போதிலும் குடிநீர் வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். லாரிகளில் கூட குடிநீர் விநியோகம் செய்யவதில்லை. எனவே, குடிநீர் பிரச்சனைக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தோர் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு திமுக சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

You must be logged in to post a comment.